16

16

ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்களின் கைரேகைகளை சேகரித்த பொலிஸார் !

பாராளுமன்ற நுழைவு வாயிலுக்கு அருகில் அண்மையில் ஏற்பட்ட கடும் பதற்ற சூழ்நிலையின் போது பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான இரண்டு துப்பாக்கிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின் பின்னர் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

காணாமல் போன துப்பாக்கிகளைக் கண்டுபிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்களின் கைரேகைகள் அனைத்தையும் பொலிஸார் பெற்று அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

எதிர்கால பயன்பாட்டிற்காக அவை பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்புக்கு அனுமதி – அமெரிக்காவில் இரு மசோதாக்கள் நிறைவேற்றம் !

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனாதிபதி வேட்பாளர்களாக இது வரை நான்கு பேர் – அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யப்போகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிரான தொடர் போராட்டம் அழுத்தம்  காரணமாக  நாட்டைவிட்டுச் சென்ற கோத்தபய ராஜபக்ச முறைப்படி தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார். முன்னதாக இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையின் புதிய ஜனாதிபதியை  தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை  பாராளுமன்றம் தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த சிறப்பு அமர்வின் போது, அதிபர் தேர்தல் நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க திசநாயக்க அறிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை வரும் 19 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட  வேண்டும் என அவர் தெரிவித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தால், புதிய ஜனாதிபதிக்கான  தேர்தல் எதிர் வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

225 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும்கட்சியாக காணப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ள நிலையில் அந்த கட்சி ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர ஜே.வி.பிதலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இதே நேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

தீர்க்கமான முடிவு ஒன்றை தமிழர் தரப்பு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் “புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் மனுவை கையளிக்க இன்னும் மீதமாக நான்கு நாட்கள் உள்ள நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் என்னென்ன மாற்றஙங்கள் நடக்கப்போகின்றன என்று.

போராட்டக்காரர்களால் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை தாக்கப்பட்ட விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்!

அரசாங்கத்திற்கு சொந்தமான மாளிகைகளை போராட்டகாரர் சேதப்படுத்தியுள்ள நிலையில், சேதத்துக்குள்ளான சொத்துக்களின் பெறுமதி தொடர்பான கணக்காய்வை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.

அரசுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தினால் அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகையில் கணிசமான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த அழிவுகள் சம்பந்தமாக திணைக்களம், அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தது. இந்த செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தொல்பொருள் கட்டளைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

கடந்த ஒன்பதாம் திகதி இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிரான போராட்டம் உச்சம் பெற்ற நிலையில், அன்றைய தினம் போராட்டக்காரர்களால்  ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன கைப்பற்றப்பட்டன.

இதன்போது அங்கிருந்த அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும், சில பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

இனி இலங்கை பிரஜைகள் அனைத்து தரப்பினருக்கும் ஒத்துழைக்க வேண்டும் – அமெரிக்கா

கோட்டாபய ராஜபக்ஷவின் வெளியேற்றத்துடன், இலங்கைப் பிரஜைகள் இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடனும், கூடியளவு கவனம் செலுத்துவதாகவும் ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தல் !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின் சுதந்திரம் தொடர்பான ஆவணங்கள் பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைக்கு அமைய பதில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

“இலங்கைக்கு சேவையாற்ற தயாராகவே உள்ளேன் .”- கோட்டாபாய ராஜபக்ஷ

இலங்கை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.

அந்த கடிதத்தில் கோட்டாபய மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஜனாதிபதியாக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அவை பலன் தரவில்லை. நாட்டுக்கான சேவையை ஆற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன் எனவும் கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.