July

July

அமைகிறது சர்வ கட்சி அரசு – அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு !

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

நேற்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வுகள் முடிவடையும் வகையில் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் ஒகஸ்ட் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகும் பாராளுமன்றத்தின் 3வது அமர்வில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார்.

“அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பினாலேயே இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது.”- அமெரிக்காவுக்கு சீனா பதில் !

இலங்கைக்கான வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவி தொடர்பில் அண்மையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் வௌியிட்ட கருத்திற்கு சீனா பதிலளித்துள்ளது.

இலங்கையின் உட்கட்டமைப்பிற்கு வெளிப்படைத்தன்மையற்ற  கடனுதவியை சீனா வழங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணி என சமந்தா பவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சீனா, தமது முதலீடுகளினால் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வேகமான, மேம்பட்ட நிலையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாஓ லிஜியேன் குறிப்பிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர்,

சீன – இலங்கையின் நடைமுறை ஒத்துழைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் விஞ்ஞான ரீதியாகவும் திட்டமிட்ட வகையிலும் முன்னெடுக்கப்படுகிறது. இந்த முதலீடுகளில் அரசியல் தலையீடு இல்லை.

சர்வதேச மூலதன சந்தை மற்றும் பல்வேறு அபிவிருத்தி வங்கிகள் வழங்கிய கடனுதவியை விட சீனாவின் வெளிநாட்டுக் கடன்கள் மிகக் குறைவானது.

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் குறைந்த வட்டியிலும் நீண்ட கால அடிப்படையிலும் குறித்த கடன் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட வட்டி வீத அதிகரிப்பினால்,  இலங்கை போன்ற பல வளர்ச்சியடையும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் கடுமையான பொருளாதார அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. அமெரிக்கா அவ்வப்போது விதிக்கும் தடைகள் மூன்றாம் உலக நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எம்.எப் உடனான பேச்சுவார்த்தை வெற்றியை நோக்கி என்கிறது ஜனாதிபதி அலுவலகம் !

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்து வருவதாக ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அதிபர் அலுவலகம் இந்த விடயத்தினை அறிவித்துள்ளது.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகளைத் தணிக்கவும் நல்ல பொருளாதார நடைமுறைகளை ஏற்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறும் நோக்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம், போதுமான பேரின பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கியிடம்  திட்டம் எதுவுமில்லை என நேற்றைய தினம் உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அரச கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும்.“ – எச்சரிக்கிறார் முன்னாள் அமைச்சர் !

அரச கட்டிடங்களை கைப்பற்ற முயன்றால் போராட்டக்காரர்களின் கை, கால்கள் உடைக்கப்படும் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்  அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடாபில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

போராட்டக்காரர்கள் அன்பு வழி போராட்டமொன்றை முன்னெடுப்பதாயின் அதற்கு எந்தத் தடையும் இல்லை. தாம் விரும்பியவாறு அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுக்க எல்லோருக்கும் உரிமையுண்டு. அதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனை விடுத்து சண்டித்தனம் செய்ய யாருக்கும் இடமளிக்க முடியாது .

அத்துடன் ஜனாதிபதி மாளிகை, அதிபர் செயலகம், அலரி மாளிகை என்பவற்றை கைப்பற்ற முயன்றால் அவர்களின் கை, கால்களை உடைப்பதைத் தவிர வேறு வழியிருக்காது என்றும் சனத் நிஷாந்த மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலி முகத்திடல் மைதானத்திலும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.அதனையடுத்து கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் மிலன் ஜயதிலக்க உள்ளிட்ட 22 பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான காவல்துறைமா அதிபர் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தினமும் ஒரு லட்சம் குடும்பங்கள் பட்டினி – பெட்ரோல் வரிசைகளை மட்டுமே கவனிக்கும் அரசும் அதிகாரிகளும் !

இலங்கை  நாட்டில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

மேலும், 75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 பேர் “சேலைன் ” மூலம் போஷாக்கை பெறுவதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மிகவும் மோசமானதாக அமையும் எனவும் படகொட மேலும் தெரிவித்துள்ளார்.

………………………

இந்த பெட்ரொல் வரிசைகளும் – ஹாஸ் சிலிண்டர் வரிசைகளும் – அரசுக்கு எதிரான போராட்டங்களும் மூன்று வேளை உணவு உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ள ஒரு மத்திய தர வர்க்கத்தாலேயுமே பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்ததது.

