இலங்கையின் அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடுத்தடுத்து பல்வேறுபட்ட மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மே மாதம் ஒன்பதாம் தேதி உக்கிரமடைந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டம் இந்த மாதம் ஒன்பதாம் தேதி இன்னும் உச்சமடைந்திருந்தது. உண்மையிலேயே ராஜபக்ச அரசின் எதேச்சதிகாரமும் – கண்மூடித்தனமான அரசியல் நகர்வுகளும் – சுயநல அரசியல் போக்கும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை இதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த 20 வருடங்களுக்கு ராஜபக்சக்கள்தான் நாட்டை ஆளப்போகிறார்கள் பல அரசியல் ஆய்வாளர்களாளும் எதிர்வு கூறப்பட்ட நிலையில் சுமார் 69 லட்சம் மக்கள் ஓட்டுக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இவ்வளவு வேகமாக மண்ணை கவ்வியது. ஏன்..? எதற்கு..? எவ்வாறு..? என்ற கேள்விகளை விட இந்தப் போராட்டங்களுக்கு பின்னணியில் – திரை மறைவில் இருப்பவர்கள் யார்..? இந்தப் போராட்டம் சுமார் மூன்று மாத காலங்களை தாண்டியும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டங்களில் பின்னணியிலிருந்து இயக்கிக் கொண்டிருக்க கூடிய அந்த நிறுவனம் யாருடையது..? இப்படியாக பல கேள்விகள் தோன்றி மறைந்த வண்ணமே உள்ளன.
இந்தக் கேள்விகள் ஒரு மையப் புள்ளியை நோக்கி இருக்கின்றன. அவை தான் இடதுசாரிய கட்சிகள்.
ராஜபக்ச அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களில் முனைப்பு காட்டுகின்ற அமைப்புகள் என்ற வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும், இலங்கை தொழிலாளர் சங்கங்களும் முக்கியமானவை. வடக்கு – கிழக்கு இலங்கையை காட்டிலும் தென் இலங்கையில் அதிகமாக மாணவர் ஒன்றியங்களையும் – தொழிலாளர் சங்கங்களையும் இணைக்கின்ற ஒரு மையப் புள்ளியாக இடதுசாரிய கட்சிகள் காணப்படுகின்றன. இன்றைய போராட்டங்களை முன்னெடுக்கும் மிகப்பெரிய அமைப்புக்களாகவும் இந்த இடதுசாரி கட்சிகளை குறிப்பிடலாம். ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியும், முன்னணி சோசலிச கட்சி ஆகிய இரண்டு அமைப்புகள் இந்த போராட்டத்தில் திரை மறைவில் இருந்து செயல்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஏற்கனவே தேசத்தின் முன்னைய கட்டுரை ஒன்றில் ராஜபக்ச களுக்கு எதிராக அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி மறைமுக மற்றும் நேரடி தலையீடு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருட மே மாதம் மற்றும் ஜூன் மாதம் அளவில் போராட்டங்கள் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அனானிமஸ் என்ற மர்ம குழு தொடர்பான கருத்துக்கள் வேகமாக உலா வரத் தொடங்கியிருந்தன. இலங்கையின் அரசியல் அடித்தளத்தையே நாம் மாற்றப் போகிறோம். அரசியல்வாதிகளின் ஊழல்களை நாம் வெளியிட போகிறோம் என்ற வகையிலாக பல பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
கோட்டா கோ ஹோம் போராட்டங்கள் வலுவடைந்து கொண்டிருந்த போது
கணினி ஹேக்கர்களில் குழுவான ‘அனானிமஸ்,(anonymous) குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை எச்சரிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததது. 14 நாட்களுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் புதிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த காணொளியில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததது. இல்லாவிட்டால் ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்து ரகசியங்களும் வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.
இந்த வீடியோ தொடர்பான எச்சரிக்கை வெளியானதை தொடர்ந்து இலங்கையின் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வாதங்கள் அதிகமாகியிருந்ததது. இதனை தொடர்ந்து ஒரு சில நாட்களுக்குள் ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸநாயக்க அவசர அவசரமாக ஒரு ஊடக சந்திப்பை கூட்டி ராஜபக்சக்களதும், சஜித் பிரேமதாச, மைத்திரிபால சிறீசேன குழுவினரதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கடந்த கால ஊழல்களை அம்பலப்படுத்தியிருந்தார். ராஜபக்சக்கள் மீதான கோபத்தையும் போராட்டத்தையும் தங்கள் பக்கமாக திருப்பி ஜே.வி.பி மட்டுமே இலங்கையின் உண்மையான கட்சி என்பது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது.
