June

June

“இந்த அரசாங்கம் பௌத்தமத குருமார்களை காடையர்கள் போன்று வளர்த்தது, ஊக்குவித்தது.”- தம்மானந்த தேரர் விசனம் !

நீதி இல்லாத நாட்டில் பயங்கரவாதம் உருவாகின்றது என பௌத்த கற்கைநெறிகளிற்கான வல்பொல ராகுல நிர்வாகத்தின் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் பௌத்தமத குருமார்களை காடையர்கள் போன்று வளர்த்தது, ஊக்குவித்தது, பல்வேறு இடங்களில் அவர்களை பயன்படுத்தியது. அதுமட்டுமன்றி பொறுப்புக்கூறல் என்பது அரசமைப்பிலோ அல்லது நீதித்துறையிலோ உள்வாங்கப்படவில்லை சேர்க்கப்படவில்லை.

நல்லிணக்கம் என்பது செயலமர்வுகளை நடத்துவது அறிக்கைகளை வெளியிடுவது டொலர்களை பெற்றுக்கொள்வதில் இல்லை. ஆனால் இம்முறை அரசியலமைப்பு ஆபத்தான விதத்தில் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. இவர்கள் முஸ்லிம்களை ஆபத்தானவர்களாக சித்தரித்தனர். சிங்கள பௌத்தவர்களை தனியான குழுவாகவும் ஏனைய  சமூகத்தினரை எதிரிகளாகவும் காண்பித்தனர்.

இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த கவசத்தை தனது நலனிற்காக அதிகளவிற்கு பயன்படுத்தியது.

அதேபோன்று முன்னைய அரசாங்கங்களும் சிங்கள பௌத்த கொள்கையை பயன்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் கிளிநொச்சியை சேர்ந்த கலையரசி எனும் தமிழ் மாணவி !

இலங்கையின் 19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, வடக்கு மாகாணம் கிளிநொச்சியில் இருந்து கலையரசி எனும் தமிழ் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு ஆயுத மோதல் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து, இந்த மாணவி மேற்படி அணிக்குத் தெரிவாகியுள்ளமை பல்வேறு தரப்புகளின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.

கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் கலையரசிக்கு 16 வயதாகிறது. சிறிய வயதிலிருந்தே – தான் கிரிக்கெட் விளையாடி வருதாக அவர் தெரிவிக்கின்றார்.

கலையரசியின் தந்தை சதாசிவம் – கூலி வேலை செய்பவர், அம்மா சசிகலா – இல்லத்தரசி. ஒரு தம்பியும், தங்கை ஒருவரும் கலையரசியின் உடன் பிறந்தவர்கள்.

“வயல் வெளிகளில் அண்ணாமார் கிரிக்கெட் விளையாடும் போது, எனது சின்ன வயதில் அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடுவேன். எனது அப்பாதான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்” என்கிறார் கலையரசி.

அவரின் தந்தை தாம் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்கிறார். “தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பிப் பார்ப்பேன். எனது பிள்ளைகளையும் கிரிக்கெட்டில் சேர்த்து விட வேண்டுமென்று மனதுக்குள் ஓர் ஆசை இருந்தது. அது இப்போது மகள் மூலம் நிறைவேறியிருக்கிறது. தேசிய மகளிர் அணியில் எனது மகள் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்” என, தனது ஆசையை சதாசிவம் பகிர்ந்து கொண்டார்.

பாடசாலைகளுக்கிடையிலும், கிளிநொச்சி மாவட்டம், வடக்கு மாகாணம் போன்ற மட்டங்களிலும் விளையாடியுள்ள கலையரசி 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டப் போட்டிகளிகளிலும் பங்குபற்றியுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்கு வீரர்களை இணைத்துக் கொள்வதற்கான தேர்வு – கடந்த மார்ச் மாதம் தம்புள்ளயில் நடைபெற்ற போது, அதில் கலையரசியும் கலந்து கொண்டார். இந்த நிலையில், குறித்த அணிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என, மே இறுதியில் அறிவிக்கப்பட்டதாக, கலையரசியின் பயிற்சியாளர் ஜீவரட்ணம் பிரியதர்ஷன் கூறினார்.

