04

04

அடுத்த சில மாதங்களில் உணவு நெருக்கடி – அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ எச்சரிக்கை !

“அடுத்த சில மாதங்களில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் .” என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா நடத்துனர்களின் சங்கத்திற்கும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஹரின் பெர்ணாண்டோ,

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தவறானது. இந்த நடவடிக்கையானது நாட்டின் சுற்றுலாத் துறையை மேலும் பாதிக்கும்.

அவசர உணவுப் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படாத பட்சத்தில், அடுத்த சில மாதங்களில் உணவு நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் . சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் 2 அல்லது 3 மாதங்கள் செல்லும், அதனால் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பிற நிறுவனங்களிடமிருந்து கடன் உதவியை பெறும் தேவை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிர்வரும் 3 மாதங்களுக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும், அந்த நிதி உதவி கிடைக்காத பட்சத்தில் நாட்டின் நிலை மோசமடையலாம் அவர் சுட்டிக்காட்டினார். ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்காவிட்டால் இலங்கையின் நிலமை இன்னும் மோசமடைந்திருக்கும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச சங்கத்திடம் நிதி உதவி பெறுவது தொடர்பில் ஆளுந்தரப்பினர் கவனம் செலுத்துகின்றனரே தவிர நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி – தற்சார்புக்கு திரும்புவது தொடர்பில் இன்னமும் பெரிதாக ஆளந்தரப்பு அலட்டிக்கொள்வதாக கூட தெரியவில்லை. சர்வதேச சங்கத்திடம் செல்வது இலங்கையை விற்பதற்கு சமானமானது என ஜே.வி.பி அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தேச நாணயநிதியத்தை அணுகுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் பாரிய பிரச்சினைகள் தொடர்பிலும் தேசம் ஜெயபாலன் எழுதிய கட்டுரையை வாசிக்க https://www.thesamnet.co.uk//?p=85599

நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிப்பது ஆபத்தானது என்கிறார் அமைச்சர் நஸீர் அஹமட் !

“நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது.” என  முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அவர் தெரிவித்ததாவது,

நிறைவேற்றதிகாரம் மக்களுக்கான உச்ச பாதுகாப்பளிக்கிறது. கடந்தகாலங்களில் அனுபவிக்க நேர்ந்தவைகள் சிலவற்றால், இப்பதவியை ஒழிக்க வேண்டுமென்ற கோஷங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதை, ஒழிக்க கூடாதென்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் தெளிவான நிலைப்பாடும் இதுவே.

மக்களால், நேரடியாகத் தெரிவு செய்யப்படும்போதுதான் எல்லோருக்குமான எங்கள் ஜனாதிபதி என்ற உரிமையிருக்கும். இலங்கையில் உள்ள அத்தனை பிரஜைகளும் வாக்களிப்பதால் ஜனாதிபதிக்கும் ஒரு கடப்பாடு ஏற்படுகின்றது. மாறாக பாராளுமன்றம் பிரதமர் ஒருவரை தெரிவு செய்வதால் அவர், ஒரு மாவட்டத்துக்கு அல்லது பிரதேசத்துக்கு உரியவராகவே அர்த்தப்படும்.

அதுமட்டுமல்ல, தேர்தலூடான தெரிவு வரும்போதுதான், சமூகங்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் இவருக்கு ஏற்படும். குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கு அவர் கடமைப்பட்டவராகிறார்.

ஏதாவதொரு அவசர தேவைகளை அடைந்து கொள்ள ஜனாதிபதியுடனுள்ள உறவுகள் அல்லது புரிந்துணர்வுகள் வழிவகுக்கும். இவ்வாறு, பல விடயங்கள் கடந்தகாலங்களில் பெறப்பட்டுள்ளன. தனியொருவரின், மனநிலைகளுக்காக, இந்த அதிகாரத்தையே முற்றாக ஒழிக்குமாறு கோருவது அர்த்தமுள்ள சிந்தனையாகாது என தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருரான ஹாபிஸ் நஸீர் பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை பின்பற்றியிருந்தார். எனினும் 20ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவளித்ததன் ஊடாக எதிர்க்கட்சியினரின் வசைபாடல்களுக்கு ஆளானதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப்ஹக்கீமுடனும் தொடர்ச்சியான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே ஹாபிஸ் நஸீர் அஹமட் அண்மையில் கோத்தாபாய ராஜபக்சவின் அரசில் புதிய அமைச்சு பதவியையும் ஏற்றிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே இவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

சிவ அல்ல ‘சுய’புராணம்: வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது. ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்!