அனானிமஸ் குழுவினது ஆதாரங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு அனானிமஸ் குழுவினது ஆதாரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக தோன்றாத நிலையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடியதான ஜே.வி.பியின் செய்திகளை காவிக்கொண்டு திரிந்தன. இதே காலத்தில் ஜே.வி.பி சார்பு ஊடகங்களும் – சில கொமினியூஸ்ட் எழுத்தாளர்களும் ஜே.வி.பி யே மீட்க தகுதியானவர்கள் என குறிப்பிட்டு எழுத தொடங்கினர்.
மக்கள் போராட்டம் என கூறப்பட்ட ஒரு போராட்டத்தை ஜே.வி.பி தன் பக்கம் கவர முற்படுகிறதோ என்ற ஐயம் தான் இங்கு அதிகமாக உள்ளது.
அரசுக்கு எதிரான இந்த போராட்டங்களை முனைப்போடு ஆரம்பத்தில் எதிர்த்துக் கொண்டிருந்தது எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தியே ஆகும். தொழிற்சங்கங்களினதும் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினதும் வருகையை தொடர்ந்து போராட்டம் முழுமையாக இடது சாரிய கட்சிகளின் பக்கம் சாய தொடங்கிவிட்டதை காணமுடிகின்றது. மே- 9 ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டம் உச்சமாக வலுவடைந்த போது அரசுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் அரச ஆதரவு குண்டர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டோரை காலி முகத்திடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச, போராட்டக்காரர்கள் என குறிப்பிடப்பட்ட பலரால் துரத்தப்பட்டார். எனினும் அதே நேரம் போராட்ட களத்தை காண வந்த ஜே.வி.பி தலைவர் அனுரகுமார கைத்தாங்களாகவும் – கையசைத்தும் அந்த பரபரப்புக்குள்ளும் வரவேற்கப்பட்டார். இதனை ஊடகங்களும் பெரிய செய்தியாக காட்சிப்படுத்தின. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று இரண்டு மாதங்கள் வரை தொடர்ச்சியாக அமைதிப் பேணப்பட்டு வந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்திற்கான திகதியாக ஜூலை ஒன்பதாம் திகதியை பிரகடனப்படுத்தியதும் ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க என்பது கவனிக்கத்தக்கது.
உண்மையிலேயே இது மக்கள் போராட்டம் எனில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் பிரமுகரை மட்டும் தாக்கி – இன்னுமொரு கட்சி பிரமுகரை வரவேற்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பதும் சிந்திக்கப்பட வேண்டியதே..!
ஜே.வி.பி மட்டுமா இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது என்றால் இல்லை.
அரசுக்கு எதிரான இந்தப் போராட்ட காலகட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் – சமூக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கும் பெயர் குமார் குணரட்ணம் என்பதாகும். போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பல பல பல்கலைக்கழக மாணவர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் இந்த நபருடைய பேச்சுக்களையும் உரையாடல்களையும் அவதானிக்க முடிகிறது. இந்த போராட்டத்தை உந்தும் குமார் குணரட்ணம் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது.
இலங்கையின் தற்போதைய மிகப்பெரிய மாணவர் அமைப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உருவெடுத்துள்ளது. ராஜபக்ச அரசுக்கு எதிரான போராட்டங்களின் வேகம் குறையும் போதெல்லாம் அந்தப் போராட்டத்தை மீண்டும் மீண்டும் உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை குறிப்பிட முடியும்.
தொழிற்சங்கங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட இந்த மாணவர் ஒன்றியத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாக இன்னும் ஓர் இடதுசாரிய கட்சியாக முன்னணி சோசலிச கட்சி தொழிற்படுகிறது.
இலங்கையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால அசைவுகளை குறிப்பாக 2012 க்கு முன்னரான காலகட்டம் வரை ஜே.வி.பி தீர்மானித்திருந்தது. எனினும் 2012க்கு பிறகு இந்த மாணவர் அமைப்பை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சக்தியாகவும் இதன் அசைவுகளை தீர்மானிக்கக் கூடிய ஒரு மாபெரும் சக்தியாக உள்ள கட்சி Frontline socialist party (முன்னணி சோசலிஸ்ட் கட்சி) என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த அமைப்பே இன்றைய பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டங்களையும் தூண்டி வருவதை காணலாம்.
