ராஜபக்சாக்கள் நிரந்தரமாக துரத்தப்பட்டுவிட்டார்கள் என்ற குதுகலத்தில் போராட்டக்காரர்கள் உள்ளனர். சர்வதேச மேற்கு ஊடகங்கள் கோத்தாபய ராஜபக்சவின் உள்ளாடையை கொண்டாடியது. ஆனால் எது நடக்க வேண்டுமோ அது நன்றாக நடக்குமா? என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. போரட்டக்காரர்களிடமும் பதில் இல்லை. அவர்கள் காலிமுகத்திடலில் காற்று வாங்கி இப்போது ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிப் பார்த்து செல்பி எடுப்பதிலேயே ஆர்வமாக உள்ளனர். போராட்டக்காரர்கள் இலங்கையை அடுப்பிற்குள் இருந்து நெருப்பிற்குள் தள்ளியுள்ளனர். ஐஎம்எப் மற்றும் உலக வங்கிக்கு இலங்கையைப் பலிகொடுப்பதற்கு இருந்த தடங்கல்கள் நீக்கப்பட்டுவிட்டது. இன்னும் சிறிது காலத்தில் பெற்றோல், எரிவாயு, சேதனப் பசளைக்காக இலங்கையின் இலவசக் கல்வி, இலவச மருத்துவம், வழங்கப்பட்டு வரும் மானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்படும். இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பொருளாதாரம் பற்றியும் அரசியல் பற்றியும் புரியாத இதே மக்களின் பிள்ளைகளுக்கு இதுவரை கிடைத்துவந்த அடிப்படை வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையைத் தொடர்ந்தும் பொருளாதார அடிமையாக்குவதில் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அதன் பின்னுள்ள உலக நாடுகளும் மிகக் கச்சிதமாக இயங்குகின்றன.
ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள்:
வினைத்திறனற்ற ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் கிளர்ச்சிகளை மேற்கொள்ள மக்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. ஆனால் இவ்வாறான போராட்டங்கள் புரட்சிகர கட்சிகளால் முன்னெடுக்கப்படாமல் தலைமை தாங்கப்படாமல் எழுந்தமானமாக நடத்தப்படுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை. மாறாக பிரச்சினையை மேலும் மோசாமாக்குவதோடு, போராடியும் பயனில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். எதிர்காலம் முன்னிலும் மோசமானதாக அமையும்.
உலக அளவில் அண்மைக்காலங்களாக நடத்தப்பட்டுவரும் திடீர் ஆட்சிமாற்றங்கள் ஒன்றும் மக்களால் மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு அரப் ஸ்பிரிங் ஆனாலும் காலிமுகத்திடலானாலும் விதிவிலக்கல்ல. மக்களை வைத்தே அந்த மக்களைச் சுரண்டும் கைங்கரியத்தை அமெரிக்க மற்றும் நாட்டுத் தலைமைகள் மிக உன்னதமாக மேற்கொண்டு வருகின்றன. காருக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் பெற்றோல் கிடைக்காத அகரலியாக்களின் காலிமுகத்திடல் போராட்டம் இலங்கையை நிரந்தரமாக சீரழிப்பதற்கு மேற்குநாடுகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுக்கும் பல்கைலக்கழகங்களில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு தங்கள் சகமாணவிகளையே ராக்கிங் என்ற பெயரில் கொடூர பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து விடுவிக்க முடியவில்லை. அல்லது விடுவிக்க விரும்பவில்லை. காலிமுகத்திடல் போராட்டம் உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட நீண்டகால சிந்தனையற்ற உயர்தர சமூகத்தின் போராட்டம். இது மோட்டார் சைக்கிள் காருக்கு பெற்றோலுக்காக கீழ்நிலை மக்களுக்கு இருந்த குறைந்தபட்ச பாதுகாப்பையும் அகற்றியுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைத் தீர்க்காமல் நாட்டை விற்கும் போராட்டம்:
