13

13

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுக்கொண்டிருக்கும் போராட்டக்காரர்கள் – ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்க்கப்படும் தடை !

நாடாளுமன்றத்துக்கு முன்னால் பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயம் போராட்டக்காரர்களும் எதிர்தாக்குதலை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதோடு, தாக்குதலை மேற்கொள்ள முன்நகர்ந்து வந்த இராணுவத்தினருடன்கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் எடுத்து வேறொரு பகுதிக்கு கொண்டுசென்றிருப்பதாக தெரியவருகிறது. இது ஒரு பாரதூரமான செயலாக மாறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் நாடாளுமன்றத்தின் கடைசி வீதித்தடை ஜேசிபி இயந்திரம் கொண்டு தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க ராணுவத்தினர் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் ரோபோ – சீனா அசத்தல் !

மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் போன்ற ரோபோவை சீன விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய இந்த ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

 

தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருக்கும் இந்த ரோபோக்கள் 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவு கொண்டவை. ஆழமான நீரில் மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சவும், கடல் மாசுபாட்டை பகுப்பாய்வு செய்வதற்கான தகவல்களை வழங்குவதையும் இலக்காக கொண்டு இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரோபோ மீன், ஒளியால் கதிரியக்கப்படுகிறது. ஒளியைப் பயன்படுத்தி இந்த ரோபோ மீன்களை மற்ற மீன்கள் அல்லது கப்பல்களில் மோதுவதைத் தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் போராட்டங்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை என்கிறார் சுப்பிரமணியன் சுவாமி !

இலங்கையில் கட்டுக்கடங்காதவர்களின் நடத்தை குறித்து இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என  இந்திய ஆளும் கட்சி அரசியல்வாதியான சுப்பிரமணியன் சுவாமி, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள அவர், கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டத்தினர், நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகளால் வழி நடத்தப்படும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே இந்த பிரிவுகளால் இலங்கையின் சீரழிவு மற்றும் தமது நாட்டின் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் – சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் !

கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்திருந்த நிலையில் கோட்டாபய  இன்று காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பதவி விலகல் தொடர்பான ஆவணங்களை இன்று உத்தியோகபூர்வமாக சபாநாயகரிடம் கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை.

இந்நிலையில் அவ்வாறு பதவி விலகல் நடைபெறவில்லை என்றால் தான் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் அரசியல் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சபாநயாகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேநேரம் ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்கப்பட்டுள்ளது.

இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால் பதில் தாக்குதல் நடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை !

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி  பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. எனினும், இந்தக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை என எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மான் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சந்திப்பில் முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு முப்படையினர் இதன்போது கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கான அனுமதியை தம்மால் வழங்க முடியாது என தாம் தெரிவித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்பட்டால் மாத்திரமே, தாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் – ஜனாதிபதியுமானார் ரணில் விக்கிரமசிங்க – இலங்கை அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பார் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க பல தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிராத நிலையில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனமே கிடைத்திருந்தது. அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தில் பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி இன்று பதில் ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொள்ளுங்கள் – கண் கெட்ட பிறகு டக்கரின் சூரிய நமஸ்காரம் !

நாட்டை வழிநடத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் பட்சத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும்  இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர், அரசியலமைப்பின் அடிப்படையில் விடயங்களை முன்னகர்த்தி நாட்டிற்கு வளமான எதிர்காலத்தினை உருவாக்குவதே தன்னுடைய எதிர்பார்ப்பாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதை ஆரம்பமாக கொண்டு முன்னோக்கி நகர்வததே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான நடைமுறை சாத்தியமான வழிமுறை என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

…………………………..

ஜனாதிபதி கோட்டாபாய தலைமையிலான அரசு ஆதிக்கம் மற்றும்  பதவியிலிருந்த போது – புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான பெரிய அழுத்தங்கள் முன்வைக்கப்படவில்லை.  தமிழ் மக்களின் பிரச்சினைகள் – அபிலாசைகள் தொடர்பில் எந்த அழுத்தங்களும் ராஜபக்சக்களிடம் முன்வைக்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக கூறி பல மாதங்களை தாண்டிவிட்ட நிலையில் இன்று வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

 

வழங்கப்பட்ட அமைச்சுப்பதவியை வைத்துக்கொண்டு பல விடயங்களுக்கும் – பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதாக கூறி இன்று வரை அவற்றை அவர் பெற்றுக்கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சக்களின்  அதிகாரம் நாட்டில் மேலோங்கியிருந்த போது டக்ளசின் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் பல அடாவடிகடிகளிலும் ஈடுபட்டிருந்த அதே நேரம், வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி பணம் பெற்றிருந்ததாகவும் பல தகவல்கள் உள்ளன.

பதவி விலகல் தொடர்பான கடிதத்தை கையளிக்காமல் நாட்டை விட்டுப்பறந்த ஜனாதிபதி !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(புதன்கிழமை) தமது பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவரதன அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் பதவிவிலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை சபாநாயகர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பதவியிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விலகினால், எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

ஜனாதிபதி பதவி வலிகினால், எதிர்வரும் 19ஆம் திகதி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வேட்புமனு கோருவதற்கும், 20ஆம் திகதி வாக்கெடுப்பை நடத்துவதற்கும் குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதே நேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறினார் ஜனாதிபதி கோட்டாபய – உறுதிப்படுத்தியது விமானப்படை !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை விமானப்படையினால் இன்று(புதன்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்பு அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.