தமிழ் சமூகம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்குகின்ற சமூகமாகவே இருக்கின்றது. ஆனாலும் தமிழ் சமூகத்தில் கல்விபற்றிய புரிதல் என்பது மிகக் கீழ்நிலையிலேயே உள்ளது. இந்தக் கல்விக்காக எமது பிள்ளைகள், குடும்பங்கள் கொடுக்கின்றவிலை மிகக் கனதியானது. அதன் உச்சமாக சிலர் தங்களையே அழித்துக்கொண்டும் உள்ளனர். பல குடும்பங்கள் தங்கள் சந்தோசத்தையே இழந்தும் உள்ளனர். பலர் எதிர்காலத்தையும் இழந்துள்ளனர். ஒரு சேட்டிபிக்கற் எடுப்பதற்காக.

இந்தப் பதிவை இடுவதற்கு நான் ஒரு கால்நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம். அந்த நாளும் வந்தது.

ஆயிரத்து தொழாயிரத்து எண்பதுக்களில் எங்களுக்கு இன்ரநெற் மட்டும் இல்லாமல் இல்லை. இன்றைய மதிப்பீட்டில் அத்தியவசிய தேவைகளே இருக்கவில்லை. தொலைபேசியில்லை. மின்சாரம் இல்லை அதையொட்டிய எந்த சாதனங்களும் இல்லை. கொம்பியூட்டரல்ல, ரீவியைப் பார்ப்பதே அதிசயம். ‘அடாது மழை பெய்தாலும் விடாது காண்பிக்கப்படும்’ என்று சொல்லி சிவராத்திரியில் தான் படம் ஓடியகாலம். தகவல் என்பது மிக மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் பொய்யான செய்திகள் நிலையாத காலம். எமது தலைமுறையில் தாயகத்தில் உயிர்வாழ்தல் என்பதுகூட ஒரு காலத்தில் விளையாட்டுத்தான். ஹர்த்தால், கடையடைப்பு, யுத்தம் என்று பாடசாலைகள் மூடப்பட அல்லது செயழிழக்க தனியார் கல்வி நிலையங்கள் பரவ ஆரம்பித்த காலம். பலதிக்கும் சென்று வேரூன்றினார்கள்.

இப்போது தொண்ணுறுக்களின் நடுப்பகுதியல் இளம் குடும்பஸ்தர்களாக வாழ்க்கையை ஆரம்பித்த காலம். எமது பிள்ளைகளுக்கு எதை வழங்குவது? பிள்ளையை என்னவாக ஆக்குவது? இலெவன் பிளஸ் – ’11+’? ரியுசன்? எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது? கிரம்மர் ஸ்கூல் – grammer school? ப்ரைவேட் ஸ்கூல் – private school? தமிழ் படிப்பிப்பதா? இதுக்கு மேல், நடனம், சங்கீதம், … கிரிக்கட்? புட்போல்? எல்லாமே பிரச்சினையாக இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு மத்தியில் அகதி வாழ்வின் அடுத்த படியாக எமது மெலனியம் தலைமுறையினர் பிறந்தனர்.

எங்களுக்கு பிள்ளைகள் பிறக்க முன்னரேயே அவர்களுடைய வாழ்வை இப்படித்தான் அமைத்துக்கொடுப்போம் என்ற ஒரு திட்டம் இருந்தது. அன்றைய வாழ்க்கைத்துணையும் அதே புரிதலிலேயே இருந்தார். பிள்ளைகளை இயல்பாக அவர்களுடைய சுதந்திரத்துடன் வளரவிடுவது, நாங்கள் வழிகாட்டிகள் மட்டுமே. முடிவுகளை அவர்களையே எடுக்க அனுமதிப்பது. சமயம் பற்றி அக்கறைகொள்வதில்லை. 11 பிளஸ் (இலங்கையில் புலமைப்பரிசில் பரீட்சை போன்றதொரு பரீட்சை) பற்றியெல்லாம் அக்கறையெடுப்பதில்லை. அவர்களது குழந்தைப் பருவத்தை குழந்தைகளாகவே இருக்க அனுமதிப்பது. ஓரளவுக்கு தரமான வீட்டுக்கு அருகில் உள்ள அரச பள்ளியில் அவர்களைச் சேர்ப்பது. உயர்தரம் வரை தனியார் கல்விக்கு அனுப்புவதில்லை.

