17

17

மனித உரிமையும் ஜனநாயகமும் தனிச்சொத்துடமை என்கிறாரா பாண்டிபஜார் போராளி ராகவன்? இலக்கிய விமர்சகர் வாகீசன்

திரு.சின்னையா ராஜேஸ்குமார்(ராகவன்) அவர்களுக்கு,
‘தேசம்நெட்’ இதழில் வெளியாகியிருந்த ‘தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்’ என்ற எனது கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த தாங்கள் என்னை நோக்கி “எனது பெயரைக் கூடக் குறிப்பிட திராணியற்று என்னை பாண்டிபஜார் போராளி என்று கூறி என் மீது அவதூறு பரப்புகிறார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவரும் அறிவார்கள் கடந்த 2 வருடங்களாக தாங்களும் தங்களது இலண்டன் இலக்கியவாதியாகிய ஒரு நண்பரும் சேர்ந்து எனக்கு ‘தோழர் உஉ’ என்ற பட்டத்தை வழங்கி (நான் ‘உண்மைகள் உறங்குவதில்லை’ என்ற கட்டுரையொன்றினை எழுதியபடியால்) அந்தப் பெயரிலேயே என்னை நோக்கி செய்த அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்குரிய Screenshot எல்லாம் என்னிடம் ஆதாரமாக உண்டு, வேண்டுமானால் பதிவிடத்தாயார். அப்போதெல்லாம் உங்களுக்கு எனது பெயரைக் குறிப்பிட திராணி இருக்கவில்லையா ??? எவ்வளவு கேவலமாக எல்லாம் என்னை விழித்திருந்தீர்கள். விஷப்பாம்பு என்றீர்கள். விஷக்கிருமி என்றீர்கள். ஒரு மனநோயாளி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர் என்றீர்கள். அவதூறு என்பது உங்கள் போன்றவர்களுக்கு எல்லாம் இரத்தத்தில் ஊறிப் போன விடயம்.
நிற்க, இலண்டன் வந்த சபாலிங்கத்தை நீங்கள் சந்திக்க மறுத்ததாக நான் கூறிய விடயத்தை மறுத்த நீங்கள் “சபாலிங்கத்தை நான் சந்திக்க மறுத்ததாக அப்பட்டமான பொய் ஒன்றை உதிர்த்திருக்கிறார். சபாலிங்கம் எனக்கு சிறு வயதிலே பழக்கமானவர். எனது ஊர்க்காரரை தான் திருமணம் செய்து கொண்டார். அவரும் புஸ்பராஜாவும் லண்டன் வந்து என்னை சந்தித்து உரையாடினர். அது பற்றி ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் புத்தகத்தில் புஸ்பராஜா படத்துடன் பதிவு செய்துள்ளார்.” என்று ஒரு அப்பட்டமான பொய்யினைக் கூறி புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற புத்தககத்தில் இருந்து ஏதோ இரண்டு பக்கங்களை Photocopy செய்து பதிவேற்றி மக்களை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண முகநூல் வாசகன் இதையெல்லாம் check பண்ணி பார்க்க மாட்டான் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இப்படி ஒரு மாபெரும் மோசடியைச் செய்துள்ளீர்கள்.
இப்போது நான் குறிப்பிடுகிறேன். எனது கையில் உள்ள ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் (இது 2ம் பதிப்பு) 590 ம் பக்கத்தில் (இந்தப் புத்தகத்தின் 1வது பதிப்பில் 560ம் பக்கம்) உங்களைச் சந்தித்தது பற்றி புஷ்பராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்
“—அதன் பின்பு 1993 ம் ஆண்டு நவம்பரில் லண்டனில் சந்தித்தேன். நீண்ட காலத்திற்கு பின் சந்தித்ததால் பல விடயங்கள் பேச வேண்டி இருந்தது. இருவரும் நீண்ட நேரமாகப் பேசினோம்—-“. இதில் சபாலிங்கம் குறித்தோ அல்லது சபாலிங்கத்துடன் அவர் உங்களை வந்து சந்தித்தது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. இப்போது பகிரங்கமாக உங்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். நீங்கள் கூறியபடி சபாலிங்கத்துடன் வந்து உங்களைச் சந்தித்ததை புஷ்பராஜா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்றால் அது நீங்கள் வைத்திருக்கும் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்தில் உள்ளது என்ன கூறியிருந்தார் என்று பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா ??? முப்பது வருடங்களாக மக்களை ஏமாற்றியது போதும். நிறுத்திவிடுங்கள். இனியாவது தயவு செய்து மனந்திரும்புங்கள்.
._._._._._.
அசோக் யோகன் கண்ணமுத்துவின் பதிவில் இருந்து…
 
