இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.
மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.