நாட்டில் ஏற்பட்டு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை. அதன் அடிப்படை அம்சம் அந்நியச்செலாவணி கையிருப்பில் இல்லை. இந்த அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லாமால் போனதற்காண முக்கிய காரணம் நாட்டிற்கு அந்நியச் செலவணியைக் கொண்டுவரும் துறைகள் அண்மைய நெருக்கடிகள் காரணமாக நிறுத்தப்பட்டது. குறிப்பாக சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் 13 வீதத்தை கொண்டுவருவது. அது முற்றாக முடங்கியது. தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர் அனுப்புகின்ற பணம். உலகம் முழவதும் ஏற்பட்ட கோவிட் நெருக்கடியால் இவ்வருமானங்கள் முற்றிலும் முடங்கியது. அதேசமயம் முதலீடுகளை ஊக்குவிக் வரிக்குறைப்பைச் செய்ததன் மூலம் அதன் மூலம் ஈட்டக்கூடிய வருமானமும் முற்றிலும் முடங்கியது. தமிழர்களின் ஜஎஸ்பி பிளஸ் நிறுத்த போராட்டத்தின் மூலம் ஆடை ஏற்றுமதியில் கிடைத்த வரிச்சலுகை இலங்கைக்கு தற்போது இல்லை. இவையே பொருளாதார நெருக்கடியின் பின்னணி.
இதிலிருந்து மீள்வதற்கு முதல் செய்ய வேண்டியது நாட்டில் அமைதியை நிலவச் செய்து உல்லாசப் பயணிகளை செங்கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அதனைச் செய்திருந்தாலேயே தற்போதிருந்த பெற்றோல் எரிவாயு நெருக்கடியை தீர்த்திருக்க முடியும். நாட்டில் ஏற்பட்டுள்ள விலை வீக்கத்தினால் இலங்கையின் நாணயப் பெறுமதி மிகக் குறைந்துள்ளது. இது வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதனை விடுத்து தொடர்ந்தும் நாட்டை முடக்கி பொருளாதாரத்தை சீரழிப்பது சர்வதேச நாணய நிதியத்திடமும் உலக வங்கியிடமும் இலங்கையை ஒப்படைக்கும் ஒரு திட்டமே.
இலங்கைப் பொருளாதார நெருக்கடியும் சர்வதேசப் பின்னணியும்:
அமெரிக்காவில் ஜனவரி ஆறில் டொனால்ட் ட்ரம் தன்னுடைய ஆதரவு மக்களை ஹப்பிடல் ஹில் மீது ஏவிவிட்டார். செனட்டர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மேசைகளின் கீழ் பதுங்கினர். ஹபிடல் ஹில் அரகலியாக்கள் கட்டடத்திற்குள் நூழைந்து தங்கள் வெற்றியை ஆர்ப்பரித்து கொண்டாடினர். ஹபிடல் ஹில் அரகலியாக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 10 பேர்வரை கொல்லப்பட்டனர். ஹபிடல் ஹில் அரகலியாக்களை பயங்கரவாதிகள் என்றும் தீவிர வலதுசாரிகள் என்றும் அமெரிக்க மற்றும் சார்புநாடுகளின் ஊடகங்கள் முத்திரை குத்தின. விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றது. மாறாக கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை கைப்பபற்றிய காலிமுகத்திடல் அரகலியாக்களை சர்வதேச ஊடகங்கள் கொண்டாடியது மட்டுமல்ல ஜனாதிபதியின் உள்ளாடையையும் தூக்கி கொண்டாடினர். அத்தோடு சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் தான் இலங்கையை பொருளாதாரக் கஸ்டத்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரும் காலிமுகத்திடல் அரகலியாக்களுக்கு ஆதரவானவர்களின் பேட்டிகளும் ஒலிபரப்பப்பட்டது.
