09

09

இலங்கைக்கு எரிபொருள் கடன் வழங்கப்படமாட்டாது – ரஷ்யா அறிவிப்பு !

ரஷ்ய அரசாங்கத்தின் ஊடாக எரிபொருள் கடன் வழங்கப்பட மாட்டாது என  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய தூதுவரை நேரில் சந்தித்த போது  ரஷ்ய அரசாங்கத்தின் ஊடாக எரிபொருள் கடன் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளா்.

ரஷ்ய தூதவரை நேரில் சென்று சந்தித்தேன். நான்கு நிறுவனங்களின் பட்டியலை தூதுவர் என்னிடம் கொடுத்தார். அதாவது, எரிபொருள் ஒப்பந்தம் அரசாங்கங்களுக்கு இடையே செய்யப்படாதென ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை எரிபொருளை பெற்றுக்கொள்ள ரஷ்யா கடன் வழங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் எமக்கு தேவையான எரிபொருள் விபரங்களை குறித்த நான்கு நிறுவனங்களும் கோரியுள்ளன.

இந்த நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டால் மாத்திரமே ரஷ்யாவில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளா்.

மிகவும் மலிவான உணவுகளை உண்ணும் இலங்கையின் 80 சதவீத மக்கள் !

இலங்கையில் உள்ள குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையில் இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை உயர்த்தியுள்ளதைக் காட்டுவதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு பருவங்களில் இருந்து நெல் அறுவடை குறைவதால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் வழங்கல் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்திச் செலவு காரணமாக உள்ளூர் அரிசி வகைகளின் விலை 6வீதம் அதிகரித்துள்ளதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது

“புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.”- சஜித் பிரேமதாஸ

புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான கட்டமைப்பை நாட்டின் இன்னமும் பலப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர்,

இந்த நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கான கட்டமைப்பை இன்னமும் பலப்படுத்த வேண்டும். இதனை அதிகரிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சி எனும் வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயராகவே உள்ளோம்.

நாட்டின் எதிர்க்காலமானது சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தியை இலக்காக் கொண்டே பயணிக்க வேண்டும். டீசல் மற்றும் நிலக்கரியூடான மின்சார உற்பத்திக்கு அதிக செலவேற்படுவதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால், அரசாங்கங்கமானது டீசல் மாபியா ஒன்று இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு இதனை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஊடாக போட்டித்தன்மை இல்லாது போனால், ஊழல் வாதிகளுக்கும் மோசடியாளர்களுக்கும் அதிக நன்மை ஏற்படும்.

எனவே, இதற்கு நாம் ஒத்துழைப்பினை வழங்க முடியாது. நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொடுக்கல்- வாங்கல்களுக்கு நாம் என்றும் இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

மாங்குளத்தில் 10வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10வருட கடூழிய சிறை !

இளைஞன் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்  தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா மாங்குளம் பகுதியில் 10வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாடசாலை சீருடையுடன் மலசலக்கூடத்தில் வைத்து இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாகவும், இச் சம்பவத்தின் பின்னர் பாடசாலைக்கு சென்று வகுப்பாசிரியரிடம் கூறியதாகவும், அதிபருக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும் மாணவி நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியென தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்றம் 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணையும், 4 லட்சம் நஷ்ட ஈடும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டணையும், 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத்தவறும் பட்சத்தில் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டணையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார்.

பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்திற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் !

பெருந்தோட்ட பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்திற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான பிரதமரின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதமரின் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் பாராளுமன்றத்தில் அதனை தெரிவித்துள்ள போதும் அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு இல்லாவிட்டால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை ஏமாற்றி விடும் என்று குறிப்பிட்ட அவர், உதாரணத்துக்கு தொழிலாளர்கள் தமது வீட்டை ஒரு அடி நகர்த்தி கட்டினாலே வழக்கு, வேலை நிறுத்தம் என தோட்ட நிர்வாகம் புறப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதனைக் கருத்திற்கொண்டு தோட்ட நிர்வாகத்துக்கு முறையாக அறிவிக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அவ்வாறு காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், ஏனைய விவசாயிகளுக்கு வழங்க தீர்மானித்துள்ள வங்கிக் கடனை அறவிடாமல் விடும் சலுகையை தோட்டப் பகுதி விவசாயிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“நான் இரண்டு விடயங்களுக்காகவே இலங்கைக்கு மீண்டும் வந்தேன்.”- இராஜினாமாவின் பின்பு பசில் ராஜபக்ச !

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் தகுதியான எவரேனும் எனது இடத்திற்கு வரத் தயார் எனில் கட்சி அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராஜினாமா கடிதத்தை கையளித்ததன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“என்னால் முடிந்தவரை நான் செய்ய வேண்டியதை செய்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் மக்கள் எதிர்பார்த்ததை எல்லாம் செய்ய முடியவில்லை. இலங்கைக்கு வந்தபோது நான் இரண்டு விடங்களை எதிர்பார்த்து வந்தேன். அந்த நேரத்தில் என் மீது இரண்டு பெரிய குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன

அதாவது 2015 ஆம் ஆண்டு நான் பல்வேறு ஊழல்கள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. பல வருடங்களின் பின்னர் கடந்த வாரம் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன். அந்த வழக்குகளை எதிர்கொள்வதே எனது முதல் எதிர்பார்ப்பாக இருந்தது.

இரண்டாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு நான் பொறுப்பேற்க விரும்பினேன். அவரது தலைமையின் கீழ் அவருக்கு வெற்றியை வழங்க விரும்பினேன்.  அந்த இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்பட்டன. அதைத் தவிர, நிதியமைச்சர் பதவி கிடைக்கும், நாடாளுமன்றத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை. அவ்வளவுதான்.

தனிப்பட்ட ரீதியில் 21 ஆம் திருத்தத்தை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். 21 குறித்து அரசாங்கம் எடுக்கும் தீர்மானத்துடன் இணங்க முடியாது என்பதை முன்னரே உணர்ந்ததாலேயே பதவி துறந்தேன்.என்னை இலக்காகக் கொண்டே 21 கொண்டு வரப்பட்டுள்ளது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். எனினும் இது தொடர்பில் கட்சி ரீதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை. நாளை என்றாலும்கூட எந்தவொரு தேர்தலுக்கும் பொதுஜன பெரமுன தயார். எம்மவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி நாடு இந்நிலைமையை அடைந்தமைக்கு மக்களும் ஒருவிதத்தில் பொறுப்பு கூற வேண்டும்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.