18

18

முன்னைநாள் பிரபல செய்திவாசிப்பாளர் – இன்று சமோசா விற்கும் நிலை !

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம்.

அதில், ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் சமோசா விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள்.

சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் தான், ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், “தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறர். ஆப்கானில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்தி – மாலை மலர் (நன்றி)

“இந்த இலங்கை மக்கள் ஒரு நேர உணவுக்காக காட்டு விலங்குகள் போல சண்டை போடுவார்கள்.”- வெளியான எச்சரிக்கை !

இறைச்சிக்காக காட்டு விலங்குகள் சண்டையிட்டுக்கொள்வதை போன்ற ஒரு நிலைமை நாட்டில் உருவாவதை தடுக்க முடியாது என்று சுகாதார தொழில்வல்லுனர்களின் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(18) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் நாடு பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. விசேடமாக நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை அரசாங்கம் தற்போதைய நிலையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்னும் சில நாட்களில் இவ்விடயமானது மேலும் உறுதிப்படுத்தப்படும்.

தற்போதைய நிலையில் அரச சேவைக்கு இரண்டு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கூடாக அரச சேவையினூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். அவ்வாறு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்புகளும் இல்லை.

சில சந்தர்ப்பங்களில் நாடு முடக்கத்துக்கு செல்லலாம்.

இவ்வாறான ஒரு நெருக்கடி நிலைமை காணப்படும்போது நாட்டை நிர்வகிப்பவர்கள் எவ்வாறு நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் என்ற விடயத்தை நாம் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாடு தற்போது பேரழிவை எதிர்கொண்டுள்ளது. பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது போன்றே நாட்டை தற்போது முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

அவ்வாறு முகாமைத்துவம் செய்வதற்கு நாட்டைப்பற்றி சிந்திக்கக்கூடிய தரப்பினர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். எனினும் நாட்டைப் பற்றி சிந்திக்காத தங்களது வீடுகளுக்கு தீமூட்டிய விடயங்களைப் பற்றி கதைப்பவர்களும் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்.

பெரும்பான்மையான அரசியல்வாதிகள் தற்போதைய நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர். மீண்டும் எவ்வாறு அரசியலுக்கு வரலாம் என்பது குறித்து மட்டுமே அவர்கள் சிந்தித்து செயலாற்றி வருகின்றனர்.

இவ்வாறானவர்களுடன் அரசாங்கமும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்படுமாயின் அவ்வாறான ஒரு ஜனாதிபதியின் கீழ் இந்த நாடு முன்கொண்டு செல்லப்படுமாயின் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட நிலைமையைவிட மிகவும் மோசமான ஒரு நிலைமை நாட்டில் உருவாகும்.

மக்களுக்கு இடையே முரண்பாடுகள் வெடிப்பதை தடுக்க முடியாது.

இறைச்சித் துண்டுக்காக காட்டு விலங்குகள் சண்டையிட்டுக்கொள்வதை போன்று அல்லது குரங்குக் கூட்டங்கள் சண்டையிட்டுக்கொள்வதை போன்ற நிலைமை உருவாவதை தடுக்க முடியாது.” எனவும் கூறியுள்ளார்.

“உணவு நெருக்கடியால் 5 மில்லியன் இலங்கையர்கள் நேரடியாக பாதிப்படுவர்.”- தொடர்ந்தும் அச்சுறுத்தும் பிரதமர் ரணில் !

“உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடும். எனினும் உணவு நெருக்கடியில் எவரையும் பசியில் வாடக்கூடாது என்பதே எமது கொள்கை” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடும் என்றாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்று இதன்போது தெரிவித்தார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

உணவு நெருக்கடியைத் தணிக்கும் முயற்சிகளை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் பிரதமர் பணிப்புரை விடுத்ததுடன், இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் திட்டத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமுல்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் மேலும் அறிவுறுத்தினார்.

காரில் வந்தவர்களுக்கு சட்டவிரோதமாக எரிபொருள் விநியோகம் – பெற்றோல் பௌசருக்கு நேர்ந்த கதி !

கொழும்பு வெள்ளவத்தை மரைன் ட்ரைவ் பகுதியில் பௌசர் ஒன்று கார் ஒன்றுக்கு வீதியில் வைத்து எரிபொருள் நிரப்பும் படங்களும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
May be an image of 3 people, car and outdoors
எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் வரிசைகளில் காத்துக்கிடக்கும் நிலையில் இச்சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. மேலும் அந்தக் கார் மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமானது என்று காரின் முகப்புக் கண்ணாடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை விநியோகித்த CEYPETCO மற்றும் LIOC ஆகிய நிறுவனங்களால் உரிமம் பெற்ற மூன்று எரிபொருள் வாகனங்களின் போக்குவரத்து உரிமங்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த எரிபொருள் வாகனங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டவர்களை காணொளி மூலம் தமது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு எரிசக்தி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்;.

