03

03

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 51 பேர் கைது !

திருகோணமலை கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று அதிகாலை திருகோணமலை அலர்த்தோட்டம் கடற்பரப்பிலிருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் கடற்பரப்பில் வைத்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வேளையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம்,வவுனியா,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை, கம்பஹா மற்றும் ரத்னபுர பிரதேசங்களைச் சேர்ந்த 41 ஆண்களும் 5பெண்கள் உட்பட ஐந்து சிறுவர்கள் அடங்கலாக 51 பேர் கைது செய்யப்பட்டு திருவோணமலை கடற்படை முகாமிற்கு விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடற் படையினரின் விசாரணைகளுக்கு பின்னர் திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் பொருளாதார நெருக்கடி – வடக்கில் நாட்கூலிகளின் பிள்ளைகளுக்கு எட்டாக்கனியாகும் இலவச கல்வி !

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்பட்டுள்ள விவைாசி உயர்வானது நாளாந்த உணவுக்கான கையிருப்பையே சிதைத்து விடுகின்ற நிலையில் கல்வி எல்லாம் இரண்டாம் கட்டமாகிவருவதை பல பின்தங்கிய குடும்பங்களில் காண முடிகின்றது.
அண்மையில் கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஆசிரியர் ஒருவருடன் பாடசாலை மாணவர் நிலை பற்றி அறிய தேசம் இணையத்திலிருந்து தொடர்பு கொண்ட போது “ கிராமப்புறம் என்பதால் மட்டுமன்றி இங்குள்ள பல பிள்ளைகளுடைய பெற்றோர் நாட்கூலிகள். நாட்டின் விலையேறந்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளுக்கு காலை உணவு கூட வழங்க அவர்களுக்கு வழி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பிள்ளைகள் காலை உணவு உண்ணாமலேயே பாடசாலைக்கு வருகின்றனர். பல மாணவர்கள் காலைக்கூட்டத்திலேயே மயங்கி விழுந்து விடுகின்றனர். பசியோடு எவ்வாறு இந்த மாணவர்களால் 1.30 மணி வரை இருந்து கற்க முடியும். ஆரமப காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவு திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.” என வேதனையுடன் அந்த ஆசிரியர் பதிவு செய்திருந்தார்.
லட்சம் சிறுவர்களுக்கு உணவில்லையெனில்! - GTN
குறிப்பாக கிராமப்புறங்களில இந்த நிலை இன்னமும் இதிகமாகியு்ளதாக பாடசாலை அதிபர்கள்  பலரும் விசனப்பட்டுக்கொள்வதை காணமுடிகின்றது. கூலி வேலைககு போகும் தந்தை இருக்குமு் குடும்பங்களை கொண்ட பகுதிகளில் உயர்தரம் (12)  சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் (11) அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர் எனவும், ஏன் என வினவப்பட்ட போது தந்தையுடன் வேலைக்கு செல்வதாக மாணவர்கள் கூறியதாகவும் ஒரு பாடசாலை அதிபர் கூறியிருந்தார்.