நண்பர் சபாலிங்கம் தமிழிழ விடுதலைப்புலிகள் தொடர்பாக ஒரு ஆவணம் எழுத எண்ணி, பல தரப்பினரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த காலம் அது. சபாலிங்கம் புலிகளால் 1994 ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவ் ஆவண முயற்சி தொடர்பாக இராகவனை சந்தித்து உரையாட லண்டன் சென்றிருந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து இராகவனோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றும், அவரால் முடியவில்லை. இராகவன் பக்கத்திலிருந்து எந்த தொடர்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றதோடும், இராகவன் மீது கடுங்கோபத்தோடும் பிரான்சிக்கு திரும்பியிருந்தார்.
 
இந் நிகழ்வு சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. லண்டனில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் இது தெரியும். இச் சம்பவம் எனக்கும் சபாலிங்கம் ஊடாக தெரிந்திருந்தது.
இராகவனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இச் சம்பவம் தொடர்பாக கேட்டிருந்தேன். சபாலிங்கம் லண்டன் வந்து, புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததன் காரணமாக, சபாலிங்கத்தை தான் சந்திக்கவிரும்பவில்லையென்று என்று கூறினார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நண்பர் சபாலிங்கம் அவர்களின் நினைவுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இராகவன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் மீது மரியாதை கலந்திருந்த காலகட்டம்.
 
இந்த தலைமை தாங்கல் தொடர்பாக சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்கள் அதிருப்தியும், என் மீது கடும் விமர்சனங்களையும் கொண்டிருந்தனர்.
வாசன் இப் பிரச்சனையை எழுதிய போது, இராகவன் சபாலிங்கத்தை சந்திக்க விரும்பான்மைக்கான காரணத்தை (என்னிடம் சொன்னதை) சொல்லி இருக்கலாம். ஆனால், இதை மறைத்து, சபாலிங்கத்தை சந்தித்ததாக பொய் ஒன்றை கூறுகின்றார். தவறுகளை ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை பொய்மை , கபடம், மோசடி .. ?
 
இராகவன் தன்மீது வைக்கப்படும் நேர்மையான – உண்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவராகவே, புலிகளின் காலத்திலிருந்து இற்றைவரை தன் வாழ்வை தொடர்கின்றார்.
விமர்சனங்கள் வைப்பவர்களை மனநோயாளிகள் என்றும் அவதூறாளர்கள் என்றும் பட்டம் சூட்டி மகிழ்வது அவரின் உளவியல் மனப்பாங்காக இருக்கின்றது. இப் பட்டங்களை எனக்கும் அவர் அடிக்கடி தாராளமாக வழங்கி மனமகிழ்வு கொள்ளும் ஒரு மனநிலையை தொடர்ச்சியாக பேணுகிறார்.
இராகவன் அவர்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்; நாங்கள் இவ்வாறு முரண்பட்டு கொண்டிருப்பதை விடுத்து, நாம் எல்லோரும் சுயவிமர்சனங்களோடும், உண்மையோடும்- நேர்மையோடும் , பொது வெளி ஒன்றில் அனைத்து முரண்பாடுகளையும் பேசி உரையாடும் தளம் ஒன்றை உருவாக்குவோம். இவ் உரையாடலில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். நீங்களும் அவசியம் வரவேண்டுமென விரும்புகின்றேன்.

“எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை.”- ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு !

நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

வழங்குனர்களுடனான நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலா பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது. தற்போதுள்ள எரிவாயு கையிருப்புக்களை முறையாக விநியோகிப்பதற்கும் போதுமான எரிவாயு கொள்ளளவை முன்கூட்டியே பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தொடரும் கடன்கள் – இந்தியாவிடம் இருந்து கடனுதவியாக 50,000 மெட்ரிக் தொன் அரிசி !

இந்தியக் கடனுதவித்திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தியக்கடன் தொடர்பான கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின்கீழ் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கும், அரிசி விலை அசாதாரணமாக அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே நேரம் நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது எனவும் ஆனால் தற்போது 470,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

வசதி படைத்தோருக்கு மட்டுமே எரிபொருள் – மன்னாரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் !

தலைமன்னாரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியில் அமைந்துள்ள  பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார். தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பே இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான லீற்றர் அனுமதி இன்றி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்த நிலையில் எரி பொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

தலைமன்னார் பிஜர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்றைய தினமும், இன்று நள்ளிரவும் என இரு தடவைகளாக 6500 லீற்றர் மண்ணெண்ணெய் படி சுமார் 13000 லீற்றர் மண்ணெண்ணெய் மக்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதிகாலை நூற்றுக்கணக்கான மக்கள் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற நிலையில் 400 ரூபா வீதம் 500 பேருக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது 1000 பேருக்கு 400 ரூபாய் வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்கள் குடும்ப அட்டைகளிலும் பதிவுகளை மேற்கொண்டு மண்ணெண்ணெய் பெற சென்ற நிலையில் 200 நபர்களுக்கு கூட வழங்காத நிலையில் மண்ணெண்ணெய் நிறைவடைதுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குழப்பமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த நிலையில் எரிபொருள் தாங்கியை மக்கள் முன்னிலையில் சோதித்த நிலையில் தாங்கியிலும் மண்ணெண்ணெய் இருக்கவில்லை.

ஆகவே 13000 லீற்றர் மண்ணெண்ணெய்க்கு என்ன நடந்தது என விசாரித்த நிலையில், 250 லீற்றர் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் தங்களுக்கு அவ்வாறு வழங்கப்படவிலை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  அதன் பின்னர் எரிபொருள் வழங்கப்பட்ட பதிவுகளை சோதித்த நிலையில் இன்று அதிகாலை பணம் படைத்த சிலருக்கு நூறுக்கு மேற்பட்ட லீற்றர்கள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரை கைது செய்யுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இரவு நேரத்தில் கொள்ளை – பெண் உட்பட மூவர் கைது !

பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட நகைகளில் ஐந்தரைப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக் கதவினை உடைத்து வாள்களுடன் உள்நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை ஏற்படுத்தியதுடன் 12 தங்கப் பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பித்தது.

சம்பவத்தையடுத்து படுகாயமடைந்தவர்கள் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜித் லியனகேயின் பணிப்புக்கு அமைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் பலாலி பகுதியில் வைத்து 36 வயதுடைய ஒருவரும் முடவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக மற்றுமொரு ஆணும் கொள்ளையிட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இதன்போது, சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாள்களும் கைப்பற்றப்பட்டன. மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் நால்வரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“பயப்படாதீர்கள் – இலங்கையில் பஞ்சம் ஏற்படாது.” விவசாய அமைச்சு அறிவிப்பு !

நாட்டில் தற்போது பரந்தளவிலான விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பஞ்சம் ஏற்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒருமாதத்திற்கு 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் அரிசியே விநியோகிக்கப்படுவதாகவும் அதனை 10 ஆயிரம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேவைக்கு ஏற்ப சதோச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளில் அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு முன்னர், 248,000 ஹெக்டேயர் நிலப்பரப்பே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது 470,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் மக்கள் வீணாக அச்சப்படத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.” – அமைச்சர் டக்ளஸ்

“இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது, பிரபாகரன் உள்ளடங்கலாக சகல இயக்கங்கள், சகல கட்சிகளிற்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுத்தது போன்றது. ஆனால் பிரபாகரன் உட்பட அதனை தரப்பினரும் துப்பிவிட்டனர். அன்று அதனை ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது, மாகாணங்களிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்தரப்புக்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான முயற்சிக்கு மத்திய அரசு அதிகாரமளிக்கும் என நம்புகின்றீர்களா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,

கரைப்பவன் கரைத்தால் கல்லும் கரையும் என நீண்ட காலமாக நான் சொல்லியும் வந்திருக்கின்றேன். செய்தும் வந்திருக்கின்றேன். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியபோது நான்கு விடயத்தினை முன்வைத்திருந்தேன்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஊடாக தேசிய நீரோட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டலாம் என நான் முன்வைத்து வந்தேன்.

