09

09

கோட்டபாய இராணுவத்தளபதியால் கைது செய்யப்பட வேண்டும் !

நாட்டின் அமைதியை உறுதிப்படுத்த ஜனாதிபதி கோட்டபாய பதவி விலக வேண்டும் அல்லது இராணுவ தளபதி கோட்டாபயவை கைது செய்ய வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலமே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணிலும் வெளியே – இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் !

பாராளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த கலந்துரையாடலில் Zoom ஊடாக பிரதமரும் பராாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்ப சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக ரவூப் ஹக்கீமின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், சபாநாயகர் ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்பதற்கான  வழிவகைகளை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார்

இலங்கையின் புதிய ஜனாதிபதி யார்..? – வெளியானது அறிவிப்பு !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

இன்று (09) மாலை சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் ஷூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டனர்.

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்,அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குவியும் மக்கள் – பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 23 பேர் வரை காயம் !

கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும்  ஜனாதிபதி மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு பொலிஸார் உட்பட 23 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்.

முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி மாளிகை – பதவி விலக கோட்டாபாய சம்மதம் !

இலங்கை முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு இணங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தற்போதைய நெருக்கடி நிலையில் பதில் ஜனாதிபதி  ஒருவரை நியமிப்பது குறித்து உயர்மட்ட ஆலோசனை நடந்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது பதவியிலிருந்து விலக கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதற்கான திட்டத்தை நேற்று இரவு அவர் தனக்கு நெருங்கியவர்களிடம் அறிவித்துள்ளார்.

அதற்கமைய, தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் உள்ள பதுங்குகுழியில் தங்கியுள்ள கோட்டாபய இன்று டுபாய் செல்லவுள்ளார் என்றும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது.

Breaking news:- போராட்டடக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஜனாதிபதி மாளிகை !

கொழும்பு முழுமையான பகுதிகளிலும் கோட்டாபாய அரசாங்கத்தை எதிர்த்து இன்றைய தினம் மிகப் பெரிய அளவிலான போராட்டங்கள் காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் மாளிகையை சுற்றி முற்றுகையிட்டிருந்த மக்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதியின் மாளிகையை முழுமையாக கைப்பற்றகயுள்ளதாக அறிய முடிகின்றது.

 

கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வின் மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

இதே நேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புத் தேடி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.