இங்கு உணவுக்கு வழயில்லாது நாள்தோறும் வாடிக்கொண்டிருக்கும் சாதாரண – ஏழை குடும்பங்கள் பற்றி யாருமே சிந்திப்பது கிடையாது. அரசு கூட போராட்டக்காரர்களின் பெட்ரோல் கோரிக்கை – மின்வெட்டு கோரிக்கையை கணக்கெடுத்து நிறைவேற்ற செயற்படுகிறதே தவிர மக்களை – சாதாரண மக்களின் உணவுத்தேவையை கவனிப்பதாக தெரயிவில்லை.

ஆகஸ்ட் மாதமளவில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்து பசி – பட்டினி சாவுகள் ஏற்படலாம் என பல பொருளியல் நிபுணர்களும் எச்சரிந்த நிலையில் இன்று இலங்கை அதன் தொடக்கத்தில் நிற்கிறது.

இன்னமும் அரசோ – அரசு நிறுவனங்களோ – கிராமிய அமைப்புக்களோ எவையுமே இந்த பட்டினி – வறுமை தொடர்பில் கவனம் செலுத்தாது பெட்ரோல் அட்டை வழங்குவதிலும் – qr code வழங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றனவே தவிர இலங்கையிலுள்ள கடைநிலை கிராமங்களின் – நகரப்புற கூலித்தொழிலாள குடும்பங்களின்  பொருளாதார – பசி – வறுமை நிலையை உணர்வதாகவோ – தீர்ப்பதற்கான முயற்சிகளை செய்ததாகவோ தெரியவில்லை.

அருகிலுள்ள இந்தியாவின் தமிழ்நாடு அரசு கூட இலங்கையின் பொருளாதார நலிவு நிலையை கருத்தில் கொண்டு பல மெட்றிக்தொன் உணவுப்பொருட்களை அனுப்பியிருந்த நிலையில் ரணில்விக்கிரமசிங்க  அரசு  இதனை வாங்குவதிலும் – படம் எடுப்பதிலுமே கவனம் செலுத்தியதே மக்களின் நிலையை கண்டறியாது – சிந்தனை செய்யாது இன்னமும் கட்சி அரசியலையே நடாத்திக்கொண்டிருக்கிறது. அயலிலுள்ள தமிழ்நாட்டு அரசுக்கு விளங்கிய விடயம் கூட இலங்கை அரசியல்தலைவர்களுக்கு விளங்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

இந்த அரசியல்வாதிகள் மக்களுக்காக சிந்தித்து செயலாற்ற முன்வராதவரை இலங்கை எந்த விதத்திலும் முன்னேறப்போவதில்லை என்பதே உண்மை.

“சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளோம்.”- உலக வங்கி

இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில்,

மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு, வரிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைப் போக்க கடந்த காலங்களில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்றுவரை, இந்த நிதியில் சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.

இந்த வளங்கள் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக வலுவான கட்டுப்பாடுகள் மற்றும் நம்பிக்கைக்குரிய மேற்பார்வையை நிறுவுவதற்கு, அதனை செயல்படுத்தும் முகவர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.

இதனை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்போம். இலங்கை மக்களுக்கு எங்களுடைய ஆதரவினை அதிகரிக்க மற்ற அபிவிருத்தி பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறோம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

போதுமான பேரின பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

பெட்ரோல் வரிசையில் வைத்து ஆடி அமாவாசை விரதத்தை முடித்த நபர் – வைரலாகும் படம் !

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை தினத்தன்று விரதம் இருந்து, மதியம் படையலிட்டு அந்த உணவை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் நேற்றய தினம் எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் முடித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஜனாதிபதியின் கொடியை திருடி படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது !

மக்கள் போராட்டத்தின் போது கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 09 ஆம் திகதி அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததை அடுத்து குறித்த நபர் கொடியைத் திருடியுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, அந்த நபர் தனது இடுப்பில் கொடியைக் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில், அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தியதாகவும், அதை எரித்து அழிக்கவும் நினைத்ததாகக் காட்டியது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் திருட்டு – அடுத்தடுத்து பல கைதுகள் !

ஜனாதிபதி மாளிகையில் மின் அழுத்தி திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நேற்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை ​போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது சந்தேகநபர் இந்த மின் அழுத்தியை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அலரி மாளிகையில் இரண்டு தொலைக்காட்சிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

“காலி முகத்திடலில் உள்ள குடுகாரர்கள் பிரபாகரனை சிறந்தவர் என்கிறார்கள்.” – அமைச்சர் பிரசன்ன காட்டம் !

குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் எனவே இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

அத்துடன், காலி முகத்திடல் என்பது பொருளாதார கேந்திர நிலையம். சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பகுதி. அங்கிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கலாம்.

போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், படையினரை படுமோசமாக விமர்சித்தனர். படையினரைவிட பிரபாகரன் சிறந்தவர்.

இது குறித்து பொன்சேகாவின் நிலைப்பாடு என்ன..? எனவும் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.