பைசரை கொடுத்து நெல் பெறுகிறது இலங்கை – பலே ஐடியா !

இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 ஃபைசர் தடுப்பூசிகளுக்காக அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தத் தடுப்பூசிகள் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை விட்ட வெளியேறும் மருத்துவர்களும் – பொறியியலாளர்களும் !

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் ஏற்கனவே பல்வேறு தொழில்களுக்கு வெளிநாடுகளில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் அது நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மருத்துவப் பட்டப்படிப்பைக் கற்கும் இளைஞர்கள் இறுதிப் பரீட்சை எழுதியதன் பின்னர் இங்கிலாந்தில் வேலைக்குத் தேவையான பரீட்சைக்குத் தோற்றுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

முட்டாள்களிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் – பெற்றோல் வரிசைகளில் முடங்கும் நாட்டின் ஊழியப்படை !

கடந்த இரு தினங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கான வரிசை, உணவுக்கான வரிசை, என பார்க்கும் இடமெங்கும் வரிசைகளே தொடர்கின்றன. பல இடங்களில் எரிபொருளுக்காக நின்ற இளைஞர் குழுக்களிடையே மோதல்கள்.அரச அதிகாரிகள் தொடங்கி தனியார்துறை ஊழியர்கள் என அனைவரும் பெற்றோல் செட்களில் கிடையாக கிடக்கின்றனர். நேற்றைய தினம் பெற்றோலுக்காக நான் சுமார் 12 மணிநேரங்களுக்கு மேலாக காத்திருந்தும் பெற்றோல் இல்லை. வந்த பெற்றோலும் பணம் உள்ளோருக்கும் – அதிகார வர்க்கத்துக்கும் போய் விட்டதாக வரிசையில் நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
தலைமன்னாரில் நாள் முழுக்க மண்ணெண்ணெய்க்காக காத்து நின்ற மக்களுக்கு அதனை கொடுக்காமல் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் பின்புறமாக கொடுத்திருக்கிறார் பெற்றோல் செட் முகாமையாளர்.
மூவர் வரிசையில் நின்றே உயிரிழப்பு.
கடந்த இரு நாட்களில் பெற்றோல் செட்களில் பல மணிநேரம் வரிசையில் நின்றதால் மூவர் வரை மரணம். அதிலும் நேற்று ஒரு வீடியோவை காணக்கிடைத்தது. தந்தை பெற்றோலுக்காக ஆட்டோவுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மகன் பெற்றோலுக்காக மோட்டார்சைக்கிளுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட காத்திருப்பு முடிவில் ஆட்டோவில் காத்திருந்த தந்தை இறந்துவிட்டார். இது தெரியாத மகன் அப்பா அப்பா என் தட்டியெழுப்பியும் அவர் எழவில்லை. இறந்தவரின் தலை கீழே விழ மகன் உடைந்து போய் அழுதுகொண்டே கீழே உட்கார்ந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்த்தது முதல் அவ்வளவு வேதனையாக இருந்தது. https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0EUUPndwrY5aPi5YxADHTHX9yTQek8fR8h2mFD3FhSLXBnZuEB5RCRZy58rRk7bAGl&id=100006710538212
உண்மையில் நாம் மிக நெருக்கடியான சூழலை நெருங்கிகொண்டிருக்கிறோம் என்பதையே கடந்த இரண்டு நாட்கள் தெளிவாக எனக்கு காட்டியுள்ளன.
மருத்துவமனைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இப்படியாக நாட்டினுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
கடந்த பல தினங்களாக இலங்கையின் பெட்ரோல் செட்களில் லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அங்கு இலங்கை மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட நாளாந்தம் தொழிலுக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பெட்ரோல் செட்களில் மட்டுமே காத்துக்கொண்டிருந்த நாட்டினுடைய நாளாந்த வருமானம் என்னவென்பதை அரசாங்கம் நினைத்திருக்கவில்லை.  இது தொடர்பில் எந்த ஒரு ஆக்கபூர்வமான கருத்தையும் கூட இதுவரையில் அரசாங்கம் வெளியிட்டு இருக்கவில்லை.  அரசாங்கமும் அது சார்ந்த அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த ஒரு கவனமும் எடுக்காது இன்னமும் கடன் வாங்குவது தொடர்பில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த நிலைக்கு யார் காரணம்..?
ஒரு படிப்பறிவில்லாத சாதாரண நாட்கூலி வேலை செய்பவர்கள் கூட தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது. இந்த மாதத்துக்கான செலவுக்கு எவ்வளவு தேவைப்படும். வரவு எவ்வளவு..? செலவு எவ்வளவு..? மேலதிக செலவை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? மேலதிக செலவை ஈடு செய்ய என்னென்ன வழிகளில் உழைக்க வேண்டும். கையில் உள்ள பணத்தை மாதம் முடிவுவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல கோணங்களில் சிந்தித்து தன்னுடைய குடும்பத்தை கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்தத் திட்டமிடல்கள் ஓரளவுக்கேனும் இருப்பதாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் கூட  சாதாரண குடும்பங்கள் ஓரளவேனும் தாக்கப்பிடிக்கின்றன.