மேலும் எனக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு குறித்த வயது வந்ததும் எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் தற்காப்பு கலைப் பயிற்சிக்கு அனுப்புவது. எமது பிள்ளைகள் அனைவரும் பல்கலைக்கழகம் செல்வார்கள் என்பதும் எமது தெளிவான முடிவாக இருந்தது. என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை காதலிக்கவும் திருமணம் செய்யவும் அவர்களுக்கு எவ்வித தடையும் கிடையாது. ஆனால் அவர்கள் பட்டிப்படிப்பை முடித்து கார் வாங்குதற்கு முன் வீடொன்றை வாங்கிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம்.

இவ்வாறான ஒரு எண்ணத்துக்கு மத்தியில் தான் எனக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தனர். மேடு பள்ளங்களுக்கூடாக வாழ்க்கைச் சக்கரம் ஓடி இப்போது மூத்த மகன் 21 வயதில் நிற்கின்றான். நான் முப்பது ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த பருவம். இப்போது 30 ஆண்டுகள் கடந்து எனது கொள்கைகள், எனது இலட்சியங்கள், எனது எழுத்துக்கள் உட்பட என்னையே உரசிப்பார்த்து மதிப்பிடும் ஒரு தருணம்.

11 பிளஸ் பரீட்சையில் வெற்றிபெற கருத்தரித்தவுடனேயே நல்ல ஆசிரியரிடம் ஆங்கிலம் கணிதம் படிக்க பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் கைதேர்ந்த ஆசிரியரிடம் இடம் கிடைக்காது. இடம் கிடைத்து படிக்க ஆரம்பித்தால் வாரதித்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 25 பவுண்கள். கணிதமும் ஆங்கிலமும் வாரத்திற்கு நாற்பது பவுண் வருடத்திற்கு இரண்டாயிரம் பவுண்களுக்கு மேல். ஐந்து வருடத்திற்கு பத்தாயிரம் பவுண்கள். அதைவிட ஆங்கிலத்தில் மேதையாக்குவதற்கு ‘குமோன் – Kumon’. அது 12 மாதங்கள் அதற்கு ஆயிரம் பவுண். கணிதத்தில் மேதையாக்குவதற்கு ‘அபகஸ் – Abacus’, அதில் 12 மட்டங்கள் ஒவ்வொரு மட்டத்திற்கும் ஐந்து மாதங்கள். ‘அபகாஸ் – Abacus’ முடித்து வர ஆறு வருடங்கள் ஆறாயிரம் பவுண். ஆக மொத்தத்தில் 11 பிளஸ் பரீட்சையில் தோற்றும் சராசரிப் பெற்றார் மொத்தமாக பதினாராயிரம் பவுண்களை செலவிழிக்கின்றனர்.

ஆனால் இந்த வகுப்புகள் என்ன சூமிலா நடக்கும். பிள்ளைகளை நேரடியாக அந்ததந்த இடங்களுக்கு கூட்டிச்சென்று இறக்க வேண்டும். அவர்களுக்கு வகுப்பு முடியும் வரை காத்துக்கிடக்க வேண்டும். இதற்காக வாரத்திற்கு 5 மணித்தியாலங்கள் என்று பார்த்தால் ஜந்து ஆண்டுகளுக்கு 1300 மணிநேரங்களைச் செலவிடுகின்றனர். இதற்கு பிரித்தானியாவின் குறைந்த சம்பள வீதத்தை போட்டுப் பார்த்தால் கூட பத்தாயிரம் பவுண்கள். பெற்றோல் செலவை விட்டால் கூட ஒரு பிள்ளையின் 11 பிளஸ் பரீட்சையின் செலவீனம் 25,000 பவுண்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தது இரு பிள்ளைகள் என்று கணக்குப் பார்த்தால் ஐம்பதிணாயிரம் பவுண். ஒருவர் பல்கைல்கழகம் சென்று பட்டப்படிப்பை முடிப்பதற்கும் இவ்வளவு செலவேயாகும்.

