07

07

எரிபொருள் நெருக்கடி – வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை !

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் காணப்படும் பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வைத்தியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்காரணமாக மருத்துவமனைகளின் செயற்பாடுகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு எதராக போராட்டத்தல் குதித்தது பௌத்தமகாசங்கம் !

கொழும்பு – புறக்கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு இதன்போது பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வகட்சி ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த சைக்கிள் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

நுகேகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் அணிவகுப்பு கொழும்பில் உள்ள பொது நூலகத்திற்கு அருகில் நிறைவடைந்தது. அதன் பின்னர் பொது ஒன்றுகூடல் நடைபெற்றது.

எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கு வழங்க முடியும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க நேற்று தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுதாபனம், இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்கும் போது பிரச்சினை ஒன்று உள்ளமை தெரியவந்ததது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது, குறித்த அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள சூத்திரமானது, எந்தவித அடிப்படை தன்மையும் இல்லாமல் உள்ளதோடு அதற்கமைய விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான கட்டணம் மற்றும் அதற்கான வரி என்பன தொடர்பில் நாம் ஆராய்ந்துள்ளோம்.
அவற்றுக்கு இடையில் 150 ரூபா முதல் 200 ரூபா வரையான வித்தியாசம் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் தொல்லை – பொலிஸ் சாரதி கைது !

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று (07) உத்தரவிட்டார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக கடமைற்றிவரும் பெண் பொலிஸ் உத்தியோத்தர் மீது சம்பவதினமான நேற்று புதன்கிழமை பிற்பகல் அங்கு சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கையைப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொண்டு வந்ததையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணியில் இருந்து இடைநிறுத்தியதுடன் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனை வழங்கியதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர் அம்பாறையைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் பொலிஸ் சாரதியாக கடமையாற்றி வருகின்றார் எனவும் இவரை இன்று (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

“இலங்கைக்கு உதவும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை.”- அமெரிக்கா அறிவிப்பு !

இலங்கைக்கு உதவும் வகையில் மிலேனியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் நிறுவனத்திடம் (எம்.சி.சி.) இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாமை ஏமாற்றமளித்தது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர் ஜூலி சுங் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் எப்போதாவது இந்த நிதியுதவி திட்டம் இலங்கைக்கு வழங்கப்படலாம் என்றும் எனினும் தற்போதைக்கு எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் பிறப்புக்களும் – மரணங்களும் வரிசைகளிலேயே.” – கடவுச்சீட்டுக்கான வரிசையில் நின்று குழந்தை பிரசவித்த இளம் பெண் !

பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

குறித்த பெண்ணை இராணுவத்தினர் உடனடியாக காசல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்துள்ள மக்கள் இன்றும்(07) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

……………………

இலங்கையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக மட்டுமல்ல எரிபொருள், எரிவாயு , நாளாந்த உணவுப்பொருட்கள் என அனைத்திற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டே இருக்கின்றனர். பிறப்புக்கள் மட்டுமல்ல 10ற்கும் மேலான மரணங்களும் இந்த வரிசைகளிலேயே சம்பவித்துவிட்டன என்பதே சோகம்.

இன்று வரை இந்த அரசாங்கமும்- அமைச்சர்களும்இந்த வரிசைக்கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இதனை வைத்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே சோகமான  உண்மை !

பாடசாலை மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியருக்கு விளக்கமறியல் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 21 ஆம் திகதி இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம் பெற்ற நிலையில்,ஆசிரியர் வரும் 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவும், ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

குறித்த ஆசிரியர் தொடர்பில் காவல்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, இரண்டு புதிய வழக்குகள் கடந்த 30.06.2022 அன்று நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காவல்துறையினரால் பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டில் தொடரப்பட்ட B/685/22 வழக்கு மற்றும் குறித்த ஆசிரியர் 13 வயது பதினோரு மாதங்களை உடைய மாணவி ஒருவரை பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையினரிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனடிப்படையில் காவல்துறையால் பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டு, சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் தொடரப்பட்ட B/686/22 வழக்கு ஆகியன இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தனர்.

 

இதன் போது நீதிபதி ஆசிரியரை 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஆசிரியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவும் ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

அவர் ஏவிய பூமேராங்கினால் அவரே தாக்கப்பட்டார் – பதவி விலகுகிறார் போரிஸ் ஜான்சன் !

நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.