அதனை நான் செய்தும் வந்தேன். துரதிஸ்டவசமாக மக்கள் ஆணை எனக்கு போதிய அளவு கிடைக்காமையால் என்னுடைய அரசியல் பலத்திற்கு ஏற்ப நான் செய்து வருகின்றேன்.

மேலும் மாகாண சபை முறைமையே சிறந்த ஆரம்ப புள்ளி என சொல்லி வந்தேன். ஆனால் எந்த மண்ணில் பிறந்து எந்த மண்ணிலிருந்து பேட்டி எடுக்கின்றீர்களோ அங்கு இருந்த இயக்கமும், அதற்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளும் அந்த செயற்பாடு துரோகத்தனமானது நடைமுறை சார்த்தியம் இல்லை என்றெல்லாம் சொன்னார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்திய பிரதமர் மோடியிடம் மாகாண சபை தொடர்பில் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தார்கள். நான் 87ம் ஆண்டு சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரன் உள்ளிட்ட தரப்பினருக்கு இவ்வளவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது.

அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது, பிரபாகரன் உள்ளடங்கலாக சகல இயக்கங்கள், சகல கட்சிகளிற்கும் வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுத்தது போன்றது. ஆனால் பிரபாகரன் உட்பட அதனை தரப்பினரும் துப்பிவிட்டனர். அன்று அதனை ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது என்பதை திரும்பவும், திரும்பவும் இந்த மண்ணிலிருந்து சொல்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மைதானத்துக்குள் மதுபோதையில் வந்த பேராதனை பல்கலைகழக மாணவர்கள் – கைது செய்த பொலிஸார் !

பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின்போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்றபோட்டிகளின் போது மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு ரசிகர்களின் அனுமதிச் சீட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மதுபோதையில் வந்த குழுவொன்று பொலிஸாரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

கலைப்பீடத்தில் 4ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 3 மாணவர்களும், மாணவி ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 28 வயதுடைய குருநாகல், கொஸ்லந்த மற்றும் கெக்கிராவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடரும் பொருளாதார நெருக்கடி – அகதிகளாக தமிழ்நாடு செல்லும் இலங்கை தமிழர்கள் !

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்கள் இலங்கையில் இருந்து சட்ட விரோதமான முறையில் தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று (17) இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண், 4 குழந்தை உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தீடை பகுதியில் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற பொலிசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து விசாரணை முடிந்த பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்துள்ளவர்கள் வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் என தெரிய வந்துள்ளது.

ரணில் பிரதமா..? ஊடகப்பேச்சாளரா..? – அனுரகுமார திஸாநாயக்க விசனம் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணாமல், நெருக்கடி நிலை பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் ஊடகப் பேச்சாளராக செயற்படுவதாகவே தெரிகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் பல பரிந்துரைகளை நாங்கள் செய்துள்ளோம். இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உதவும் முக்கிய ஆலோசனைகளையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளோம்.

இந்த நெருக்கடி நீடித்தால் வாழ்க்கை எளிதாக இருக்காது. உண்மை என்னவென்றால், பிரதமர் இப்போதுதான் ஊடகப் பேச்சாளராக இருக்கிறார், தீர்வுகளை அமுல்படுத்துவத்தை விடுத்து நெருக்கடி பற்றி பலமுறை பேசுகிறார்” என்று அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார் .
நாட்டில் ஜனநாயகம் பேணப்படவேண்டுமாக இருந்தால், மோசடி மற்றும் அநீதி நிறுத்தப்பட வேண்டும் என்றால், 21 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவது இன்றியமையாதது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .