25

25

“முல்லைத்தீவில் தொடரும் அருவருக்கத்தக்க செயல்கள்.” – ரவிகரன் விசனம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான விடயத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் ஆசிரியர், மாணவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக ஊடகங்களினூடாக அறியக்கூடியதாகவிருந்தது.

குறிப்பாக அண்மைக்காலங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதை ஊடகங்களூடாக அறிகின்றோம்.

இத்தகைய சம்பவங்கள் மிகவும் மோசமானது. இதனை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறாக பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையானது, மீண்டும் ஒருதடவை இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறாது இருக்கின்ற வகையில் மிக இறுக்கமான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

அதேவேளை கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர், முல்லைத்தீவு மாவட்டம் கல்வி, ஒழுக்கம், கலாசாரம் என அனைத்திலும் மிகவும் சிறந்து விளங்கிய மாவட்டமாக இருந்தது.

ஏனெனில் 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் மிகவும் இறுக்கமானதும், ஒழுக்கமானதுமான மிகச்சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு இந்த மாவட்டத்தில் இருந்தது.

இந் நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகள் 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலைக்கு தற்போது உள்ள இறுக்கமற்றதும், ஆளுமையற்றதுமான நிர்வாக கட்டமைப்பே காரணமெனக் கூறவேண்டியிருக்கின்றது.

அத்தோடு இத்தகைய துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கின்ற வகையில் மாணவ, மாணவிகளது பெற்றோரும் விளிப்பாக இருக்க வேண்டும்.

மாணவர்களது பாதுகாப்பில் அவர்களது பெற்றோரும், பாதுகாவலர்களும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

மேலும் இந்த மாணவிகள் மீதான துஷ்பிரயோக சம்பவம், நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றது. எனவே நீதிமன்றம் இந்த துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கெதிராக நல்லதொரு தீர்ப்பினை வழங்கும் என நம்புகின்றேன் – என்றார்.

தமிழக தடுப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யக்கோரி தீக்குளித்த இலங்கை தமிழர் !

தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தம்மை விடுதலை செய்யக்கோரி நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் தீக்குளித்துள்ளார். பலர் வானுயர்ந்த மரங்களில் ஏறி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தீக்குளித்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனிமதிக்கப்பட்டுள்ளவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் தம்மை விடுதலை செய்யக்கோரி 103 ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் மூவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது தம்மை கொலை செய்யுங்கள் என கோரி வருகின்றனர்.

இந்நிலையில் தாம் இறந்துவிட்டால் தமது உறுப்புக்களை தமிழக மக்களுக்கு தானமளிக்கவும் ஒப்பந்தமிட்டுள்ளனர்.

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் பெற்றோல் – அக்கறை காட்டாத அரசு !

ரஷ்யாவிடம் நியாயமான விலையில் எரிபொருள் உள்ள போதிலும், இலங்கையினால் கொள்வனவு செய்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தான் எரிசக்தி அமைச்சராக இருந்த காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஏன் எரிபொருள் கொள்வனவு செய்யப்படவில்லை என்பது குறித்தும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் வினவியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில,  முன்னர் எரிசக்தி அமைச்சராக இருந்ததாகவும், அவரது பதவிக்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி ஐரோப்பிய நாடுகளால் ரஷ்யாவிற்கு வரையறுக்கப்பட்ட வர்த்தகத் தடை விதிக்கப்பட்டது.

இதன் விளைவாக ஐரோப்பிய சந்தையை இழந்ததைத் தொடர்ந்து ஆசிய நாடுகளுக்கு எரிபொருள் விற்பனையை ரஷ்யா திறந்தது.

ரஷ்யா மீதான வர்த்தகத் தடை விதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, 3 மார்ச் 2022 அன்று, ஜனாதிபதி தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாக அவர் கூறினார்.

இதன் மூலம் தனது பதவிக்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

2021 ஜூலையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்ததாகக் கூறிய அவர், இந்தியா மற்றும் சீனாவின் கடன்கள் எரிபொருள் நெருக்கடியை 08 மாதங்கள் தாமதப்படுத்தியதாகக் கூறினார்.

குழந்தை பிரசவித்த 13 வயது சிறுமி – பாதுகாப்பற்ற நிலையில் இலங்கை சிறுவர்கள் !

இலங்கையில் சிறுவர்கள் மீதான வன்முறையும் பாலியல் துஷ்பிரயோகங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன. சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் எடுக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை ஒவ்வொரு நாளிலும் வெளியாகும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் சார்ந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இரு சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் (23-06-2022) கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும் இந்த சம்பவத்தில் டக்வாரி தோட்டத்தை சேர்ந்த 58 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 47 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ள நிலையில், மீண்டும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்படாதோருக்கு தொடர்ந்தும் அமைச்சுப் பதவி – அமைச்சரானார் நேற்று வந்த தம்மிக !

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை அவர் பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

……….