“கலையரசி 07ஆம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து அவருக்கு பயிற்சியளித்து வருகின்றேன். மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் நடந்த போட்டிகள் அனைத்திலும் அவர் பிரகாசித்துள்ளார். கலையரசியின் கடுமையான அர்ப்பணிப்புத் தான் அவர் இந்த நிலையை எட்டுக்குவதற்குக் காரணமாக அமைந்துள்ளது” எனவும் பிரியதர்ஷன் தெரிவிக்கின்றார்.

“இத்தனைக்கும் கடின பந்து கிரிக்கெட் விளையாடுவதற்குரிய போதுமான உபகரணங்கள் எவையும் கலையரசியிடம் சொந்தமாக இல்லை. அவரிடமிருந்த ´பேட்´ கூட நல்லதில்லை. என்னிடமிருந்த சில உபகரணங்களை அவருக்கு வழங்கினேன். மாவட்ட பயிற்சியாளர் ஒரு பேட்டை வழங்கினார். அவருக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் கிடைக்குமாயின் பேருதவியாக இருக்கும்”, எனவும் பயிற்சியாளர் பிரியதர்ஷன் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையிலும் கிரிக்கெட் அனைத்துத் துறைகளிலும் கலையரசி சிறந்து விளங்குவதாகவும் அவரின் பயிற்சியாளர் கூறினார்.

கலையரசியின் தந்தை, கூலி வேலையில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வருகின்றார். அதற்குள்தான் தனது மகளை கிரிக்கெட் துறையில் உயர்ந்த நிலையில் வைத்துப் பார்ப்பதற்கான செலவுகளையும் அவர் ஈடுசெய்ய வேண்டியுள்ளது.

“கிரிக்கெட் பயிற்சி மற்றும் போட்டிகளுக்காக அந்த ஊருக்கு வாருங்கள், இந்த ஊருக்கு வாருங்கள் என்று கலையரசியை அழைப்பார்கள். செலவுகளை யோசித்துக் கொண்டிருக்க முடியாது; அழைத்துக்கொண்டு செல்வேன். எனது வருமானத்தில் அதிகமானதை அவருக்காகவே செலவிடுகிறேன்” என, தனது நிலையை  தந்தை சதாசிவம் பகிர்ந்து கொண்டார்.

19 வயதுக்குட்பட்டவர்களைக் கொண்ட தேசிய கிரிக்கெட் பெண்கள் அணிக்காக, இம்முறை 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் தமிழர்கள். கலையரசியுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிஸ்ரிகா செல்வராசா எனும் தமிழ் மாணவியும் தெரிவாகியுள்ளார்.

தகவல் – பி.பி.சி

 

வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை – இங்கிலாந்தில் புதிய திட்டம் அமல் !

இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உட்சபட்ச திறன் வெளிப்படும் என்பதால் 100 சதவீதம் ஊதியம் அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

3 நாட்கள் விடுமுறை திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள். இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.

தந்தையை தவறுதலாக சுட்டுக்கொன்ற 2 வயது மகன் – துப்பாக்கி கலாச்சாரத்தால் திணறும் அமெரிக்கா !

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புளோரிடாவில் வாழ்ந்து வந்த ரெஜி மாப்ரி – மேரி அயலா தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர்களின் 2 வயது மகன் தனது பெற்றோரின் ‘லோட்’ செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அவனது பெற்றோரும் துப்பாக்கியை கவனிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அந்த சிறுவன் துப்பாக்கியை வைத்து தந்தையை தவறுதலாக சுட்டு உள்ளான். அப்போது துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாய்ந்து தந்தை ரெஜி மாப்ரி தரையில் விழுந்தார்.

