சில மணிநேரங்களுக்கு முன்பாக குறிப்பாக பிரித்தானிய July 05, நேரம் மாலை ஆறுமணி இரு நிமிடங்கள் அளவில் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலாளர் சஜித் ஜாவட் அமைச்சுப் பதவியில் இருந்து ராஜிநாமாச் செய்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த பத்து நிமிடங்களில் பிரித்தானிய சான்சிலர் ஒப் எஸ்செக்கர் என்றழைக்கப்படும் நிதியமைச்சர் ரிஷி சுனாக் பதவி விலகினார். பிரித்தானியாவின் மிக முக்கியத்துவமான இரு அமைச்சர்கள் பத்து நிமிட இடைவெளியில் பதவி விலகியுள்ளனர்.
“அரசாங்கம் சரியாகவும் தகமையுடனும் கனதியுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையவர்கள்” என்றும் இந்த அடிப்படைகளுக்காக போராடுவது அவசியம் என்பதால் தான் பதவி விலகுவதாக ரிஷி சுனாக் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“பணிவு, பற்றிக் கொள்ளல், புதிய பாதை என்பனவே கடந்த மாதம் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் அடிப்படை. ஆனால் கவலைக்குரிய விடயம் அது உங்கள் தலைமையில் சாத்தியமில்லை. அதனால் அமைச்சுப் பொறுப்பை ராஜிநாமாச் செய்கின்றேன்” என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவட் தெரிவித்து இருந்தார்.
பிரித்தானிய பிரதமரின் நேர்மையற்ற, ஓழுக்கமற்ற போக்குகள் நாட்டை முடக்கத்தில் போட்டுவிட்டு அரசு குடித்து கும்மதாளம் போட்டது போன்ற விடயங்கள் அண்மைக்காலமாக பெரும் நெருக்கடியை பிரித்தானிய அரசியலில் ஏற்படுத்தி இருந்தது. இவ்வாறான நெருக்கடிகளின் போதெல்லாம் உண்மைக்குப் புறம்பாக எல்லாவற்றையும் மூடி மறைத்து பொய்யை உண்மையாகவே சொல்லும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், உண்மைகள் அம்பலத்துக்கு வந்ததும் அதனை வெறும் கண்துடைப்புக்காக ஏற்றுக்கொண்டு மன்னிப்புக் கோருவார். இது ஒன்றல்ல இரண்டல்ல பல தடவைகள் நடந்தேறி பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பத்தகுதியற்ற ஒருவராக ஆனார்.
இதைவிட பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சவேடிவ் கட்சிக்குள் பாலியல் வல்லுறவு துன்புறுத்தல் சம்பவங்கள் மிகவும் சாதாரணமாக இடம்பெற்று வந்தது. இவ்வாறான கயவர்களுக்கு எதிராக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் கிறிஸ் பின்சர் கொன்சவேடிவ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு பொறுப்பான உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் கிரிஸ் பின்சர் பாலியல் தொந்தரவு பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு ஏழுந்திருந்தும் பிரதமர் உடன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கடுமையான அழுத்தங்கள் வரவே விசாரணைகள் முடியும் வரை கிரிஸ் பின்சர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலத்தி வைக்கப்பட்டார்.
ஆனால் தற்போது அமைச்சர்கள் பதவி விலகுகின்ற அளவுக்கு போனதற்குக் காரணம், பிரித்தானிய பிரதமர் தெரிவித்த இன்னுமொரு பொய். அதாவது கிரிஸ் பின்சரை இந்த முக்கிய பதவியில் அமர்த்துகின்ற போது அவர் ஒரு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுபவர் என்ற விடயம் தனக்கு தெரியாது என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருந்தார். ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரே பிரதமருக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பை எடுத்துக் கூறியிருக்கின்றார். தற்போது எல்லாம் அம்பலமானதும் பிரதமர் பொறிஸ் தனது நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோரி இருக்கின்றார்.
ஏற்கனவே குடியும் கும்மாளமும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கி இருக்கையில், கிறிஸ் பின்சர் விவகாரமும் அதனைத் தொடர்ந்து முக்கிய அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்ததும் பிரித்தானிய அரசியலில் பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்துள்ளது. கொன்சவேடிவ் கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெற்றால் சஜித் ஜாவட் உம் ரிஷி சுனாக் கும் களமிறங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் தங்களை அடுத்த தலைமைத்துவப் போட்டிக்கு தயார்படுத்தவே பதவி விலகியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.