பெற்றோர் இப்பரீட்சைகளுக்ககாக ஒரு குழந்தைக்கு இருப்தியயையாயிரம் பவுண்களைச் செலவிடுவது ஒரு பிரயோசனமற்ற முதலீடே. மாறாக அவர்கள் இவ்வளவு பணத்தை அவர்களுடைய சேமிப்பில் போட்டிருந்தால் மிகக்கூடுதல் பயனைப்பெற்றிருப்பதுடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவித்து இருக்கலாம்.

மேலும் தீவிர கல்வி அழுத்தங்கள் பிள்ளைகளில் மிகக் கடுமையான காயங்களை உண்டுபண்ணுகின்றது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான நிரந்தர இடைவெளியை ஏற்படுத்துகின்றது. கல்வியின் மீது சில பிள்ளைகளுக்கு நிரந்தரமான வெறுப்பையும் ஏற்படுத்துகின்றது. மேலும் சுயமான தேடலையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வதற்கு மாறாக; ஊட்டப்படும், திணிக்கப்படும் கல்வி பிள்ளைகளின் ஆளுமையை முளையிலேயே கருக்கிவிடுகின்றது. பால்போத்தலில் ஊட்டுவது போல் கல்வியூட்டப்பட்ட சில பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் திணறுகின்றனர். பெற்றோர் சுற்றத்தாரினால் திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளை புர்த்தி செய்ய முடியாத பிள்ளைகள், பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுவரை சென்று; இறுதியில் தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறான தற்கொலைகள் தமிழ் சமூகத்தில் இன்னமும் தொடர்கின்றது. இவை குடும்பங்களுக்குள்ளும் நிம்மதியை இழக்கச்செய்து ஒரு நிம்மதியற்ற குடும்பச் சூழலுக்குள் எமது மெலனியம் குழந்தைகளை வளர நிர்ப்பந்திக்கிறது.

ஆனால் ஆய்வுகள் என்ன சொல்கின்றது என்றால் இந்த 11 பிளஸ் பரீட்சைக்கும் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்கிறது. தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்பரீட்சைகளை இல்லாமலாக்கும் எனக்கு குறிப்பிட்டு இருந்தது. உலகத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் அதேசமயம் மகிழ்ச்சியான சிறுவர்களைக் கொண்ட ஸ்கன்டிநேவிய நாடுகள் பிள்ளைகளை ஆறுவயதுவரைக்கும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. ஒரு ஆசிரியனாக பலநூறு மாணவர்களின் பெறுபேறுகளை எனக்கு ஆராயும் வாய்ப்பு உள்ளது. அதன்படி பார்ததிலும் அவர்கள் ஆரம்பப்;பள்ளிகளில் பெற்ற பெறுபேறுகளுக்கும் இடைநிலைப் பள்ளிகளில் பெறும் பெறுபேறுகளுக்கும் சில சமயம் எவ்வித சம்பந்தமும் இருப்பதில்லை. உண்மையென்னவெனில்; இந்த அதீத கல்வித் திணிப்பைச் செய்யாவிட்டாலும் கூட அம்மாணவர்கள் தங்கள் எதிர்காலக் கல்வியில் வெற்றிபெற்றிருப்பதுடன் மிகவும் சந்தோசமானவர்களாகவும் இருந்திருப்பார்கள். அதுவே என் அனுபவமும் கூட.