இது போக பாடசாலை உபகரணங்களின் விலையேற்றம் இன்னும் மாணவர்களை திண்டாட வைக்கின்றது. சாதாரண அப்பியாசக்கொப்பி ஒன்றின் அடிப்படை விலை 100 ரூபாயை தொடுகின்றது. அப்படியானால் ஏனைய பொருட்களின் விலை..?  டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுதான் நேரம் என கருதி பல தனியார் கல்வி நிலையங்களும் காசு கொள்ளையில் முழு மூச்சுடன் ஈடுபடுக்கின்றன. தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும்  பெரும்பாலான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளின் ஆசிரியர்களே. கேள்விகளை பாடசாலை கரும்பலகையில் எழுதிவிட்டு விடை தேவை என்றால் தனியார் கல்வி நியைத்துக்கு வரவும் எனக்கூறும் நிலையே இன்னமும் வடக்கில் தொடர்கிறது. உயர்தரம் மற்றும் சாதாரண தர கற்கைகளுக்கு பாடசாலை கல்வி மட்டுமே போதுமானதாக இல்லாததால் தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டாயமாக போக வேண்டிய சூழல் உள்ள நிலையில் கலைப்பிரிவு மாணவர்களிடம் ரூபா 5000 வரை அறவிடப்படுகின்றது. அதே நேரம் விஞ்ஞான பிரிவு மாணவர்களிடம் ரூபா 10000 க்கும் மேல் அறவிடப்படுகின்றது.  பணம் உள்ள குடும்பங்களுக்கு சரி – இல்லாத – ஏழை மாணவர்களின் நி என்னவாகும்..?  இந்த ஆசிரியத்தை புனிதப்படுத்தும் பலரும் இதை கண்டுகொள்வதே கிடையாது. பொருளாதார நெருக்கடியில் இந்த ஆசிரியர்களின் சுரண்டல் இன்னமும் அதிகமாகி்கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் எரிபொருள் தட்டுப்பாடு வேறு. அரசாங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து ஏதோவொரு வகையில் பெற்றோல் கிடைத்துக்கொண்டே இருக்கறது. அவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றே படிப்பார்கள். ஆனால் தினசரி வேலைக்கு போகும் நாட்கூலிகளுக்கு பெற்றோல் இல்லை. இருந்தாலும் அதன் லீட்டரின் விலை 500 ரூபாய்.  நாட்கூலி 1500 ரூபாயில் பெற்றோல் போடுவதா – பிள்ளையை படிக்க வைப்பதா என்ற சூழலே வடக்கில் காணப்படுகின்றது.
யுத்தத்தின் கோர பிடியிலிருந்து ஓரளவு நிமிர்ந்து கொண்டிருந்த நமது சமூகமானது இன்று மீண்டும் பொருளாதார நெருக்கடியின் சுமையால் தனது கல்வி வாய்ப்பை இழக்க ஆரம்பித்துள்ளது.
எனவே விரைந்து செயலாற்றி மீண்டும் இந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்த – தொடர்ந்து கல்வி கிடைக்க வடக்குக்கான கல்வி அமைச்சின் நிறுவனங்களும் – கற்ற சமூகமும் – புலம்பெயர் தமிழர்களும் – குறிப்பாக தமிழ்தேசியம் என கூவித்திரிந்து கொண்டிருக்கும் வடக்கின் அரசியல் தலைமைகளும் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் –  இது தொடர்பில் அதீத  கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

டொலர் தந்தால் பெட்ரோல் தருவோம் – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு !

அமெரிக்க டொலரில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்துறையும் வாராந்த உத்தரவாத எரிபொருள் ஒதுக்கீட்டை பெற முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நுகர்வோர் கணக்கை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன கணக்கின் ஊடாக ஒரு மாதத்திற்கு முன்னர் பணம் செலுத்துவோருக்கு ஜூலை 12 முதல் நாளாந்தம் அல்லது வாராந்திர அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் 12 ஆம் திகதி முதல் தமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்” என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருள் கையிருப்பு விபரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், 92 ஒக்ரோன் பெற்றோல் ஆயிரத்து 414 மெட்ரிக் தொன்னும், 95 ஒக்ரேன் பெற்றோல் 02 ஆயிரத்து 677 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதனைத் தவிர ஓட்டோ டீசல் 12 ஆயிரத்து 774 மெட்ரிக் தொன்னும், சுப்பர் டீசல் 233 மெட்ரிக் தொன்னும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அதன் வருகையும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

அத்துடன் பெற்றோலை இறக்குமதி செய்வது தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மேலும் கூறியுள்ளார்.

லிபியாவில் தொடர் மின்வெட்டு – பாராளுமன்றத்துக்கு தீ வைத்து சூறையாடிய மக்கள் !

