15

15

“இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைப்பேன்.”- பொன்சேகா

நாட்டின் நிலைமை தொடர்பாக பிரதமரிடம் எந்த திட்டமும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் மக்களை நிரந்தரமாக ஏமாற்றி வருகிறதென குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதன்போது, பிரதமரின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியேற்று ஊழல்வாதிகளை தண்டிக்க விருப்பம் இல்லையா என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “நான் பொலிஸ் அமைச்சரானால் முதலில் இந்த அரசாங்கத்தில் உள்ள அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். அதுதான் பிரச்சினை. ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்பாகவே நான் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது எனக்கு எந்த நிபந்தனையும் இருக்கவில்லை.

செய்ய வேண்டிய திட்டம் பற்றி பேசினேன். அந்த திட்டத்திற்கு ஜனாதிபதி உடன்படவில்லை. இதனையடுத்து, ரணிலுக்கு பதவி வழங்கப்பட்டது. எனினும் அவர் எதுவுமே செய்யாமல் இருக்கிறார்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ரணில் தரப்புடன் சேருவதற்கு எங்களுக்கு மூளையில் கோளாறு இல்லை.” – கோட்டாபாய தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவம் பெறுவதற்கு தமது கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் மூளையில் கோளாறு இல்லையென பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவனின் பங்காளி கட்சிகள் பல ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பில் பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவமிடம் வினவிய போதே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

எமது பங்காளி கட்சிகள் ஐ.தே.க வுடன் இணைந்துள்ளாதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சி. அவ்வாறானதொரு கட்சியை விட்டு வெளியேறி மற்றுமொரு கட்சியில் இணையும் அளவிற்கு யாருக்கும் மூளையில் பிரச்சினை இல்லை. ஒரு பெரிய கட்சியை விட்டு யாரும் அதிகாரம் இல்லாத ஒரு கட்சியில் சேர மாட்டார்கள். என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச தலைமையில் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய மனதை தயார்படுத்த வேண்டும்.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க

“அதிகாரத்தை விட்டுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இப்போதாவது மனதை தயார்படுத்த வேண்டும். அதிகார போட்டி காரணமாக தாமதமாகி வரும் உத்தேச 21வது அரசியலமைப்புத் திருத்தத்தை தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாடலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் போராட்டங்கள் ஓய்ந்துள்ளதாக அரசாங்கம் நினைத்தால் அது தவறாகும்.  21ஆவது திருத்தச் சட்டத்தை தாமதப்படுத்துவது அரசாங்கத்தையும், நாட்டையும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும்.

ஜனாதிபதியைச் சுற்றியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள சிலர் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை தாமதப்படுத்துவது தவறாகும். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அதனை நிறைவேற்ற துரிதப்படுத்த வேண்டும் வேண்டும்.

சர்வதேச உதவியை நாட வேண்டுமானால், அதற்கு ஏற்றாற்போல் எமது செயற்பாடுகளை சரிசெய்ய வேண்டும்.” என தெரிவித்தார்.

 

கொக்கட்டிச்சோலையில் 20 வயதுடைய மனைவியை கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்த கணவன் !

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை  நெரித்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகழடித்தீவு காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது 2 அரை வயது குழந்தையை தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டிற்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் பிற்பகல் 12 மணியளவில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“ஷாபி மீதான வெறுப்புணர்வு சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம்.”- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக ஊடக பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பொறாமை, வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஷாபி மீது உமிழப்பட்ட வெறுப்பிற்கு வைத்தியர் ஷாபி வழங்கியுள்ள பதிலிற்காக பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் வைத்தியர் ஷாபினை வணங்குகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.