12

12

“இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான்.”- போராட்டக்காரர்களிடம் மனோ கணேசன் !

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த வேண்டாம். ஆகவே, இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக வேண்டும். அதுபோல் மதசார்பற்ற நாடாகவும் வேண்டும். இந்த கருத்துகள் நாட்டின் அரசியலமைப்புக்குள், சட்ட வரையறைக்குள் வர வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

காலிமுக போராட்டக்காரர்கள் அரசியல் கட்சிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் உரை நிகழ்த்திய மனோகணேசன் எம்.பி மேலும் கூறியதாவது;

எம்பிகள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சிலவேளைகளில், நாட்டுக்கும், பதவிக்கும் சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள். உண்மையில் நாட்டுக்கும், பதவிக்கும் தாம், ஒருபோதும் சொந்தக்காரர்கள் இல்லை, தெரிவு செய்யப்பட்ட சில காலத்துக்கான குத்தகைகாரர்கள்தான் என்பது சிலருக்கு மறந்து விடுகிறது. ஆகவே தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கண்காணிக்க நிரந்தரமாக மக்கள் சபைகள் தேவை. ஆகவே உங்கள் மக்கள் சபை என்ற பிரேரணையை வரவேற்கிறேன்.

ஆனால், மக்கள் சபை என்ற பிரேரணையை சும்மா வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அது நாட்டின் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு சட்ட வலு கிடைக்கும். அதேபோல் இன்னமும் சில அடிப்படை விடயங்கள் நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும்.

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதை தீர்க்காமல் ஒன்றும் நடக்காது. உங்கள் போராட்டம் சிங்கள போராட்டமல்ல என நினைக்கிறேன். தமிழ் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன். முஸ்லிம் போராட்டமல்ல எனவும் நினைக்கிறேன். அது சிங்கள, தமிழ், முஸ்லிம் போராட்டம் என நினைக்கிறேன்.

இந்த கருத்தும், போராட்டக்களத்தில் இருந்தால் போதாது. அதுவும் நாட்டின் அரசியமைப்பில் இடம்பெற வேண்டும். எப்படி? இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடு என்பதும், மதசார்பற்ற நாடு என்பதும் நாட்டின் அரசியமைப்பில் சட்டப்படி இடம்பெற வேண்டும்.

இந்நாடு ஒரு இனத்துக்கும், மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்தப்படக்கூடாது. இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம், நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். மதசார்பற்ற நாடாக அரசியலமைப்பில் கூறப்பட வேண்டும். அப்போதுதான் இவற்றுக்கு சட்ட வலு கிடைக்கும். இது எமது போராட்டம்.

பிரபஞ்சத்தின் ரகசியத்தை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி..!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஆய்வு மையம் விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திராத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறது. இதன்படி ஐரோப்பா மற்றும் கனடாவில் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ‘ஜேம்ஸ் வெப்’ என்ற விண்வெளி தொலைநோக்கியை நாசா உருவாக்கியது.

இந்த தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 5 ராக்கெட்டுகள் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் முதலாவது வண்ணப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நேற்று இரவு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலாஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது. இதன் மூலம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து 1,300 ஆண்டுகள் பயணம் செய்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில்நெல்சன் கூறி உள்ளார். இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள டூவிட்டர் பதிவில், ‘இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச்சிவப்பு காட்சி. அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண்மீன் திறள்களை காட்டுகிறது. தொலை நோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ஜூலை 12-ந்தேதி வெளியிடப்படும்’ என கூறப்பட்டுள்ளது. நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோபைடன், விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளார்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி: பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு | NASA's  Webb Delivers Deepest Infrared Image of Universe Yet - hindutamil.in

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை – தாயும் மகனும் கைது !

38.36 கிலோ கிராம் ஹெரோயினை வைத்திருந்த இருவர் எம்பிலிப்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிபிட்டிய, இரண்டாவது ஒழுங்கில் உள்ள வீடொன்றில் 36 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 46 வயதுடைய தாய் மற்றும் அவரது 22 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாளை கோட்டாபாய பதவி விலகுவதில் சிக்கல் – வெளியாகியுள்ள தகவல் !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.

தனக்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் விமான நிலையம் ஊடாக பாதுகாப்பான நாட்டுக்கு செல்ல அதிகாரிகளும், மக்களும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டு இராணுவ முகாமில் கூட தங்க முடியாது. இது உயிருக்கு அச்சுறுத்தலான விடயம் எனவே கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரத்தில் தலையிட்டு நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார்.

குவியும் போராட்டக்காரர்கள் – அலரிமாளிகையில் பொருட்கள் திருட்டு போகிறதாம் !

அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், அலரிமாளிகையில் இருந்து சில உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக அலரி மாளிகையின் ஊடகப் பிரிவு முறையிட்டுள்ளது.

