16

16

இலங்கையில் மூடப்பட்ட 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் !

நாட்டிலுள்ள சுமார் 3 ஆயிரத்து 500 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பேக்கரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சுமார் 2 இலட்சம் பேர் வேலையினை இழந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக 50 சதவீதமான பேக்கரிகள் செயல்படாமல் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முட்டை, வெண்ணெய், மரக்கறி, தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பேக்கரித் தொழிலுக்கு வழங்குபவர்களும் தங்களது வருமான ஆதாரங்களை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பேக்கரிகளின் உரிமையாளர்கள் வங்கிகளில் பெற்ற கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தருமாறு பிரதமருக்கு இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி பொருட்களின் விற்பனையும் சரிவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் பணிஸ் ஒன்றின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கும் எனவும், அதனை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். பெட்ரோல் நெருக்கடியால் 90 சதவீதமான பேக்கர உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பேக்கரி பொருட்களை விநியோகம் செய்யும் லொரிகள் 5 முதல் 6 நாட்கள் வரை பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதனால், தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நீளும் எரிபொருள் வரிசை – இருவர் பலி !

எரிபொருள் மற்றும் எரிவாயுவிற்கான வரிசைகளில் இன்று இரண்டு மரணங்கள் பதிவாகின.

பாணந்துறை – வேகட பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்ற நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 53 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது மகனுடன் எரிபொருள் வரிசையில் காத்திருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பூகொட பகுதியில் எரிவாயு வரிசை அருகில் ஒருவர் உயிரிந்துள்ளார். 64 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்படி அதிகாரத்தை கைப்பற்றுவோம் – சஜித் பிரேமதாஸ

மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும் எச்சில் துப்பும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நாட்டின் இளைய தலைமுறையை, தொழிநுட்பத்தில் பரிச்சயமான உலகில் கொடிகட்டிப் பறப்பதற்கு உதவும் முகமாக “வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை” வழங்கி வைக்கும் “பிரபஞ்சம்” முன்னோடித் திட்டத்தின் 22 ஆவது கட்டமாக இன்று (16) மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உள்ள நவயாலதென்ன கடுகஸ்தோட்டை, சமுத்திராதேவி மகளிர் கல்லூரிக்கு, எட்டு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் (846,000) ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு பேசிய அவர்,

அவ்வாறு வக்குரோத்தடைந்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டிற்காக மூச்சுத் திட்டம், இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான பிரபஞ்சம் வேலைத்திட்டம், பேருந்து நன்கொடை திட்டம் போன்ற சமூக நல திட்டங்களை செயல்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டில் கல்வி முறை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பாக ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் பொறியியல் போன்ற பாடப்பரப்புகள் முறையாகவும், வினைதிறனாகவும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முறைப்படி நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதைவிடுத்து மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும் எச்சில் துப்பும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

குறைபாடுகள்,போதாமைகள் மற்றும் இயலாமைகளை கூற அரசாங்கமொன்று தேவையில்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வாயாடல்கள் மற்றும் அறிக்கைகளை ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்கள் – உலக சுகாதார நிறுவனம் விசனம் !

ஆப்ரிக்காவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் இன்று உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது.

உலகளவில் 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 72 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என பொது அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில், “குரங்கு அம்மை வைரஸ் பரவல், ஆப்பிரிக்காவுடன் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பிரதான ஊடகங்களில், அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளனர். இதையடுத்து உலக சுகாதார நிறுவனம், நிபுணர்களுடன் இணைந்து, குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அந்த அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வைரஸ் தொற்று விரைவில் புதுப்பெயரில் அழைக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியை – பெற்றோருக்கு பணம் கொடுக்க முனையும் சித்தன்கேணி பாடசாலை நிர்வாகம் !

யாழில் தரம் 2ல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆசிரியையால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் 7 வயது மாணவியை ஆசிரியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 10 ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த ஹர்ஷா ஜெயதீசன் வயது 7 என்ற மாணவியே இவ்வாறு அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டது என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க பாடசாலை நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் சைக்கிள்களுக்கும் இனசுரன்ஸ் !

காப்புறுதி நிறுவனங்கள் சைக்கிள்களுக்கு புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டால் தற்போது சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வருட காலத்திற்குள் வாங்கும் சைக்கிள்களுக்கு இந்த காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டால் ரூ.ஒரு இலட்சமும், விபத்தில் சைக்கிள் முற்றாக சேதமடைந்தால், அந்த சைக்கிளின் முழு மதிப்பையும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் முழுக்க எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் – இலங்கையை வந்தடைந்த இறுதி எரிபொருள் கப்பல் !

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன் வசதியின் கீழ் கிடைக்கும் 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் கொழும்பை வந்தடைந்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை எரிபொருள் நிறுவனங்களுக்கு 735 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, மீண்டும் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் திகதி தொடர்பில் தற்போது சரியாக குறிப்பிட முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக இன்று அதிகாலை முதல் மக்கள் வரிசைகளில் காத்திருந்தமையினை சுட்டிக்காட்டத்தக்கது

இலங்கை, சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கு ஏற்பாடு – சீனத்ததூதரகம் !

கடன்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் சி ஷென்ஹோனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, ​​இலங்கைக்கான சீனாவின் உதவிகள் பாரிய முதலீடாகவும் வர்த்தகமாகவும் தொடரும் என சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை இலங்கையில் தொடர்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் எனவும் இரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

சீனாவும் இலங்கையும் இணைந்து இலங்கையில் சுமார் 11,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும் கொவிட் 19 உட்பட ஏனைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பூங்கா போன்ற திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் சீன மற்றும் உலக முதலீட்டாளர்களை பாதுகாக்க இலங்கை நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

5 வயது மகனை ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் !

வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளியான சிறுவனின் தாய் நேற்று (15) இரவு சிறுவனை களனி ஆற்றில் வீசி விட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, ​​அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். எனினும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
குறித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்படி தாயின் மூத்த மகன் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

´”மாலை 5.20 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறினார். எங்கே போகிறீர்கள் என கேட்டேன். எதுவும் பேசவில்லை. தம்பியை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளது. அம்மா என்னை விட தம்பி மீதுதான் அதிகமாக பாசம் காட்டுவார். அப்படியிருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை. என தெரிவித்துள்ளார்.

கௌதம் அதானிக்கு எதிராக இலங்கையில் பேராட்டம் !

முன்னாள் மின்சார சபை தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ  “அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலை தொடர்பான உரிமத்தை வழங்குமாறு மோடி கோட்டாபாய ராஜபக்சவுக்கு அழுத்தம் வழங்கியதாக தெரிவித்த கருத்து பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. குறித்த கருத்தை அதானி குழுமமும்,  ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ஸவும் மறுத்திருந்த நிலையில் மின்சார சபை தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தனது பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.

 

இந்த நிலையில், இந்திய அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானிக்கு எதிராக பம்பலப்பிட்டியில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன் போது போராட்டக்காரர்கள் அதானி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.