02

02

இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் மலிங்கா !

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய அமைச்சரவையில் வரலாற்றில் முதன்முறையாக 2 முஸ்லீம் அமைச்சர்கள்!

அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் திகதி நடந்து முடிந்த பொது தேர்தலில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளும் தாராளவாத கட்சியை வீழ்த்தி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது. தலைநகர் கான்பெர்ராவில் உள்ள அரசு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் புதிய மந்திரிகள் 30 பேருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான மந்திரிசபையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 30 பேரை கொண்ட மந்திரி சபையில் 13 பேர் பெண்கள் ஆவர். அவுஸ்திரேலியா வரலாற்றில் மந்திரி சபையில் பெண்கள் அதிக அளவில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆட்சியில் 7 பெண்கள் மட்டுமே மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் வரலாற்றில் முதல் முறையாக 2 முஸ்லிம்களும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு கூரைகள் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது – நாமல் விசனம் !

பாடசாலை மாணவர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்து பரீட்சை எழுதிய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றும் இட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

நாட்டின் பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன என்றும் ஆனால் முழுமையான கூரை இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு தேசமாக நமது முன்னுரிமைகளை மறு மதிப்பீடு செய்து, நம் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும்.

கல்வி மட்டுமல்ல, அரசியல் மற்றும் சமுக சீர்திருத்தமும் நமக்குத் தேவை எனவும் பதிவிட்டுள்ளார்.

 

சர்வதேச நாணய நிதியம் ஆபத்தானது.இலங்கையை விற்க நேரிடும் என எச்சரிக்கிறது ஜே.வி.பி !

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, நாட்டை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று, மீண்டெழுந்த நாடுகள் உலகில் இல்லை.

1998 இல் இருந்து ஆர்ஜன்டீனா 9 தடவைகள் ஐ.எம்.எப்பிடம் கடன் பெற்றுள்ளது. இந்த 9 தடவைகளும் அந்நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று இலங்கை போன்ற சிறிய நாடுகளால் ஒருபோதும் மேலே வரமுடியாது.

கிறீஸ் எம்மை விட பல மடங்கு பெரிய நாடாகும். 13 வருடங்கள் ஐ.எம்.எப்பிற்கு சென்று, கடந்த வருடம் தான் அந்த நாட்டில் சிறியதொரு முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால், இந்தக் காலப்பகுதியில் நாட்டின் மின்சாரக் கட்டமைப்பு, நீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், துறைமுகங்கள் என அனைத்தையும் கிறீஸ் விற்பனை செய்தது.
இதேபோன்று தான் இலங்கையிலும் ஏற்படும்.

இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இன்னும் இருந்தால் தனிநபர் கடன் தொகை இன்னமும் உயரும். கிறீஸ் நாட்டைப் போன்று, நாட்டின் ஏனைய சொத்துக்களையும் விற்பனை செய்யும் நிலைமை ஏற்படும்.

தனிநபர் வருமானத்தை விட தனிநபர் கடன்தொகை இன்று அதிகரித்துள்ளது. கோட்டா- ரணில்- ஹரின் போன்றோரை வைத்து நாட்டில் எதையும் செய்ய முடியாது. இவர்களால் மக்களை மீட்டெடுக்க முடியாது‘’ எனத் தெரிவித்தார்.

சிறுபோகத்திற்கான யூரியா உரம் பெறுவதற்கு இலங்கைக்கு கரம் கொடுக்கிறது உலக வங்கி!

எதிர்வரும் சிறு போகத்திற்கு யூரியா உரத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள உலக வங்கி அலுவலகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சரான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உட்பட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டனர்.

இம்முறை சிறு போக நெற்செய்கைக்குத் தேவையான இரசாயன உரங்களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது உலக வங்கியின் பிரதிநிதிகள் உரிய நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அரிசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியினால் வழங்கப்படும் ஆதரவை பாராட்டுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நெல் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களை வழங்குவதற்கு உலக வங்கி போன்ற ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் போசாக்கு குறைபாடு !

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகரான வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

முன்னெடுக்கப்பட்ட ஆய்வுக்கு அமைய 53 குழந்தைகளில் பதினொரு குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடுடன் இருப்பதாகவும், நான்கு குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 நிலைமைக்குப் பின்னரும், தற்போதைய பொருளாதார நெருக்கடியாலும் குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.

பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தங்களால் இயன்றவரை ஆரோக்கியமான உணவை வழங்குமாறும், அத்துடன் இலைக் காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை வழங்குமாறும் அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

அரசுக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு பொலிஸார் கோரிக்கை!

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரையான பாதைகளுக்குள் நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் செயற்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95ஆவது பிரிவின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

பொறுப்பற்ற யாழ் பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பொறுப்பற்ற உரை!!!

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள்துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை இலங்கையின் இன்றைய பொருளாதார நிலை பற்றிய உரையில் மிகத் தவறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “பிரித்தானியா எங்கள் நாட்டைச் சுரண்டவில்லை” என்றும் “தங்களது நாட்டில் உள்ள முதலீட்டைக் கொண்டு வந்தனர்” என்றும் உண்மைக்குப் புறம்பாக பொது மேடையில் பேசியுள்ளார். பெருந்தோட்டச் செய்கை குடியான பயிர்ச்செய்கை என இரு பெரும் பொருளாதாரங்களை எங்களுக்கு விட்டுச் சென்றனர் என்றும் பிரச்சினையில் இருந்த குடியானவர் பயிர்ச் செய்கைக்கும் பெரிய குளங்களைக் கட்டியும் திருத்தியும் சென்றதாகக் குறிப்பிடுகின்றார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இரு முறை 1996 முதல் 2003 வரை பணியாற்றியவர். இருந்தாலும் பேராசிரியர் சண்முகலிங்கள் காலம் வரை நிலவிய அசாதாரண நிலைகாரணமாக துணைவேந்தர்கள் சில மாதங்களே நீடித்தால் 2011 வரையான உத்தியோகபூர்வமாற்ற அதிகாரம் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளையிடமே இருந்தது.

1974 முதல் கல்வியின் மகுடமாக சிறந்து விளங்கிய யாழ் பல்கலைக்கழகம் பொன் பாலசுந்தரம் பிள்ளையின் காலத்தில் தான் அதன் கீழ்நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. இதன் வெளிக்கொணரும் வகையில் “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம் அல்ல பள்ளிக்கூடம்” என்ற தலைப்பில் தேசம்நெற் ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகம் பற்றி தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து “யாழ் பல்கலைக்கழகம் ஒரு பார்வை” என்ற தலைப்பில் ஒரு நூல் வெளியிடப்பட்டது.

பொறுப்பான மனிதர்கள் பொறுப்பான இடங்களில் அமர்த்தப்பட வேண்டும். பொறுப்பற்ற மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்த்தப்படுவது சீரழிவுக்கே இட்டுச்செல்லும். ஒரு பேராசிரியர் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எவ்வித அடிப்படையும் இல்லாமல் எழுந்தமானமாக உரையாற்றினால் அரசியல் வாதிகளிடம் எதனை எதிர்பார்க்க முடியும். இந்தியாவையும் இலங்கையையும் கைப்பற்றி அதிகாரத்திற்கு உட்படுத்தியது ஈஸ்ற் இந்திய கொம்பனி என்ற முற்றிலும் லாபநோக்கத்தோடு செயற்பட்ட தனியார் நிறுவனம். அவர்கள் மூலதனத்தை பிரித்தானியாவில் இருந்து கொண்டுவந்து இந்தியாவையும் இலங்கையையும் அபிவிருத்தி செய்ய வரவில்லை. கொள்ளையடிக்கவே வந்தனர். இந்தியாவை விட்டுச் செல்லும் போது இந்தியாவில் இருந்து 45 ரில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுச் சென்றதாக 2021இல் பிரித்தானியாவின் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள கிளாஸ்கோவில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மிகக் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை ஒரு புவியியல் துறை பேராசிரியர். இவர் சொல்கின்றார் குடிசனப் பயிர்ச்செய்கையை வலுப்படுத்த பிரித்தானிய ராஜ்யம் குளங்களைக் கட்டியும் திருத்தியும் கொடுத்தது என்று. இலங்கையில் கட்டிய குளங்கள் குடிசனப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்ய இலங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளைக்கு இது புரியாவிட்டால் காலம்சென்ற முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கிரட் தட்சர் இலங்கைப் பாராளுமன்றத்தில் இலங்கையின் குளங்கள் பற்றி 1979இல் ஆற்றிய உரையில் 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் நீர்ப்பாசனத்திட்டம் ஐரோப்பாவை விடச் சிறந்ததாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பொறுப்பற்ற பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை எப்போதும் அறிவுமட்டத்தில் பலவீனமான தனக்கு அடங்கிப் போகக்கூடியவர்களையும் தனக்கு சலாம் போடக்கூடியவர்களையும் பொறுப்பான பதவிகளில் நியமித்தார். இவருக்கு பணிந்து போபவர்களுக்கு முற்றிலும் சுதந்திரம் வழங்கப்பட்டது. அதனாலேயே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் இவருடைய காலத்தில் மிக வீழ்ச்சிகண்டது. பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்தது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் இச்சைகளுக்கு இணங்காத மாணவிகளுக்கு குறைந்த பெறுபேறுகள் வழங்கப்பட்டது. விசனம் கொண்ட மாணவர்கள் பழிவாங்கப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டனர். ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டால் “உனக்கு வரம்பு கட்டுவது” பற்றி ஆராய்ச்சி செய்வது தான் சரியாக இருக்கும் என்று திட்டியும் அனுப்பியதாக லண்டனில் இவரிடம் கற்ற ஒரு முன்னாள் யாழ் பல்கலை மாணவன் மிக மனவருத்தத்தோடு தெரிவித்தார்.

பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளையின் காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகம் 2000மாவது இடத்தில் இருந்த போது யாழ் பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் 10,000மாவது இடத்தில் இருந்தது. இன்று வடமாகாணம் கல்வியில் மிகக் கீழ்நிலையில் உள்ளமைக்கு முக்கிய காரணம் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்திலும் விழுமியத்திலும் ஏற்பட்ட வீழ்ச்சியே. வடமாகாண பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் தயாரிப்புகளே.
பேரசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தான் பொறுப்பான பதவியில் இருக்கும் போது எவ்வித பொறுப்புமற்று நடந்துவிட்டு இப்போது நாட்டை முன்னேற்றுவது எப்படி, கல்வியை முன்னேற்றுவது எப்படி என்று மேடைகளில் மிகப் பொறுப்பாக தன்னைக் காண்பிக்கின்றார். அதைக்கூட அவரால் சரிவரச் செய்ய முடியவில்லை. ஆனாலும் இவரை லண்டன் வரை அழைத்துக் கூட்டம் போட்ட கனவான்களும் உண்டு. பொறுப்பற்ற மனிதர்களை முன்னுதாரணமாக்கி அவர்களை முன்னிலைப்படுத்துபவர்களும் எதிர்கால சந்ததியினருக்கு அநியாயமே இழைக்கின்றனர். தமிழ் சமூகத்தின் விழுமியங்களை மேலும் கொச்சைப்படுத்துகின்றனர். தன்னை பேச அழைத்தவர்கள் முட்டாள்களாக இருக்க வேண்டும் என்று மதிப்பிட்ட பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை மற்றையவர்களும் முட்டாள்கள் என்று கணித்துவிட்டார் போலும்.

ஆனால் தற்போதைய துணை வேந்தர் பேராசிரியர் எஸ் சற்குணராஜாவின் வரவைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. தனது பதவியின் பொறுப்புணர்ந்து கருத்துக்களை முன்வைக்கின்றார். Vision தான் முதல் எங்களுடைய (strength) பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, அழிவில்லாத மொழி எங்களுக்குஇருக்கு. இன்றைக்கு எங்களுக்கு முழெறடநனபந நிறைய வேணும்” என்கிறார். முரண்பட வேண்டிய இடத்தில் முரண்படவும் துணைவேந்தர் தயங்கவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்று முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகச்சாடி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை. “எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தையும் கொட்டியுள்ளார். தான் பொறுப்பான ஒரு பதவியில் இருந்து எதனைச் செய்ய வேண்டுமோ அதனைச் செய்கின்றார். எதனைச் சொல்ல வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார். யாழ் பல்கலைக்கழகம் மீண்டும் தனது முன்னைய சிறப்பை எட்டும் என்ற நம்பிக்கை தற்போது துளிர்விட்டுள்ளது.