06

06

பிரித்தானிய பிரதமரின் முடிவின் ஆரம்பம்! நம்பிக்கையிலாப் பிரேரணையில் தற்போது தப்பித்துக்கொண்டார் பிரதமர் பொறிஸ்!!!

இன்று யூன் ஆறாம் திகதி சில நிமிடங்களுக்கு முன் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தப்பித்துக்கொண்டார். ஆனால் அவருடைய எதிர்காலம் மிகக் குறுகியதாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆளும் கொன்சவேடிவ் கட்சியின் 359 பாராளுமன்ற உறுப்பினர்களில் 211 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 148 கொன்சவேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது தங்களுக்கு நம்பிக்கையிலை என வாக்களித்தனர். ஆட்சியில் உள்ள தங்களுடைய பிரதமருக்கு எதிராக அவர்களுடைய கட்சி உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அக்கட்சியை தலைமை தாங்குவதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெரும் சவால்களை எதிர்கொள்ள உள்ளார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பொறுப்பற்ற தலைமைத்துவம் அவருடைய குடியும் கும்மாளமும் பற்றி தேசம்நெற் தொடர்ச்சியாக விமர்சித்துவந்ததுடன் வாக்காளர்களிடம் நம்பிக்கையிழந்து வந்ததை சுட்டிக்காட்டி இருந்தோம். இன்று பிரதமர் 32 வாக்குகளால் பதவியை தக்க வைத்துக்கொண்டார். ஆனால் நீண்டகாலத்திற்கு இவரால் பதவியில் நீடிப்பது மிகக் கடினமாக இருக்கும். மே 6ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சித் தேரதலில் ஆளும் கொன்சவேடிவ் கட்சி கணிசமான ஆசனங்களை இழந்ததால் பொறிஸ் ஜோன்சன் தலைமையில் அடுத்த தேர்தலை எதிர்கொண்டால் தாங்கள் தோற்றுப் போவோம் என பல கட்சி உறுப்பினர்களும் கருதுவது தான் அவர்கள் இவ்வாறான சடுதியான தாக்குதலை நடத்த காரணமாக இருந்தது.

இன்னும் இரு வாரங்களில் இரு இடைத்தேர்தல்கள் வருகின்றது. இத்தேர்தல் முடிவுகள் கட்சிக்கு எதிரானதாக மாறினால் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலம் இன்னும் ஆபத்தானதாகும்.

முன்னாள் பிரதமர் திரேசா மே மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அவர் பெற்ற நம்பிக்கை வாக்குளிலும் குறைவான வாக்குகளையே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் இப்போதைய நம்பிக்கையிலாப் பிரேரணையில் பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வாக்குகளைப் பெற்ற போதும் கணிசமான எதிர்ப்பின் காரணமாக அவரால் தொடர்ந்தும் பிரதமராக செயற்பட இயலாமல் போனமையினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏழு மாதங்களில் பதவியை இராஜிநாமச் செய்தார். பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அவ்வாறு பதவியை இராஜினாமாச் செய்யும் இயல்புடையவரல்ல. ஆனாலும் அவருடைய எதிர்காலம் முடிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது என்றே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாயாக தன்னை முன்னிலைப்படுத்தும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களுக்கு பிரதமர் பொய் சொல்லி இருக்கின்றார். லொக்டவுன் அறிவித்து நாட்டுமக்களை வீட்டுக்குள் இருக்கச்செய்ய விதிமுறைகளை அறிவித்து விட்டு அந்த விதிமுறைகளை மீறி பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லாமான 10 டவுனிங் ஸ்ரீற்றில் அதிகாலை மூன்றுமணிவரை கூத்தும் கும்மாளமும் என்று இருபது தடவைகள் பார்ட்டி நடந்துள்ளது. அவ்வாறு நடக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் பொறிஸ் பொய்யுரைத்தார். இதனை ஆதாரங்களுடன் வெளிப்படுத்த ஸ்கொட்லண்ட் யாட் பிரதமருக்கும் பார்ட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் எதிராக அபராதாம் விதித்தது. சூ கிரேயின் சுயாதீனா விசாரணை அறிக்கையும் பல விடயங்களை அம்பலப்படுத்தியது தெரிந்ததே.