ஒரு சாதாரண பிரஜையிடம் – இந்த நாட்டின் சாதாரண கூலித் தொழிலாளியிடம் இருக்கக்கூடிய இந்த திட்டமிடல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாமையை இன்றைய பிரச்சனைக்கான ஒட்டுமொத்த காரணமாகும்.
பிரச்சினைகளுக்கான காரணம் அரசியல்வாதிகளே !
சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இன்று பொருளாதார நெருக்கடி சார்ந்து நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் பொறுப்பற்ற அரசியல் தலைவர்களே.! இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பதவியில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்.
மக்களின் உளவியல் நிலை மனோநிலை பற்றி கிஞ்சித்தும் யோசனை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் பதில்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் ஊடகங்களுக்கு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் “21ஆம் திகதியுடன் பெற்றோல் கையிருப்பு முடிந்துவிடும் அதற்குப் பிறகு இந்த நாட்டில் பெட்ரோல் இருக்காது.” எனக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு முட்டாள்தனமான ஒரு அறிவிப்பு இது. மக்களை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத அதிகார வர்க்கத்தின் ஒரு குரலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.
 பெட்ரோல் 21ஆம் திகதியுடன் முடிவடைந்த விடுகிறது என ஒரு அமைச்சர் அறிவித்தால் பாவம் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்..! வேறு வழியில்லை.  இரவு பகலாக காத்திருந்தேனும் அந்த பெட்ரோலை பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களின் உடைய ஒரே நோக்கமாக இருக்கும். இன்று பெட்ரோல் செட்களின் நிரம்பி வழியும் இந்த கூட்டத்திற்கு இந்த அமைச்சரின் அறிவிப்பே காரணம்.
அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் அறிவு தொடர்பாக அழிவு தொடர்பில் ஆருடம் கூற பதவியேற்றுக் கொண்ட ஜோசியர் போலவே அவரைக் காண முடிகின்றது. “இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – எல்லாப் பொருட்களின் கையிருப்பு முடிந்துவிட்டது – கடனுதவி கிடைக்க பல மாதங்கள் செல்லும்.” என மக்களை மேலும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கருத்துக்களையே அவர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மக்களை தெரியப்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் பிரதமர் என்ற நிலை எவ்வளவு கனதியான பொறுப்பில் உள்ளார் ரணில். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவதை இந்த அரசினுடைய நோக்கம் போல தோன்றுகிறது. இவ்வளவு நாள் ராஜபக்சக்கள் விலகி விட்டால் நாடு செழித்து விடும் என போர்க்கொடி தூக்கி கொண்டிருந்த கோட்டகோகம போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க வந்ததும் என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் ரணில் உள்ளாரா..? என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.
உள்ளதே  உணவு பற்றாக்குறை – எரிபொருள் தட்டுப்பாடு – சமையல் வாயு இல்லை என பல பிரச்சினைகளால் நொந்து துவண்டு போயுள்ள மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலின் தேவை அவ்வளவு அவசியமாக உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில்  உணவுத்தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தற்கொலைகள் நடந்தேறிவிட்டன. விரைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.
சரி என்னதான் தீர்வு..?
கடன்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய இறுதியான தருணத்தில் தற்போதைய தலைவர்கள் உள்ளனர். சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மட்டுமே நாட்டை முன்னேற்றும் என்ற ஒரு மாய பிம்பத்தை இலங்கையின் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். சரி வாங்க கூடிய கடன்கள் பற்றிய தெளிவு புரிதலாவது உள்ளதா எனக் கேட்டால் அதுவும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கை சர்வதேசநாணயநிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்பாலும் சலுகையற்ற கடன்களாகவே காணப்படுகின்றன. இந்த சலுகையற்ற கடன்களுக்கு வட்டி வீதமும் அதிகமாகும்.  மேலும் இந்த சர்வதேச அமைப்புகளிடமிருந்து நாம் பெறக்கூடிய கடன்கள் கூட தற்காலிகமாக ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியனவே தவிர பெரிதான மாற்றங்களை தரமாட்டாது. ஏனெனில் கடன்கள் அவ்வளவு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புக்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் எங்களுடைய எதிர்கால தலைமுறையை முழுமையாக மீண்டும் வெள்ளைக்கார நாடுகளுக்கு அடிமையாக்கிவிடும் என்பதே உண்மை.