விஷயம் அறிந்து போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே ரெஜி மாப்ரி உயிரிழந்தார். முதலில் அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக முதலில் போலீசார் கருதினர். ஆனால் விசாரணையில் அந்த தம்பதியினரின் 2 வயது சிறுவன் தவறுதலாக தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அதை தொடர்ந்தும் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைத்துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க கூறி சட்டம் இயற்றுபவர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி உரிமை சட்டம் கடுமையாக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக துப்பாக்கி சீர்திருத்தங்கள் மாகாண செனட்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு மாகாண கவர்னர் கேந்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்தார். அதன்படி நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கவச உடை போன்றவற்றை பொதுமக்கள் வாங்கவும் இந்த சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் – இலங்கை அமைச்சர்கள் அறிவிப்பு !

எதிர்வரும் ஒரு வருடத்திற்கு தமக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் பணியாற்ற அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அமைச்சர்கள் ஒரு வருட காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாதிருக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்ததாக அவர் கூறுகின்றார்.
”இலங்கையின் நாளொன்றின் வருமானம் 4 பில்லியனமாக காணப்படுகின்றது, நாளொன்றின் செலவீனமாக 9.6 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.
இதனால், நாடு நாளாந்தம் பாரியளவிலான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. இதனை கருத்திற் கொண்டு, எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு அனைத்து அமைச்சர்களும் சம்பளத்தை பெற்றுக்கொள்ளாதிருக்கும் வகையில், பிரதமரினால் அமைச்சரவை பத்திரமொன்று நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்தனர்” என பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

எங்களை நம்பி பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ளுங்கள் – வெளிநாட்டவர்களிடம் மனுஷ நாணயக்கார கோரிக்கை !

வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நிலவும் நெருக்கடியின் போது நாட்டிற்கு ஆதரவளிக்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி அக்கறையுடன் பயன்படுத்தப்படுவது குறித்தும், அந்த நிதியை இலக்காகக் கொண்ட திட்டங்கள் குறித்தும் பல கேள்விகள் எழுப்பப்படுவதாக அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

பணம் அனுப்புதல் தொடர்பில் பொறுப்புக்கூறல் பேணப்பட வேண்டுமெனவும், இது தொடர்பில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் இலவசக் கல்வி முறை மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தில் கல்வி கற்ற வெளிநாடுகளிலுள்ள தனிநபர்கள், இதுபோன்ற கடினமான காலங்களில் நாட்டிற்குச் சேவை செய்வதற்கான பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டில் கிடைக்கும் சீமெந்தினை கைவிட்டுவிட்டு இறக்குதி சீமெந்துக்கு வரிசையில் நிற்கும் இலங்கையர்கள் !

சீமெந்து விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பினால் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரித்துள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் பலர் வேலையிழந்துள்ளதால், அவர்கள் பயிர்ச்செய்கையின் பக்கம் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர்கள் பலருடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

நிர்மாணத்துறை தற்போது மந்தநிலையில் உள்ளதாகவும், கட்டுமானம் தொடர்பான பொருட்களின் விலைகள் பாரியளவில் உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தற்போது எமது சங்கம் அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்திவிட்டது. அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்துமாறு சாதாரண மக்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சீமெந்தை பொதுமக்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிமெந்து விலையையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இலங்கையில் உள்நாட்டில் கிடைக்கும் சீமெந்து ஏராளமாக உள்ளது. இறக்குமதி செய்யும் சீமெந்து மூலம் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதே விலை உள்ளூர் உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு நுகர்வோர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உள்ளூர் சிமெந்தை நாடினால், அது நியாயமான விலைக்கு எளிதில் கிடைக்கும்.” என்றார்.