உக்ரைனுக்காகக் குரல்கொடுத்ததுஇ உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கியது, உக்ரைன்னுக்கு பறந்து சென்றதெல்லாம் லண்டனில் தனது இருப்பை தக்க வைக்கவே. பெரியளவிலான எரிபொருள் கொடுப்பனவை வழங்க முன் வந்ததும் தனது பொட்டுக்கேடுகளை மறைக்கவே.அது போதாது என்று தானே அறிமுகப்படுத்திய அமைச்சர்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளையும் கிழித்தெறிந்தார். அதாவது அமைச்சர்கள் தவறுவிட்டால் பதவிவிலகவேண்டும் என்ற விதியை நீக்கிவிட்டார். தனது தவறுகளுக்காக தான் பதவி விலகவேண்டி வரும் என்பதால். போறிஸ் ஜோன்சனாக இருந்தாலும் முழப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முடியுமா?

இலங்கை – ரஷ்ய உறவு தொடர்பில் அதிர்ச்சியடைவதாக மைத்திரிபால ட்வீட் !

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு சீர்குலைந்து வரும் அபாயகரமான நிலையைக் கண்டு அதிர்ச்சியடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (திங்கட்கிழமை) தனது ருவிட்டரில் இட்டுள்ள பதிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர்,

“எனது ஆட்சிக் காலத்தில் உங்களுடனான அந்த வரலாற்றுப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த முடிந்தது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நமது ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவை அச்சுறுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இன்று நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் வலுவான பிணைப்பு நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி !

கடந்த மே மாதம் மொத்த 30,207 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 62,980 ஆக இருந்தது. மே மாதத்திற்கான எண்ணிக்கை ஒரு மாத காலத்தில் வருகை பாதியாகக் குறைந்துள்ளமையை காட்டுகிறது.

இதேவேளை ஜூன் 5 ஆம் திகதி வரை மொத்தமாக 383,036 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது;

சுற்றுலாத் துறையானது இலங்கைக்கு அந்நிய செலாவணியின் பெரும் பகுதியைக் கொண்டு வருவதால், குறைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது அந்நிய செலாவணி கையிருப்பு குறையும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

 

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை !

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

அத்துடன் 25 மில்லியன் ரூபா மற்றும் 1 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடாக செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சர் ஒரு தொழிலதிபரை தொலைபேசியில் மிரட்டி அவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபாய் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்திருந்தார்.

“உணவுப்பொருட்களை சேமித்து வைக்க வேண்டாம்.”- அமைச்சர் நளின் பெர்னாண்டோ

எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாப்ஸ் எரிவாயுநிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேவையில்லாமல் உணவுப்பொருட்களை சேமித்து வைக்க வேண்டாம் எனவும், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால், அது சந்தையின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு ​​மேல் நீதிமன்றம் அவருக்கு  இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. 

இந்த வழக்கின் தீர்ப்பு  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இன்று (06) வழங்கப்பட்டது. இதன்போதே, மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இந்த சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

“தோல்வியடைந்த ஒருவனாக என்னால் பதவியிலிருந்து விலக முடியாது.”- ஜனாதிபதி கோட்டாபய

பதவிக்காலம் நிறைவடையும் வரை பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது. எனக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக நான் பதவி விலகப்போவதில்லை. அத்துடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை”, எனக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கர்மாவே தான் வேணுமா..?- ஏன் உள்நாட்டில் பால்மாடுகள் இல்லையா மக்களே..?

எதிர்வரும் சில தினங்களில் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பைக்கற் 1020 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பைக்கற் 2545 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
………………………………………………………….
பால்மா நுகர்வின் போது வெளிநாட்டு பால்மா நிறுவனங்களுக்கு நம்மவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. மேலும் உள்நாட்டில் தேவையான அளவுக்கு பசுமாடுகள் உள்ளதால் பால் நுகர்வுக்கு அந்தளவு சிரமம் ஏற்படுவதில்லை. முக்கியமாக லீட்டர் பால் 130-150 வரையான விலையிலேயே கிடைக்கிறது. இதை நுகர நமது மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் அங்கர் பெட்டிகளுக்காக மட்டுமே கூட்டம் அலைமோதுகிறது. உள்நாட்டு மாப்பொருட்களை நுகர்வதில் கூட நம்மவர்கள் அதிக அக்கறை காட்டுவது கிடையாது. நமது இந்த மனோநிலையை தான் இறக்குமதி நிறுவனங்கள் தங்களுக்க சார்பானதாக மாற்றிக்கொள்கின்றன.
இதற்கு சிறப்பான உதாரணம் அண்மையில் இடம்பெற்ற சீமெந்து விலையேற்றமும் பின்னரான விலைக்குறைவும். சீமெந்தின் விலையேற்றப்பட்ட போது அதிகமாக விலைகொடுத்து சரி சீமெந்து  மூடைகளை பதுக்குவதில் கவனம் காட்டினர். இதனால் விலையும் எகிறியது. குறுகிய கால இடைவெளியில் சீமெந்து கொள்வனவை பரலும் நிறுத்தியதால் ஏற்றப்பட்ட விலைகளை குறைத்து மீண்டும் விற்பனையாளர்கள் விற்றனர்.
நமது அங்கலாய்ப்பை வியாபாரமாக்கவே இந்த விற்பனையாளர்கள் எப்போதும் முனைவதால் நாம் சுதாகரித்துக்கொண்டாலே இந்த விலையேற்றம் தொடரை்பான கனிசமான விளைவுகளை கட்டுப்படுத்த முடியும்.

