26

26

தனியார் வகுப்பு – தனித்து வகுப்பு: கணக்கு ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்த போட்ட கணக்கு! முல்லைத்தீவில் கா.பொ.த சாதாரண தரத்தில் கற்கின்ற 20 மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!!!

முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.

முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.

ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.

தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.

2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.

20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.

மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.? – கர்தினால் மெல்கம் ரஞ்சித் கேள்வி !

மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார்.

றாகம பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது என்றும் மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.?

இந்த முட்டாள்தனமாக தீர்மானத்தை எடுத்து இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் மீளப்பெற வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.

கருக்கலைப்பு உரிமைச்சட்டத்தை நீக்கியது அமெரிக்கா !

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்நிலையில், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.

15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது’ என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கருக்கலைப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் மாகாணங்களில் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க எனது அனைத்து சக்தியையும் பயன்படுத்துவேன். கருக்கலைப்பு சட்டம் தொடர்பான இந்த தீர்ப்பு கோர்ட்டு மற்றும் நாட்டிற்கு சோகமான நாள். உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பறித்துள்ளது’ என்றார்.

“என் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.” – நாமல்

எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னால் அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களை நியமிக்க முடியும் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிக்கும் செயற்படு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அத்தோடு தான் முன்னர் வகித்த அமைச்சுக்களுக்கான அதிகாரிகளையும் அந்தக் குழுவே நியமித்ததாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசத்தை ஏமாற்ற காணாமற் போனோர் தொடர்பில் விரைவில் தீர்வு என மீண்டும் பழைய பொய்களையே கூறும் அரசு !

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, அதனூடாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதியை பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், கல்வியங்காட்டில் அமைந்துள்ள காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தில் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் மேலும் இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினாலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரும் முயற்சிகள் இடம்பெறும் என்றும் தி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

…………………..

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அரசியல் பிரச்சனைகளை வைத்து இலங்கையின் எல்லா தரப்பினரும் அரசியல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழர் தரப்பாயிருக்கட்டும் – சிங்கள ஆளுந்தரப்பாய் இருக்கட்டும் எல்லோரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயத்தை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இந்த வருட தொடக்கத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணாமல் போனோர் தொடர்பான விடயங்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக கூறியிருந்த நிலையில் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு 5 மாதங்களாகப்போகின்றன இன்று வரை இது தொடர்பில் அவர் எந்த  முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

மனித உரிமைகள் – காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் பேசுபொருளாகும் போது மட்டுமே அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் பேசுகிறது. தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுக்கு எதிர்பார்த்துள்ள இலங்கை அரசுக்கு யுத்த கால மனிதமீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சில நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்ற அடிப்படையில் இந்த அரசியல் நாடகத்தை அரசு அரங்கேற்றுகிறதே தவிர இங்கு வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், இந்திய அரசியல் நிபுணர்கள் இலங்கை வந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில்  ராஜபக்ஷ அரசின் முகவர் ஒருவரை வடக்கில் நிறுத்தி வைப்பது போல் காட்டுவது மனித உரிமையை காக்கும் அரசு போல் தங்களை காட்டிக் கொள்ளவே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இந்த நிலையில் அரசியல் செய்வதற்காக மட்டுமே உறவுகளுக்காய் காத்திருக்கும் இந்த பெற்றோரின் கண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

கூட்டமைப்பும் சரி. டக்ளஸ் குழுவினரும் சரி – என் கனவு யாழ் குழுவினரும் சரி – கஜேந்திரர்களும் சரி எல்லோரும் இதனை தங்களுடைய அரசியல் பிழைப்புக்காகவே இந்த பிரச்சினைகளை எரிய விட்டுக்கொண்டிருக்கின்றனரே தவிர வேறு எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதே கடந்த 12 வருடங்கள் எங்களுக்கு தெரிவிக்கின்ற செய்தி.

சட்டவிரோதமாக இலங்கையை விட்டு வெளியேற முற்பட்ட 399 பேர் வரை கைது !

2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பவர்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 200,000 முதல் 1,000,000 வரை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கடத்தல்காரர்கள் பழுதடைந்த மற்றும் உடைந்த படகுகளையும் சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கையில் ஈடுபடும் கடத்தல்காரர்களுக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

தொடரும் குடும்ப வன்முறைகள் – மனைவியை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவன் !

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர், கணவரால் கோடாரியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் ஒன்றரை வயது மற்றும் மூன்றரை வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் சத்தியவாணி வயது (24) என்ற தாயே பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொரியவருவதாவது,

உயிரிழந்த இளம் பெண்ணின் கணவர் தோட்டத்தில் தொழில் செய்து வருவதுடன், பகுதி நேர வருமானத்திற்கு நுவரெலியா நகரில் முச்சக்கரவண்டி சாரதியாகவும் பணியாற்றி வருகின்றார்..

சம்பவ தினமான நேற்று (25.06.2022) சனிக்கிழமை இரவு தனது தொழிலை முடித்து விட்டு வீடு திரும்பிய கணவருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த கணவன், கோடரியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததுடன், கணவன் தனது இளைய மகளைத் தூக்கிக் கொண்டு, இரவோடு இரவாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சென்று, சரணடைந்துள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்கு இன்று (26) காலை நுவரெலியா மாவட்ட நீதவான் விஜயம் செய்து மரண விசாரணை நடத்தியுள்ளார். நீதவானின் உத்தரவுக்கு அமைய, சடலம் சட்டவைத்தியர் ஒருவரின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

எரிபாருள் பெற்றுக்கொள்ள ரஷ்யாவிற்கு பயணமாகும் இரண்டு அமைச்சர்கள் !

எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவிற்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு அமைச்சர்களும் நாளை (27) ரஷ்யா செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இலங்கை எரிபொருள் பெற மறுப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மற்றுமொரு இராஜதந்திர விவகாரத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்வதாகவும் இதன்போது இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் 78வயது மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை !

காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்குஉட்படுத்திய பின்னரே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

தனிமையில் வசித்து வந்த மூதாட்டியான சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கடந்த வெள்ளிக்கிழமை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டது.

அதன் போது , மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.