சீனா இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தான் நாட்டை இந்நிலைக்கு இட்டுச்சென்றது என்ற பரப்புரையை இந்தியாவும் மேற்குநாட்டு ஊடகங்களும் தீவிரமாகப் பரப்பின. ஆனால் சீனா இலங்கைக்கு வழங்கிய கடன் 10 வீதம் மட்டுமே. இந்த பத்துவீத கடன் கூட இலங்கையின் நீண்டகால கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள். அவை நீண்டகாலத்தில் இலங்கையின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பயன்படக்கூடியவை. இலங்கையில் சீனாவின் ஆளுமையை விரும்பாத இந்தியாவும் மேற்குநாடுகளும் இலங்கைக்கும் சீனாவுக்கும் எதிரான பரப்புரைகளில் மிகநீண்டகாலமாக ஈடுபட்டுவருகின்றன. இதற்குச் சாதகமாக 2009 யுத்த முடிவை கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராகப் பயன்படுத்தி வந்தன. இந்த யுத்தத்திற்கு முற்று முழதான ஆதரவை அழித்துவந்த சர்வதேசமும் இந்தியாவும் தாங்கள் ஏதோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகள் போல் நடித்துவருகின்றனர்.
மேலும் அமெரிக்க சார்பான ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ரஷ்ய விமானங்களைத் தடுத்து வைத்திருந்தார். அதன் பின் கோட்டபாய ராஜபக்ச தனது பிரதிநிதிகளை ரஷ்யாவுக்கு அனுப்பி பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தி இருந்தார். அதன் முடிவுகள் வருவதற்கு முன்னரேயே அரகலியாக்கள் கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதிச் செயலகத்தைவிட்டும் நாட்டைவிட்டும் வெளியேற்றினர். பாகிஸ்தானில் சினாவுடன் நெருக்கமாக முற்பட்ட தன்னை அமெரிக்கா சதிமூலமாக வெளியேற்றியதாகவும் தற்போது நாட்டை கிரிமினல்களிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானுக்கு நடந்த அதே நிலை ராஜபக்சவுக்கும் நடந்தேறியுள்ளது. நாட்டுத்தலைவர்கள் எப்பேர்ப்பட்ட மோசமானவர்களாக, கொடூரமானவர்களாக, சர்வதிகாரிகளாக, மனித உரிமையை மீறுபவர்களாக இருந்தாலும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் அமெரிக்க மற்றும் சார்பு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் வரை. அவர்களுக்கு எதிரான ரஷ்யாவுடனோ அல்லது சீனாவுடனோ கூட்டுச் சேர்ந்தால் அல்லது திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைக்கு மாறாகச் சென்றால் அவர்கள் நையப்புடைக்கப்படுவார்கள். அவர்களுடைய உள்ளாடைகள் சர்வதேச ஊடகங்களில் வலம்வரும். சதாம் ஹ_சைன், கேர்ணல் கடாபி, முகாபே இவர்கள் எல்லோருமே அமெரிக்க – பிரித்தானிய கூட்டின் செல்லப்பிள்ளைகளாக இருந்து அமெரிக்காவிற்கு எதிரியானவர்கள். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையீடு செய்த எந்தநாடும் உருப்படவில்லை. உருப்படவும் விடமாட்டார்கள். அந்த நீண்ட பட்டியலில் காலிமுகத்திடல் அரகலியாக்களின் உதவியோடு இலங்கையும் சேர்க்கப்பட்டு உள்ளது.
அரகலியாக்களின் கோரிக்கைகள் அல்ல விருப்பப்பட்டியல்:
பல்கலைக்கழக மாணவர்கள் கீழ்த்தரமான பகிடிவதைகளில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளாகும் தமது சக தோழர்களுக்கு சார்ப்பாக எப்போது போராடத் தொடங்கினார்களோ அதிலிருந்து அவர்களது போராட்டங்கள் மிகக் கீழ்த்தரமானவையாக்கப்பட்டுவிட்டன.