தேவாலயத்துக்குள் நுழைந்த மர்மநபர்கள் 50 பேரை சுட்டுக்கொன்ற சோகம் !

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது திடீரென அங்கு நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் தேவாலய கட்டிடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி சுட்டதாக ஓண்டோ மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தாக்குதல் நடந்த இடத்தையும், காயமடைந்தவர்களையும் அவர் பார்வையிட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும், அவர்களது நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த தாக்குதலில் தேவாலய பாதிரியார் மற்றும் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் காயமின்றி உயிர் பிழைத்தனர். தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நைஜீரியா அதிபர் முஹம்மது புஹாரி கண்டனம் தெரிவித்தார். இது கொடூரமானது என அவர் குறிப்பிட்டார்.

தடம் மாறும் யாழ்ப்பாணத்து சமூகம் – 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது !

யாழ்ப்பாணம் பருத்தித்துறை , திக்கம் பகுதியில் சுமார் 1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

குறித்த பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்கம், தும்பளை மற்றும் பலாலி அந்தோணிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

………………………….

1 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் மூவர் கைது என்ற தகவல் ஒரு பக்கம் இருக்க இந்த கஞ்சா நமது இளைஞர்களிடம் தானே விற்கப்பட தயாராக இருந்திருக்கும்.? இதனை வாங்க எவ்வளவு தொகை செலவழிப்பார்கள்.? இதனை பயன்படுத்திய பின் ஏற்படும் பிரச்சினைகள் என இதன் பின்னுள்ளநூற்றுக்கணக்கான கேள்விகள் நன்கு அலசப்படவேண்டியவை.

யாழ்ப்பாணத்தில வாள்வெட்டுக்குழுக்களின் அட்காசம் ஒருபக்கம், திருட்டு கும்பல்களின் இரவுநேர கொள்ளைகள் ஒரு பக்கம் , போதைப்பொருள் கடத்தல்கள் ஒரு பக்கம் என சமூகச்சீரழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. இந்த குற்றங்களில் கைதாவோரின் வயதுகள் பெரும்பாலும் 18-30 வயதுக்கு இடைப்பட்டோராகவே காணப்படுவது இன்னும் வேதனையளிக்கும் விடயமாகும்.

ஒரு காலத்தில் கல்வியின் மீது நாட்டம் காட்டுவதில் அதீத கரிசனை கொண்டிருந்த இந்த யாழ்.சமூகத்து இளைஞர்களின் போக்கு முற்றிவும் மாறுபடத்தொடங்கியுள்ளது. எல்லா விடயங்களுக்கும் காவல்துறை மீது மட்டுமே குற்றத்தை போட்டுவிட்டு – கையை காட்டிவிட்டு நம்மவர்கள் ஒதுங்கிவிடும் நிலையே காணப்படுகின்றது. மாற்றத்தை உங்கள் வீடுகளில் இருந்துஆரம்பியுங்கள். பிள்ளைகளை கண்காணியுஙகள். சகோதரர்களுக்கு நல்ல விடயங்களை சொல்லிக்கொடுங்கள். பாடசாலை ஆசிரியர்கள் 15வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களிடம் நல்ல விடயங்களை சொல்லிக்கொடுங்கள். போதைப்பொருள் பாவனையின் தீங்கை வகுப்பு நேரங்களில் சொல்லிக்கொடுங்கள்.  இப்படியாக நேரான சிந்தனைகளை அடிப்படையில் விதைப்பதே ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வழிசெய்யும்.