ஜேவிபி அமைப்பில் இருந்து தீவிர இடது சாரிய கொள்கைகளால் முன்னணி சோசலிச கட்சி மாறுபட்டு நிற்கின்றது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமையை பெற்றிருந்த பிரேம்குமார் குணரட்ணம் என்பவர் இந்த கட்சியின் முன்னணி ஒருங்கிணைப்பாளராக தற்போதைய தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார். 2017 ஆண்டு முதல் இலங்கையின் பிரஜாவுரிமையை பெற்று செயல்பட்டு வரும் பிரேம்குமார் குணரட்ணம் 2020களில் அரசுக்கு எதிரான பாரிய போராட்டங்களை முதன் முதலில் ஆரம்பித்திருந்தார். இனவாதமற்ற இலங்கையினையும் – இடது சாரிய அரசியலையும் முன்னிலைப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கும் இந்த முன்னிலை சோசலிசக் கட்சி ராஜபக்ச அரசுக்கு எதிரான பல்கலைக்கழகம் மாணவர்களின் போராட்டத்தை இன்னும் முடக்கிவிட்டு இருக்கின்றது.
இந்தப் போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னரான காலப்பகுதி வரை ஜே.வி.பி உடனான முறுகல் நிலை அதிகரித்து காணப்பட்ட போதும் கூட இன்றைய காலகட்டங்களில் ஜேவிபியுடன் முன்னணி சோசியலிஸ்ட் கட்சி இணைந்து செல்லக்கூடிய ஒரு போக்கு காணப்படுகின்றது. இதனை பிரேம்குமார் குணரட்ணம் Daily mirror ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். மக்கள் நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியை உறுதி செய்ய வேண்டுமாயின் ஜேவிபியுடன் நாம் இணைந்து பணியாற்ற தயாராகவே உள்ளோம் என இந்த இடதுசாரிகள் குறிப்பிடுகின்றனர்.
குமார் குணரட்ணம் டயஸ்போராக்களிடம் பணம் பெற்று ராஜபக்சங்களுக்கு எதிராக போராடி வருவதாகவும் பலத்த குற்றச்சாட்டுகள் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பதில் அளித்த குமார் குணரட்ணம் “டயஸ்போரா” என்றால் புலம்பெயர்ந்தோர் குழு. முற்போக்கான சிந்தனையுள்ள மூன்று இன மக்களுடனும் நாம் தொடர்பில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகை கைப்பற்றப்பட்டு அது ஒரு சுற்றுலா விடுதியாகப்பட்டமை, மேலும் பிரதமர் மாளிகை முற்றுகை இடப்பட்ட விவகாரம் , அதுபோல நேற்றைய பாராளுமன்ற முற்றுகை தொடர்பான போராட்டம் என பல்கலைக்கழக மாணவர்களின் கை ஓங்கி இருந்த தருணங்களின் பின்னணியில் குமார் குணரட்ணத்தின் தலைமையிலான முன்னணி சோசலிஸ்ட் கட்சியினுடைய ஆதிக்கம் மேலோங்கியுள்ளதை பரவலாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அண்மையில் Daily mirror ஊடக சந்திப்பில் ராஜபக்ச அரசுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டம் தொடர் குமார் குணரட்னவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது “சோசலிஸ்டுகளின் ஆட்சி அமையும் வரை போராட்டம் தொடரும்” என்பது போன்றதான தொனியில் பேசியிருந்தார்.
மக்கள் போராட்டம் என குறிப்பிடப்பட்டு மேற்கொள்ளப்படும் இந்த போராட்டங்களின் பின்னணி இடதுசாரிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது என்பதே உண்மை. மக்கள் கூட்டத்தை சரியான வழியில் இந்த இடதுசாரியக் கட்சிகள் வழிநடத்தினால் சந்தோஷமே. ஆனால் ரஷ்யாவிலும் சரி கொமினியூச புரட்சி நடந்த உலகின் ஏனைய நாடுகளிலும் சரி புரட்சிகள் மட்டுமே முறையாக நடந்தன. புரட்சியின் பின்னராக அமைந்த அரசுகள் நீடித்த சர்வாதிகாரப் போக்கையே நடைமுறைப்படுத்தின. அவ்வாறான ஒரு நிலை இலங்கையிலும் ஏற்படுமாயின் ராஜபக்சக்களின் ஆட்சியே மேலானதாக இருந்திருக்கும்.
சரி இந்த போராட்டங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்றால் …?
இந்த இடதுசாரிய கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் வரை இந்த போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கப் போகின்றன. இந்த இடது சாரிய கட்சிகளின் பதவி வெறிக்காக – வெற்றிக்காக – இடதுசாரிய அரசியலுக்காக இன்னும் எத்தனை அப்பாவிகள் கைதாகப்போகிறார்கள்..? வன்முறை நோக்கி தூண்டப்பட போகிறார்கள்..? என்பது தான் சிந்திக்கப்பட வேண்டிய கவலையான விடயம்.