இந்த காலிமுகத்திடல் அரகலியாக்களால் முன்வைக்கப்பட்ட காலிமுகத்திடல் கோரிக்கை ஒன்றும் மோசமானதல்ல. ஆனால் அதில் உள்ளடக்கம் இல்லை. கபொத சாதாரணதர மாணவர்களிடம் எவ்வாறான அரசு உங்களுக்கு வேண்டும் என்று கேட்டால் அவர்கள் ஒரு விருப்பப்பட்டியலை எழுதித் தருவார்கள். அதற்கு ஒத்ததாகவே அரகலியாக்களின் கோரிக்கைகள் உள்ளது. அவர்களிடம் அரசு பொருளாதாரம் சார்ந்த அடிப்படை அறிவுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கொண்டுவந்த நல்லாட்சி விளையாட்டுத்தான் அது. மத்திய வங்கியை கொள்ளையடித்தது போல் செய்வதற்கான வழி.
நாட்டில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடத்தப்பட்டு அதில் அரகலியாக்களும் ராஜபக்சக்களும் போட்டியிட்டால் ராஜபக்சாக்கள் அரகலியாக்களைக் காட்டிலும் கூடுதல் வாக்கைப் பெறுவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஹபிடல் ஹில் அரகலியாக்கள் ட்ரம் தலைமையில் போட்டியிட்டால் பைடன் தோற்றுவிடுவார். இதுதான் நிலவரம். இந்த அரகலியாக்கள் இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் கார் வைத்திருப்பவர்களும் இலவசக் கல்வி முடிய வெளிநாடு செல்ல இருப்பவர்களும் தான். இவர்கள் ஒட்டுமொத்த இலங்கை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.
உலகத் தலைவர்கள் பொறிஸ் ஜோன்சன், மோடி போல் ராஜபக்சாக்களும் ஊழல் பண்ணி உள்ளனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. குஜராத் படுகொலைகளுக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமைக்காக, இந்தியப் பிரதமர் மோடி பிரதமராகுவம் வரை அவருக்கு அமெரிக்கா செல்லத் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சவுதி அரசர் பின் சலமனின் உத்தரவில் அவரை கடுமையாக விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகளும் துண்டுதுண்டாக்கப்பட்டது. சவுதியை ‘பறையர் தேசம்’ என்றார் அமெரிக்க ஜனாதிபதி பைடன். இப்போது பைடனும் பின் சல்மனும் கூடிக் குலாவுகின்றனர். ‘கொஞ்சம் உன்டெண்ண பெற்றோல் விடுங்கோ’ என்று கேட்க பைடன் சவுதி சென்றுள்ளார். மறுபக்கம் யேமன் மக்களை சவுதி குண்டுபோட்டு அழித்துக்கொண்டுள்ளது.
‘உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யக்கூடாது’ என்று சொல்வார்கள். அதேபோல் முதலுதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிலையை மோசமடையச் செய்யக் கூடாது. உங்களால் ஒரு விடயத்தை ஆக்கபூர்வமாகச் செய்ய முடியாவிட்டால் அதனைச் செய்யாமல் இருப்பதே மேல். குட்டையைக் குழப்பி விடுவதில் பயனில்லை. காலிமுகத்திடல் போராட்டம் குறுகிய சிலரின் நலன்களுக்காக ஒரு பொழுது போக்காக ஆரம்பிக்ப்பட்டது. தமிழரசுக்கட்சி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இப்படித் தான் தூண்டிவிட்டது. மக்களது மெல்லிய உணர்வுகளை உணர்ச்சியூட்டி தூண்டிவிட்டு அழிவை ஏற்படுத்துவதே கடந்தகால போராட்டங்கள் தந்த படிப்பினை. காலிமுகத்திடல் அரகலியாக்களின் போராட்டம் இன்னுமொரு உதாரணம்.