எங்களுடைய தலைமுறையும் சரி எங்களுக்கு முன்னைய தலைமுறையினரும் சரி முழுமையாக கேள்வி பதில் வினா விடை அமைப்புக்கு பழக்கப்பட்டு விட்டோம். அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படக் கூடிய கல்வியில் பொருளியல் சார்ந்த விஷயங்கள் அடிப்படையிலிருந்தே கற்பிக்கபடுதல் வேண்டும். பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அப்போது மட்டுமே அந்த மாணவர்கள் பின்னாட்களில் வாக்காளர்களாக மாறுகின்ற போது அல்லது அரசியல் தலைவர்களாக மாறுகின்ற போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்க கூடிய பக்குவத்தை உருவாக்க முடியும். தேவையே இல்லாமல் யாரோ அரசன் மூன்று திருமணங்களை செய்து கொண்டார் – ஒரு அரசிக்கு 15 திருமணங்கள் நடந்தன என்றெல்லாம் மாணவர்களுக்கு கற்பித்து கொண்டிருக்கக்கூடிய பாடத்திட்டங்களுக்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் உடன் கூடிய கல்வி முறையை வழங்க முன்வரவேண்டும். விவசாயக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு தற் சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.   இப்படியாக கல்வித்துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களுக்கு சிறப்பான அத்திவாரமாக அமைய வேண்டும் என்பது எதிர் வரக்கூடிய அரசாங்கங்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.
இனவாதம் சார்ந்த பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு ஒற்றுமையோடு அனைத்து இனத்தவர்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இணைவது காலத்தின் கட்டாயமாகிள்ளது. மலேசியா,  சிங்கப்பூர் , குவைத் போன்ற நாடுகளின் பொருளாதார முறைமைகளை நமக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் எல்லாம் ஆட்சி மொழியாகவும் மதமாகவும் பிரதானமான ஒரு மதமும் மொழியும் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும்கூட எல்லா இனத்தவர்களையும் இணைத்துக்கொண்டு பயணப்படக்கூடிய பொருளாதார கட்டமைப்பு ஒன்றை காணமுடிகின்றது. இதுவே இன்றைய கால இலங்கைக்கும் அத்தியாவசியமானது.
மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அரசியல் தலைவர்களை இனிமேல் சரி மக்கள் தெரிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனவாத அரசியலை பேசிப்பேசியே இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் இந்த அரசியல் தலைவர்கள்.
வடக்கு- கிழக்கில் உள்ள  தமிழ்தேசிய கட்சிகளின்  தலைவர்கள் கூட – பாராளுமன்ற உறுப்பினர்களும் தான் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமிழர்களிடம் நாட்டை அளியுங்கள் அவர்கள் இலங்கையை மீட்டுத் தருவார்கள் என்றெல்லாம் இன்னமும் பழைய புலி அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீங்க கூடாது அதில் நீங்குவதில் இவர்களுக்கு இம்மியளவும் உடன்பாடு இல்லை. நுனி நாக்கில் தேனும் அடி நாக்கில் விஷமும் போல இந்த தமிழ் தலைவர்களின் உடைய நகர்வுகள் அமைகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தாலே வெளிநாட்டில் பலருக்கு குடியுரிமை கிடைக்கும். அவ்வாறு வெளிநாட்டில் குடியேறியோர் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு பண உதவி தொடங்கி அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவர். இப்படியாக இவர்கள் பேசக்கூடிய தமிழ் தேசியத்திற்கு பின்னாலேயே நூற்றுக்கணக்கான சுயநல அரசியல் புதைந்து போய் உள்ளது. இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழர்களுக்கு ராஜபக்சக்கள் செய்த கொடுமைகளை இலங்கை அனுபவிக்கிறது என்றெல்லாம் கடந்துவிட முடியாது. ஏனெனில் இங்கு எங்களுடைய தலைமுறையினரும் – எங்களுடைய பெரியவர்களும் – எங்களுடைய எதிர்கால சிறுவர்களும் கூட நடுத்தெருவில் தான் எரிபொருளுக்காகவும் பெற்றோலுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒன்றாய் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது பற்றி சிந்திப்பதே இன்றைய காலத்தின் ஆகப்பெரிய தேவையாகும்.