எனது பிள்ளைகள் 11 பிளஸ்க்கு ரியுசன் போகவில்லை. அதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள அரச பாடசாலைகளுக்கே சென்றனர். உயர்தர வகுப்பிற்குக்கூட சில நண்பர்களே கற்பித்தனர். தனியார் கல்வியில் தங்கியிருக்கவில்லை. எனது நண்பன் கந்தையா ரவீந்திரனிடம் மூவரும் தற்காப்புக் கலைப் பயிற்சி பெற்று முத்தவர்கள் இருவரும் கறுப்புப்பட்டியும் பெற்றுவிட்டனர். எனது அரசியல் மற்றும் நிலைப்பாடுகளால் எனது பிள்ளைகள் பழிவாங்கப்படலாம் என்பதால் அன்றைய நாட்களில் நான் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனால் என்னுடைய பிள்ளைகள் நாங்கள் ஆங்கிலத்தில் கேட்டாலும் பதிலை தங்களுக்குத் தெரிந்த தமிழில் தான் சொல்வார்கள். எங்களோடு ஆங்கிலத்தில் அவர்களுக்கு கதைக்க வராது.

மூத்தவன் கர்ணன் தற்போது பொருளியில் துறையில் முதல் தரத்தில் சித்தியடைந்து தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு உடனடியாகவே வேலையும் எடுத்துக்கொண்டான். நான் ரியூஷனுக்கு விடாமல் எனது பிள்ளைகளது கல்வியையும் பாழடிக்கிறேன் என்ற விமர்சனங்கள் அன்று ஏராளம் இருந்தது. சிலர் என்னை குற்றவுணர்வுக்குள் தள்ளியதும் உண்டு. கர்ணன் சதாராண தரப் பரீட்சையிலோ உயர்தரப் பரீட்சையிலோ எல்லாப் பாடங்களிலும் அதீத சித்திகளைப் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் சராசரி அல்லது சராசரியிலும் குறைவான பெறுபேறுகளையே பெற்றான். அவை பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் பல்கைலக்கழகத்தில் அவனால் சாதிக்க முடியும் என்ற ஊக்கத்தை அழித்தேன். அவனது முன்னேற்றத்தில் தான் எனது வெற்றியும் என்னைப் பற்றிய மதிப்பீடும் தங்கி இருந்தது. அவன் பட்டப்படிப்பில் தவறி இருந்தாலும் நாங்கள் துவண்டுவிடக்கூடாது எதற்காகவும் சந்தோசத்தை தொலைத்துவிடக்கூடாது என்ற உணர்வு எனக்குள் இருந்தது. ஒரு போதும் எதிர்காலத்தை எண்ணிப் பயந்து நிகழ்கால சந்தோசத்தை தொலைத்துவிடக் கூடாது என்பது எனது அனுபவப்பாடம்.

இந்த சமயத்தில் எம்மோடு கர்ணணின் கல்வியில் அவனின் வளர்ச்சியில் அக்கறைகொண்டிருந்த பலருக்கும் என் நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக என் பால்ய நண்பன் சிவக்குமார் லண்டனில் அவனது முதலாவது மாணவன் கர்ணன். நண்பன் கந்தையா ரவீந்திரன், நண்பன் டேவிட் நோபல் – வலிந்து இழுத்துவைத்து கற்பித்தவர், ரவி சுந்தரலிங்கம், எல்கின்ஸ், சோதிலிங்கத்தின் மகள் வர்சி இவர்களோடு எனக்கு தந்தையாக நண்பனாக இருக்கும் செல்வராஜா குடும்பத்தினர் அனைவருக்கும் என் நன்றிகள்.

நான் எனது பிள்ளைகளின் கல்விக்கு என்று பெரிய அளவில் பணத்தையோ நேரத்தையோ செலவழிக்கவில்லை. தன்னார்வக் கல்வியிலேயே நான் எப்போதும் நம்பிக்கையுடையவனாக இருக்கிறேன். ஆசிரியர்கள் கற்கின்றவரிலும் பார்க்க சற்று அதிகம் குறிப்பிட்ட விடயத்தில் அறிவுடையவர்கள் (more knowledgeable than others) அவ்வளவுதான். எப்படிக் கற்பது என்று வழிகாட்டுவதே எமது கடமை. சந்தேகங்களைத் தீர்த்து வைக்கலாம். கற்றல் கற்பித்தல் என்பது பால்போத்தலில் போர்மியுளா மில்க் ஊட்டி புஸ்டியாக்குவதல்ல.