எவ்வாறாயினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் அலரிமாளிகையை ஆக்கிரமித்து வருவதால், அலரிமாளிகை வளாகத்தில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பதை அறிய முடியவில்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அலரிமாளிகையில் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பல சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இன்று அதிகாலை அலரிமாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே மாதத்தில் சுமார் 25000 அதிகமானோர் இலங்கையை விட்டு வெளியேற்றம் !

இவ்வருடம் ஜூன் மாதத்தில் 27,937 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 18,083 பேர் தாங்களாகவே வேலை வாய்ப்புகளை தேடிக்கொண்டதாகவும், 9,854 நபர்கள் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஜனவரி மற்றும் ஜூலை முதல் வாரத்திற்கு இடையில், 156,179 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 100,767 பேர் சொந்த வழிகளிலும் 55,411 பேர் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் மூலம் நாட்டை விட்டு வெளியேறினர்.

மேலும் குவைத்திற்கு 39,216 பேர், காட்டருக்கு 36,022 பேர், சவுதி அரேபியாவுக்கு 26,098 பேர், தென் கொரியாவுக்கு 3,219 பேர், ஜப்பானுக்கு 2,576 பேர் வேலைக்காகச் சென்றுள்ளனர்.

“ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவி வகிப்பதற்கு வெட்கமற்ற ரணிலுக்கு இடம் கொடுக்க கூடாது.”- கூட்டமைப்பினர் வலியுறுத்தல் !

ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் என போராட்டக்காரர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடிவந்து பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், இரு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்‌ஷ விலகியிருப்பார் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே ஒருநாளேனும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பதற்கு ரணிலுக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், போராட்டக்காரர்களின் கருத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஒத்துப்போகின்றது எனவும் எம்.ஏ சுமந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இன்று(12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்துதெரிவித்த இரா. சாணக்கியன், , “கடந்த 30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. ஜனாதிபதி  பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகாவிடின் அவர் பதில் அரச தலைவர் பதவியேற்பார் அதனை தடுக்க முடியாது.

ஆகவே அவர் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் போராட்டத்தில் ஈடுப்படுவதற்கு முன்னர், அதனை தடுக்கும் வகையில் அனைவரும் ஒன்று திரள வேண்டும். ஏனெனில் இவர் வெட்கமற்ற நபர் என்பதை நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளேன். இவரது வீடு எரிக்கப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது. இருப்பினும் அச்சம்பவம் சந்தேகத்திற்குரியது.

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றால் அரச தலைவர் பெரமுனிற்கும் அது பிரச்சினையாக அமையும். அரசாங்கத்திற்குள் திருடர்கள் பலர் உள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தமது விருப்பத்திற்கமை பிரதமர், அரச தலைவர் ஆகியோரை தெரிவு செய்ய கூடும், ஆகவே ஜனாதிபதி  பதவி விலகலுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.” என்றார்.

கோட்டாபாயவிற்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அமெரிக்காவுக்கான விருந்தினர் விசாவை வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரின் கருத்தை கோடிட்டு குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வார இறுதியில் அமெரிக்கா செல்வதற்கான விருந்தினர் விசாவை கோட்டாபய ராஜபக்ச கோரியதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதி ஒருவருடன் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து  கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு பாதுகாப்பான பாதையை நாடினார், ஆனால் அது மறுக்கப்பட்டது என குறித்த பிரதிநிதி தெரிவித்தார். அவர் விசா இல்லாமல் ஒரு மாநிலத் தலைவராக அங்கு செல்ல முடியும், ஆனால் தற்போதைய சூழ்நிலைகள் அது முடியாது.

இதேவேளை, அவருக்கு விசா கிடையாது என்பது அவருக்கு மிகத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் SBS Sinhala வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக பணவீக்க சுட்டெண் – இலங்கை மூன்றாவது இடம் !

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பணவீக்க அறிக்கையின் பிரகாரம் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

நேற்று (11) வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின்படி, பணவீக்க சுட்டெண்ணில் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதன்படி, பணவீக்கக் குறிகாட்டியில் சிம்பாப்வே முதல் இடத்தில் இருக்கும் அதே வேளை துருக்கி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கின் பணவீக்கக் குறியீடு, உலகப் பொருளாதார நிலைமை குறித்து மாதந்தோறும் வெளியிடப்படுகிறது, இது உலகின் முக்கிய பணவீக்க பகுப்பாய்வு அளவுகோலாகக் கருதப்படுகிறது.

அதன்படி வெனிசுலா நான்காவது இடத்திலும், லெபனான் ஐந்தாவது இடத்திலும், பாகிஸ்தான் 12ஆவது இடத்திலும் உள்ளன.

பெரமுனவின் தலைவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேறமாட்டார்கள் !

எந்த ஒரு தலைவரும் நாட்டைவிட்டு வெளியேறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியத் தலைவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் காணொளிகளில் உண்மையில்லை என அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் உயர்பீட தலைவர்கள் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டிலேயே தங்கியிருப்பார்கள் என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.