 

இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. பின்னர் அடுத்தடுத்து கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று தனது பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும் அக்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக நீடிப்பதாக பிரித்தானிய பிரதமர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பல உலகத்தலைவர்களும் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல தலைவர்களும் பிரெக்ஸிட் வெளியேற்றத்தை காரணம் காட்டி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதே நேரம் உக்ரைன் ஜனாதிபதியின்  ஆலோசகர், மைக்கைலோ போடோலியாக் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது”  “ஏவுகணைத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், கியேவுக்கு முதலில் வந்தவர் ஜோன்சன். எப்போதும் உக்ரைனை ஆதரிப்பதில் முன்னணியில் இருப்பதற்காக அவருக்கு நன்றி” என  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா செய்தியாளர்களிடம் தெரிவித்த போது “திரு. ஜான்சன் அவரால் ஏவப்பட்ட பூமராங்கால் அவரே  தாக்கப்பட்டார்” என்றும் இந்த கதையின் முடிவு “ரஷ்யாவை அழிக்க முயலாதே” என்பதே என்றும் கூறினார்.

பிரித்தானிய அமைச்சரவையில் வரலாறு காணாத ராஜினாமாக்கள்! ஜெயவர்த்தனபுரவில் கோட்டா Go Home – லண்டனில் பொறிஸ் Bye Bye …!!!

இன்று இரவு வரை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனை வெளியேறும்படி வற்புறுத்தி 43 அமைச்சர்கள், இளைய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமாச் செய்துள்ளனர். 24 மணி நேரத்தில் இவ்வளவு தொகையான அமைச்சர்கள் ராஜிநாமாச் செய்தது நவீன பிரித்தானிய அரசியல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். நேற்று மாலை ஆறு மணியளவில் சுகாதார அமைச்சுச் செயலாளர் சஜித் ஜாவட் ராஜிநாமாச் செய்து ஆரம்பித்து வைத்த இந்த அரசியல் நாடகத்தில் அடுத்த பத்து நிமிடங்களில் நிதியமைச்சர் ரிஷி சுனாக் ராஜிநாமாச் செய்தார். இன்று பிரித்தானியாவில் இயங்கும் அரசு இல்லாத நிலையேற்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக இவ்வாறான அரசியல் நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் பிரதமர் ராஜிநாமாச் செய்வதே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது எதற்கும் அசைந்து கொடுக்காமல் தடித்த தோலுடன் எவ்வித சுரணையும் இன்றி தான் தொடர்ந்தும் பதவியில் இருப்பேன் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்து இருக்கின்றார். பிரதமர் பொறிஸ்க்கு முன்னர் அப்பதவியில் இருந்த திரேசா மே, டேவிட் கெமரூன், மார்பிரட் தட்சர் கூட நெருக்கடிகள் ஏற்பட்ட போது கௌரவமாக தங்கள் பதவியை ராஜிநாமாச் செய்தனர். ஆனால் பிரதமர் பொறிஸ் பதவி விலகுவதற்கான எவ்வித சமிஞ்சையையும் வெளியிடவில்லை. மாறாக தன்னிடம் மக்களாணை இருக்கின்றது என்றும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பேன் என்றும் தெரிவித்து வருகின்றார்.

ஆனால் பிரித்தானிய பிரதமருக்கு மிகநெருக்கமானவரான உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இன்று பிரதமர் பொறிஸை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரதமர் பொறிஸ்க்கு நெருக்கமான நதீம் சகாவி, கிராம் சாப் போன்ற அமைச்சர்களும் அவரை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது மூழ்கிக்கொண்டிருக்கும் கொன்சவேடிவ் அமைச்சரவைக் கப்பலில் இருந்து குதித்துத் தப்புவதிலேயே அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர்.

கடந்தவாரம் கொன்சவேடிவ் கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 38 வாக்குகளால் தோல்வி கண்டது. ஆனால் இன்னுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் 38 பேர் கூட பிரதமர் பொறிஸ்க்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வந்தபோது ‘கோட்டா கோ ஹோம்’ என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோசம் எழுப்பினர். அதேபோல் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் கேள்வி நேரம் முடிந்து செல்லும் போது ‘bye bye … பொறிஸ்’ என்று இனிமேல் பாராளுமன்றம் வரவேண்டாம் என்று வழியனுப்பி வைத்தனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் ஏற்படவுள்ள பிரித்தானிய பிரதமர் பதவி வெற்றிடத்திற்கு பத்து வரையான கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் அணி வகுத்துள்ளனர். முதலில் தன் அமைச்சுப் பதவியை ராஜநாமாச் செய்த சஜித் ஜாவட் உட்பட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் மற்றும் பலர் பொறிஸ்க்கு எதிரான அணியில் இருந்து போட்டியிட உள்ளனர். கல்வி அமைச்சராக இருந்து தற்போது கடந்த 24 மணிநேரம் நிதி அமைச்சராக இருக்கும் நதீம் சகாவி மற்றும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் உட்பட இன்னும் சிலர் பொறிஸின் வெற்றிடத்தை நிரப்ப அவர் பக்கம் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் அடுத்த தேர்தல் 2024 இலேயே நடைபெற வேண்டும். ஆனால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீது கட்சியின் அழுத்தம் மேலும் மேலும் இறுக்கமடைந்தால் பொறிஸ் ஜோன்சன் பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பு விடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் அத்தேர்தலில் வெற்றி பெற்றால் ‘போனால் மயிர். வந்தால் மலை’ என்பது தான் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் கணிப்பாக இருக்கும். இன்று தூக்கத்தில் அவருடைய சிந்தனை “தோல்வியை ஏற்றுக்கொண்டு எதுவுமே இல்லாமல் வெளியேறுவதா? அல்லது அடுத்த தேர்தலை அறிவித்து மீண்டும் மக்களிடம் செல்வதா?” என்பதாகவே இருக்கும்.