சீமெந்து தொடர்பில் மட்டுமன்றி இலங்கையின் பல விடயங்களில் இந்த வரிசைக்கலாச்சாரம் நீடிப்பதற்கு காரணம் இலங்கை மக்களின் வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் மட்டுமே காரணம். எல்லா காலங்களிலும் கூட உள்நாட்டு உற்பத்திகளை நாடத்தேவையில்லை. இந்த இக்கட்டான சூழலில் கூட உள்நாட்டு உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மனோநிலையில் நம்மவர்கள் இல்லை. எங்களிடத்தில் இத்தனை தவறுகளை வைத்துக்கொண்டு தான் நாட்டில் பொருளாதார தட்டுப்பாடு என இலகுவாக கூறிவிட்டு கடந்து விடுகிறோம்.

நாங்கள் மாறாதவரை எதுவுமே மாறப்போவதில்லை.. !

2048ல் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக்குவேன் – ஆறாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்ற ரணில் உறுதி !

இலங்கைக்கு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என பிரதமர் தெரிவித்தார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

100வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே இலக்கு எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இப்போது நம் நாடு செயல்படாத கணினி போல உள்ளதாகவும் எனவே முதலில் இந்த கணினியை ரீசெட் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வாரங்கள் நாட்டின் நெருக்கடியான காலமாக இருக்கும் எனவும் எனவே அதற்கு முகங்கொடுக்க நாட்டு மக்கள் தயாராகவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளா்ர.

இதன்காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவில் பொதுமக்கள், தனித்து செயற்படாது ஏனையவர்கள் தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன் தேவையற்ற போக்குவரத்துகளை கட்டுபடுத்தல் உட்பட்ட விடயங்களில் பொதுமக்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

1993ஆம் ஆண்டு முதல் தடவையாக பிரதமராக பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஆறாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்றுள்ளதுடன் இலங்கை அரசியலின் காத்திரமான பல பதவிகளையும் வகித்தவர். கடந்த நல்லாட்சி அரசாங்கம் அமைய காரணமாக ரணில் இருந்தவர் என்பதுடன் நல்லாட்சி அரசில் பிரதமராக தெரிவாகியிருந்தார். நாடு இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளும் – பொருளாதார நெருக்கடியம் திடீரென ஏற்பட்டதில்லை. இன்று இந்த பொருளாதார நெருக்கடி கோட்டாபாய ராஜபக்சவின் தலைமேல் விழுந்துள்ள போதும் இந்த பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்க கால நிலையற்ற அரசியல் தன்மையும் – தூரநோக்கற்ற செயல்திட்டங்களும் கூட காரணம் தான். கையில் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்டுவிட்டு இன்று மீண்டும் மக்களை ஏமாற்றும் அதே மாய அரசியலை ரணில் மேற்கொள்கிறார். வெறும் கடன்களால் மட்டுமே நாட்டை முன்னேற்றிவிடலாம் என்ற மனோநிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியலும் – பொருளாதார மீட்பும் நகர்வது இலங்கையை மீண்டும் ஒரு அபத்த நிலைக்குள்ளேயே தள்ளிவிடப்போகிறது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு நற்செய்தி – தவறவிடாதீர்கள் மாணவர்களே !

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட மட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்களை மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களிலோ அல்லது www.dome.lk என்ற இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.

“விபச்சார விடுதிகளில் அமைச்சர்கள்.” – அம்பலப்படுத்திய சரத் பொன்சேகா

“ரணில் பிரதமராக நானே காரணம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

“பிரதமர் பதவியை ரணில் ஏற்றுக்கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி என்னை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். பெரும்பாலான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளித்தால் மட்டுமே நான் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று ஜனாதிபதியிடம் கூறினேன். எனவே, அவர் பிரதமராக வருவதற்கு வழிவகுத்த பெருமையை ரணில் விக்ரமசிங்க எனக்கு வழங்க வேண்டும்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் உள்ள 50வீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்பவர்கள். அதனால் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்ற முடியாது. தொலைநோக்குப் பார்வை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 வீதமானோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிலர் ஹெரோயின் போதைப் பொருளை உட்கொண்டு இரவு விடுதிகளில் விபச்சாரிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர். எனவே தற்போதைய அமைச்சரவையால் தேசத்தைக் காப்பாற்ற முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.