ஜனநாயக ரீதியிலான தேர்தலில் போட்டியிட்டு மக்களின் விருப்பத்தால் தெரிவு செய்யப்பட்ட எத்தனையோ திறமையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க தேசியப்பட்டியலில் தெரிவுசெய்யப்பட்ட தம்மிக்க பெரேராவுக்கு கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த அமைச்சுக்கு மையை கொடுத்துள்ளார். முன்னாதாகவும் தேசியப்பட்டியல் ஆசனமூடாக தெரிவான பசில் ராஜபக்ஷ வின் திறமையற்ற நிர்வாகமே இலங்கையின் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பல தரப்பினரும் விசனம் வெளியிட்டு வரும் நிலையில் நாட்டு மக்களின் நிலையை கருத்தில் கொள்ளாது ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தை தொடர்ந்து தன் இஷ்டத்துக்கு பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

“வட-கிழக்கை மட்டுமே புனரமைக்க கேட்காது முழு நாட்டையும் முன்னேற்ற வாருங்கள்.” புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு !

சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அவர்,

இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் அவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும்.

வடக்கு- கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள் முன்னேற்ற செய்யலாம்.

எனது காலத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டது. எனது காலத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டது.

சுன்னாகத்தில் இருந்து வவுனியாவுக்கு ஒரு தொகுதியை அமைத்தோம். முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கினோம்.பிரபாகரன் உயிரிழந்த பின்னர் மூன்று மாதங்களில் புதுமாத்தளன் பகுதிக்கு மின்சாரம் வழங்கினோம். தற்போதுள்ள பிரச்சனை ‍டொலர் இன்மையால் டீசலை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகும்.

அதனால் டீசலில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் போதுமானதாக இல்லை. எனவே நாம் தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு செல்ல வேண்டும்.

இலங்கையில் மிக அதிகமாக புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றல் காங்கேசன்துறை பூநகரி மன்னார் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை நானே கொண்டு வந்தேன்.

அதனை இலங்கை முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய போரின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் – வாசுதேவ நாணயக்கார

சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் கொள்கைகளின் மூலக்கல்லாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். .

ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு சர்வதேச நாணய நிதியமும் பங்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீண்ட கால அடிப்படையில் அரபு நாடுகளிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு அல்லது டொலர்களைப் பெறுவதற்கான ஒரு முறையைப் பாதுகாக்கும் முறைமை அமல்படுத்தப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், இலங்கையால் டொலரைப் பாதுகாக்க முடியாது எனவும், எதிர்காலத்தில் வட்டி செலுத்தப்படுவதால் அதிக டொலர்களைப் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை உறுதிப்படுத்திய பின்னர் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை ஏன் பெற முடியாது என கேள்வி எழுப்பிய அவர், அத்தகைய நடவடிக்கையில் உள்ள முரண்பாடு தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாக உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்க வேண்டும் – துனித் வெல்லாலகே ட்வீட் !

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.

எனினும், போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியிருந்தது.

இந்த போட்டித் தொடரில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இதற்கமைய, போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை வெல்லாலகே பெற்றுள்ளார்.

இந்நிலையில், துனித் வெல்லாலகே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில், ´வாய்ப்புகள் அமையாது, அவற்றை நீங்கள்தான் உருவாக்க வேண்டும்´ என பதிவிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணசான்றிதழ் தருவதாக கூறிய அதே அரசாங்க காலத்தில் அவர்களை தேடப்போவதாக அறிவித்துள்ள புதிய நீதியமைச்சர் !

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதியமைச்சர் யாழில் சில நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இந்து பௌத்த கலாச்சார பேரவையின் அழைப்பில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளேன்.

குறிப்பாக காணமால் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.

……………

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அரசியல் பிரச்சனைகளை வைத்து இலங்கையின் எல்லா தரப்பினரும் அரசியல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழர் தரப்பாயிருக்கட்டும் – சிங்கள ஆளுந்தரப்பாய் இருக்கட்டும் எல்லோரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயத்தை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

மனித உரிமைகள் – காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகும் போது மட்டமே அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் பேசுகிறது. தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுக்கு எதிர்பார்த்துள்ள இலங்கை அரசுக்கு யுத்த கால மனிதமீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்ற அடிப்படையில் இந்த அரசியல் நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறதே தவிர இங்கு வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், இந்திய அரசியல் நிபுணர்கள் இலங்கை வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில்  ராஜபக்ஷ அரசின் முகவர் ஒருவரை வடக்கில் நிறுத்தி வைப்பது போல் காட்டுவது மனித உரிமையை காக்கும் அரசு போல் தங்களை காட்டிக் கொள்ளவே தவிர வேறு ஒன்றும் இல்லை.ஹ

இந்த நிலையில் அரசியல் செய்வதற்காக மட்டுமே உறவுகளுக்காய் காத்திருக்கும் இந்த பெற்றோரின் கண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

கூட்டமைப்பும் சரி. டக்ளஸ் குழுவினரும் சரி – என் கனவு யாழ் குழுவினரும் சரி – கஜேந்திரர்களும் சரி எல்லோரும் இதனை தங்களுடைய அரசியல் பிழைப்புக்காகவே இந்த பிரச்சினைகளை எரிய விட்டுக்கொண்டிருக்கின்றனரே தவிர வேறு எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதே கடந்த 12 வருடங்கள் எங்களுக்கு தெரிவிக்கவும் செய்தி.

இப்போதைக்கு தேர்தல் இல்லை – ரணில் விக்கிரமசிங்க

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், சில பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறினார்.

225 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பும் உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை அரசியல் தலைவர்களும் மக்களும் உலகுக்கு நிரூபிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.