இவ்வாறான ஒரு பொதுத் தேர்தல் நடந்தால் அதில் பொறிஸ் ஜோன்சன் வெல்வார் என்பதும் கேள்விக்குறி. ஏனெனில் ஏற்கனவே பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பற்றி கட்டப்பட்ட விம்பம் சுக்குநூறாகி விட்டது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறுவதை – பிரிக்ஸிற்றை வைத்து தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற பொறிஸ் ஜோன்சனால் ஐந்தாண்டு பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

இந்நிலைமை இலங்கையின் அரசியலுடன் ஒப்புநொக்கக் கூடிய வகையில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை வென்று தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டபாய ராஜபக்சவால் தற்போது அரசைக் கொண்டு நடத்த முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒரு விடயத்தை சாதித்துவிட்டோம் என்பதற்காக அதுவே காலம் பூராவும் வாக்குகளைக் குவிக்கும் என எண்ணுவது மடமை. ஆப்பிரஹாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவை விதிக்கமைய ஒரு தேவை நிறைவேற்றப்பட்டால் மக்கள் அத்துடன் திருப்தியடைந்து அதே நிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களது தேவை படிநிலையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடும். புதிய தேவையை ஆட்சியாளர்கள் பூர்த்திசெய்யாது விட்டால் மக்களின் எதிர்ப்புக்கு ஆட்சித்தலைமை உள்ளாகும். பிரித்தானியாவிலும் இலங்கையிலும் நடப்பது அதுவே.

அதுமட்டுமல்லாமல் நாடு மிகப்பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. அண்மைய வரலாறு காணாத விலைவீக்கம், அதனால் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கீழ்நிலையில் இருந்த வட்டிவீதம் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. செல்வந்த நாடுகளின் கூட்டில் பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பிதத்துக்கு வந்துவிட்டது. அதனால் பிரித்தானியா பொருளாதார நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது.

உக்ரைன் யுத்தத்திற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூடுதல் கரிசனை காட்ட அல்லது யுத்தத்தைத் தூண்டிவிட அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மறைத்து மக்களைத் திசை திருப்பும் எண்ணமும் முக்கிய காரணம். பிரித்தானிய பிரதமரின் லொக்டவுன் குடி கும்மாளம், அடுக்கடுக்காக அவர் அவிழ்த்துவிட்ட பொய்கள், உள்ளடக்கம் இல்லாமல் மிகைப்படுத்திப் பேசுவது, இறுதியாக பாலியல் குற்றங்கள், துஸ்பிரயோகங்கள் செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் அவை பற்றித் தெரிந்திருந்தும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அமைய பதவி உயர்வுகள் வழங்கியது, பின் அவற்றை மறைக்க பொய்புரட்டுக்களை அவிழ்த்துவிட்டது என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் உள்நாட்டில் தங்கள் இருப்பைத் தக்க வைக்க உக்ரெய்னில் உக்கிரமான யுத்தத்தை நடத்தி வந்த போதிலும்; உள்நாட்டில் அவர்களுக்குள்ள நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தலைவர்களின் கயமைக்கு உக்ரெய்ன் மற்றும் பிரித்தானிய அமெரிக்க மக்கள் விலையைச் செலுத்துகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் பொறிஸ் கௌரவமாகப் பதவி விலகுவாரா? இல்லையேல் அவர் பலாத்காரமாக கட்சியினால் வெளியேற்றப்படுவாரா? இல்லையேல் அவர் பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்பது இன்றும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் தெரியவரும். பொருளாதாரம் அரசியல் கற்போருக்கு அதனை அவதானித்து வருவோருக்கு இதுவொரு உலக ஆய்வுகூடம்.

முன்னைய செய்தி : https://www.thesamnet.co.uk//?p=86949