பிள்ளைகளை விடுமுறையில் வசதிக்கு ஏற்ப வெவ்வேறு இடங்களுக்கு கூட்டிச் செல்லுங்கள். மியூசியங்கள், கண்காட்சியகங்கள், பல்தரப்பட்ட நிகழ்வுகளுக்கும் கூட்டிச்செல்லுங்கள். பரந்த விரிந்த உலகைப் பார்க்க வையுங்கள். பிள்ளைகளுடன் உரையாடுங்கள், விவாதியுங்கள், குடும்ப முடிவுகளை பிள்ளைகளையும் உட்படுத்தி எடுங்கள். பெற்றோராக தந்தையாக மட்டுமல்லாமல் நல்ல நண்பராகவும் இருங்கள். நாங்கள் இணைந்து தண்ணியும் அடிப்போம். அவர்கள் யாரில் கண் வைத்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் யாரில் கண் வைத்திருக்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எல்லோருக்கும் எல்லோரது எல்லைகளும் தெரியும்.

ரஷ்யா – உக்ரைன் யுத்தம் பற்றி நான் எழுதிய கட்டுரையை கூகிள் உதவியோடு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்துவிட்டு கர்ணன் என்மீது ஒரு மணி நேரத்திற்கு மேல் விமர்சனம் வைத்தான். இருமணி நேரம் விவாதித்தோம். மனஉளைச்சல் என்பது ஒரு தெரிவு என்று இரண்டாவது மகன் இன்னொருநாள் விவாதத்தைத் தொடங்கினான். மூவரும் ஒன்றரை மணிநேரம் விவாதித்தோம். நாங்கள் மூவருமே உடன்பட மறுப்பதற்கு உடன்பட்டு விவாதத்தை முடிப்போம். அவர்களுடைய விவாதத்திற்குள் என்னால் சிலசமயம் ஈடுகொடுக்க முடியாமல் இருப்பதையிட்டு மிகப் பெருமைப்படுகின்றேன்.

வாழ்வுக்கான பாதையை நீங்கள் திட்டமிடாவிட்டால் தோல்விக்கான பாதையை நீங்கள் தெரிவு செய்துவிட்டீர்கள் என்பதே அர்த்தம். அதற்காக திட்டங்கள் நூறுவீதம் திட்டமிட்டபடி நடக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். எனது மூத்தமகனுக்கு பத்துவயதாக இருக்கும் போதே நானும் துணைவியும் எமது மணவுறவை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். ஆனால் அதன் தாக்கம் எங்கள் இருவரையும் தாண்டி பிள்ளைகளைப் பாதிக்காதவாறு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டோம்.

நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோமோ, பிரிந்து வாழ்கின்றோமோ, வாழ்க்கை என்பது மிகவும் அழகானது. அதன் ஒவ்வொரு திருப்பு முனைகளும் சுவாரஸியமானது. வலிகளும் வேதனைகளும் துயரங்களும் நிரந்தரமானவை அல்ல. மகிழ்ச்சியும், கொண்டாட்டங்களும் வெற்றிகளும் போல். அதுவும் கடந்து போகும். ஆனால் வாழ்க்கையை சற்றுத்தள்ளியிருந்து ரசிக்க ஆரம்பித்தால் அதன் சுவையே தனி. மகிழ்ச்சி வெளியே இருந்து வருவதில்லை. மற்றவர்கள் தருவதுமில்லை. அது எம்மிடமே இருக்கின்றது.

எதற்காகவும் மகிழ்ச்சியை விலைகொடுக்காதீர்கள்.

வெற்றி பெறுவதால் பெறும் மகிழ்ச்சி நிரந்தரமற்றது.

ஆனால் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் வெற்றிபெற முடியும்.

வெளிநாடுகளிலிருந்து வங்கி கட்டமைப்பினூடாக பணம் அனுப்புங்கள் – உதய கம்மன்பில கேள்வி !

“வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டும்.”  என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாட்டின் சமகால நிலவரம் பற்றி மேலும் புசிய அவர்,

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை. மாறாக இந்த நடவடிக்கையினால் சாதாரண நடுத்தர மக்களே பாதிக்கப்படுவார்கள் என்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிக் கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள ஏன் அவதானம் செலுத்தவில்லை என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உக்ரேன் – ரஷ்யா மோதலை தொடர்ந்து பெரும்லான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்முதலை தவிர்த்து வருகின்ற போதும் ஆசிய நாடுகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

எனவே சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசமைப்பு சார்ந்த ஒருசில விடயங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

ரஷ்ய விமானம் இலங்கையில் தடுக்கப்பட்ட விவகாரம் – ரஷ்யா விமான நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு !

எயார்பஸ் A330 விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து, ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

தடையில்லாமல் விமான சேவை இடம்பெறும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதனால் இலங்கைக்கான சேவைகளையும் டிக்கெட் விற்பனையையும் இடை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2, 4 மற்றும் 5 திகதிகளில் கொழும்பில் இருந்து மொஸ்கோவிற்குத் திரும்பும் பயணிகள் ஜூன் 4 மற்றும் ஜூன் 5 ஆம் திகதிகளில் புறப்படும் விமானங்கள் மூலம் நாடு திரும்பலாம் என்றும் அறிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கையில் விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் எட்டு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2ஆம் திகதி, ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு 16 ஆம் திகதி வரை அமுலில் உள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு மொஸ்கோவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை வரவழைத்து விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமைக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த, பஷில் மீது வழக்கு பதிவு – காரணம் என்ன..?

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததாக குற்றம் சுமத்தி முன்னாள் பிரதமர் மகிந்தராஜபக்ஷ,  முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் உள்ளிட்ட பேராசிரியர்கள் மூவர் அடங்கிய குழுவொன்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவி அமைப்புக்களும், கட்சியின் சட்டத்தரணிகளும் இணைந்து இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர உள்ளிட்ட சிலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பணவீக்க அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அந்நிய செலாணி பற்றாக்குறை என பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை நோய் – 26 நாடுகளில் தீவிர பரவல் !

உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 643-ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13-ந் திகதி தொடங்கி ஜூன் 1-ந் திகதி வரையிலான நிலவரம் ஆகும்.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசர நிலை திட்ட தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது, “உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் குரங்கு அம்மை பரவி உள்ளது. இங்கிலாந்தில் 190 பேரும், ஸ்பெயினில் 142 பேரும், போர்ச்சுக்கலில் 119 பேரும், ஜெர்மனியில் 44 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மேலும் தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவுகிற அபாயத்தை தொற்று நோய் நிபுணர்கள் மதிப்பிட வேண்டும். வைரஸ் மரபணுவை ஆய்வுசெய்து, வாய்ப்பு உள்ள பிறழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதை வரிசைப்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக நாடுகள் எதிர்கொள்ளும் உணவு பிரச்சினைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் – புடின் குற்றச்சாட்டு !

ரஷ்யா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷ்யாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,
உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சனைகளையும் ரஷ்யாவின் மீது திருப்புவதை காண முடிகிறது. மேலும், ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்துகின்றன.
உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைகளுக்கு ரஷ்யாவை குற்றம்சாட்டி வருகின்றன. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும். ” இவ்வாறு புதின் கூறினார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் – எச்சரிக்கிறார் தினேஷ்குணவர்த்தன !

ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்புக்கான விமான சேவைகளை அந்நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

எனவே இரு நாடுகளுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரகபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நீக்கப்பட்ட அதே வரிகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது அரசு – ஜே.வி.பி விசனம் !

ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசாங்கம் மேலும் சுமையை ஏற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

சாதாரண பொருட்களுக்கு வரி விதிப்பதை மன்னிக்க முடியாது என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

ஊடக சந்திப்பின் போதே சுனில் ஹந்துநெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

வெண்ணெய், பாலாடைக்கட்டி, சாக்லேட்டுகள், பழங்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை ஆடம்பரப் பொருட்களாகக் கருதிய காலம் இன்று இல்லை என்றும் இவை சாதாரணப் பொருட்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வரிவிதிப்பு மூலம் அரசாங்கம் பாரிய வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நீக்கப்பட்ட அதே வரிகள் இந்த வாரமும் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கணிசமான பாவனையிலுள்ள பொருட்களுக்கு அரசாங்கம் வரி விதிப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக வரி உயர்வுக்கு பதிலாக வரிச்சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொலைத்தொடர்பு வரியும் 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பெரும்பான்மையானவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வரிகள் மூலம் திட்டமிட்டு வருமானம் ஈட்ட அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.