03

03

பாடசாலை மாணவி மீது வன்புணர்வு – இராணுவ வீரர் கைது !

அனுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்குள் 15 வயது மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ வீரரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இராணுவ வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக திரப்பனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை நடத்திய காவல்துறையினர் சந்தேக நபரான இராணுவ வீரரை கைது செய்துள்ளனர்.

பாடசாலை நேரம் முடிந்த பின்னர், இந்த சம்பவம் நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காடுகளை உருவாக்குமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரிசாட் மேன்முறையீடு !

வில்பத்து, கல்லாறு பிரதேசத்தில் காடழிக்கப்பட்ட பகுதிகளை மீளக் காடுகளாக மாற்றுமாறு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.

தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வில்பத்து கல்லாறு சரணாலயத்தில் காடழிப்பை மேற்கொண்டதற்காக மீண்டும் மரங்களை நடுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

உக்ரைனுக்கு ஆயுத உதவி – ஆனால் உள்நாட்டு துப்பாக்கி கலாச்சாரம் பற்றி பைடன் கவலை !

அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் 24ம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதியில்  தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இது அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.
முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்கலாம். அதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும். பாதுகாப்பு சட்டங்களை வலுப்படுத்த வேண்டும், துப்பாக்கி உற்பத்தியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல.  நமது குழந்தைகளை, குடும்பத்தினரை, சமூகத்தினரை பாதுகாப்பதற்காகத்தான். பள்ளிகளுக்கு, தேவாலயங்களுக்கு, கடைகளுக்கு செல்வதற்கான நமது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகத்தான்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரம் பைடன் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவினுடைய காலாதிகாலமான ரஷ்ய எதிர்ப்பு  கொள்ளைக்கு மேலும் வலுச்சேர்க்கும் முகமாக உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆயுத வசதிகளை செய்து வருவதுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை அமெரிக்கா வழங்குவது அந்த நாட்டினுடைய போலியான அமைதிவிரும்பும் விம்பத்தையே காட்டுகிறது.
அமெரிக்கா வெளி நாடுகளில்  எல்லா விதமான அராஜாகங்களையும் அரங்கேற்றிக்கொண்டு தன் நாட்டில் மட்டும் அமைதியை விரும்புகின்றது.

காணாமல் போன சிறுமி மீட்பு – 42 வயது நபர் கைது !

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை இன்று (03) கொக்கட்டிச்சோலையில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்று மறைந்திருந்தார்.

இதனையடுத்து சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்த நிலையில் தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு சம்பவ தினமான இன்று அதிகாலை வந்த நிலையில் பொலிசார் குறித்த சிறுமியை மீட்டதுடன் அவரை அழைத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

உச்சத்தை தொடும் பொருளாதார நெருக்கடி – கொழும்பில் வீணடிக்கப்படும் 350 மெட்ரிக் தொன் உணவு !

இன்னும் மூன்று மாதங்களில் கொழும்பு நகரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

உணவு கையிருப்பு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ள அவர், கொழும்பு மாநகர சபை விரைவில் நகருக்குள் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்படுவதோடு,  பயிர்களை வளர்ப்பதற்கான விவசாயத் திட்டத்தைத் தொடங்க கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொழும்பில் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுவதாகவும் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து பசில்ராஜபக்ஷ விடுதலை!

அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு உத்தரவு !

கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்டம் அமைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.

மாகாண விவசாய அமைச்சின் தலையீட்டுடன் திட்டத்தை ஒருங்கிணைக்குமாறு விவசாய மாகாண அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் போதனாசிரியர்களுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வரவிருக்கும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு அறிவூட்டல், சாகுபடி வேலைத்திட்டத்தை உருவாக்கவும் விவசாய பயிற்றுனர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

“எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை பற்றி பேசுகிறோம். அந்த சூழ்நிலையை சமாளிக்க, குறுகிய கால பயிர் சாகுபடியை விரைவில் தொடங்குவது அவசியம். இதை அனைவரும் தங்கள் பொறுப்பாக கருத வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டால், விவசாயிகளுக்கு வழிகாட்டத் தவறியதற்கு விவசாய ஆலோசகர்களே பொறுப்பேற்க வேண்டும்.

“அரசுக்கும் விவசாயிக்கும் இடையே உள்ள உறவை விவசாய ஆலோசகர்கள் புரிந்துகொண்டு, ஏற்படும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க உழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதமளவில் பாரிய உணவுக்கட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்சார்பு பொருளாதாரம் தொடர்பில் அமைச்சர்களும் – அரச அதிகாரிகளும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த பூச்சிகொல்லி மருந்துப்பொதி !

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடலில் பொதி ஒன்று மிதப்பதாக  நேற்று  (வியாழக்கிழமை) கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் குறித்த பொதியினை மீட்டு சோதனையிட்ட போது , அவற்றில் இருந்து 35 பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களை மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இவற்றை கடத்தி வந்த நிலையில் கடற்படையினரை கண்டு கடத்தல்காரர்கள் பொதியினை கடலில் வீசி விட்டு தப்பி சென்று இருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கடற்படையினர் மற்றும் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.