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாஃபியின் மறைவுக்குப் பிறகு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தைச் சூறையாடிய மக்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தே அங்கு போராட்டம் நடத்தப்படுகின்றது.

லிபியா மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தி, பின் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஒரு பகுதிக்கு தீ மூட்டியுள்ளனர்.

இந்நிலையில், லிபிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தயவுசெய்து பதவி விலகுங்கள் – ஜனாதிபதி, பிரதமரிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை!

இந்த அரசாங்கத்தால் இனிமேலும் தொடர்ந்து நாட்டை முன் கொண்டு செல்ல முடியாது எனவும், எனவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்காக கட்சி நிற பேதங்களை மறந்து முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.

இத் தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில் 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்கப்பால் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் தெரிவித்தார்.

10 நாட்களில் தீர்வு தருவேன் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

எண்ணெய் பிரச்சினைக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கும் எரிபொருள், எரிவாயு உட்பட சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதன் போதே எரிபொருள் பிரச்சனைக்கு இன்னும் 10 நாட்களில் தீர்வு பெற்றுதருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார். இவ் வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் 10 நாட்களுக்கு பொறுமையாக, இருப்பதாக கூறியுள்ளனர்.

இலங்கையில் 85 வீதத்தால் குறைவடைந்த திருமண பதிவுகளின் எண்ணிக்கை – பொருளாதார நெருக்கடியே காரணம். !

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 85 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. அகில இலங்கை திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சுசந்த ஹேமசிறி ரணசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த மாதம் திருமண மாதமாக காணப்படுகின்றமையால் கடந்த காலங்களில் திருமண மண்டபங்களுக்கான முன்பதிவுகள் அதிகமாக காணப்பட்டன. எனினும் தற்போது அந்த எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு யுவதிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – திருகோணமலையில் 18 வயது இளைஞன் கைது !

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக நிலாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய யுவதிகள் இருவர் கடற்கரையோரமாக சென்று கொண்டிருந்தபோது உள்வீதியூடாக வந்த இளைஞர் இரு யுவதிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பாலியல் துஷ்பிரயோக தொடர்பில் இரண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யுவதிகளையும் சட்ட வைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் பொலிஸார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமறைவாகியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தலைமறைவான ஜனாதிபதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இன்று ஆளும் கட்சி உறுப்பினருக்கே ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு கொண்டு செல்வதற்கு ஒரே வழி ஊடகங்களே ஆகும்.
ஆனால் இன்று ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்காமல் பறிப்பதன் மூலம் அந்த வாய்ப்பையும் இல்லாமல் செய்வதாக சந்திம வீரகொடி குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டாபய ஆட்சிக்கு எதிரான இரண்டாவது அலை சுனாமி போல இருக்கும் என்கிறார் அனுரகுமார !

அரசை விரட்டுவதற்கான இரண்டாவது அலை விரைவில் ஆரம்பமாகும். அந்த அலை சாதாரண அலையாக அல்லாமல், சுனாமி போல் இருக்கும். இலக்கை அடையாமல் ஓயமாட்டோம் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

‘இந்த அரசை விரட்டியடிக்க வீதியில் இறங்குவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் அம்பலாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இன்று வரிசைகளில் நிற்கின்றனர். எனவே, கட்சி பேதம் வேண்டாம். நாட்டை மீட்க மக்கள் சக்தியாக ஒன்றிணைவோம் எனவும் தெரிவித்தார்.

……………..

இதற்கு முன்னர் நடைபெற்ற அண்மைய மாதங்களில் அரசுக்கு எதிரான பாரியளவான வன்முறைச் சம்பவங்கள் கூட ஜே.வி.பியின் உந்துதலாலேயும் – ஆட்சியை பிடிப்பதற்கான சதியும் என கூறப்பட்ட நிலையில் அனுரகுமார திஸ்ஸ நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.