20

20

ஜனாதிபதியாக ரணிலின் பதவியேற்பும் – வெளியாகியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் அறிவிப்பும் !

 

நீண்ட கால இழுபறிக்கு மத்தியில் இன்று ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதே நேரத்தில் சில அறிவிப்புக்கள் அடுத்தடுத்து மேற்குலக நாடுகளில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளன.

இலங்கை மக்கள் தாங்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் நிவாரணத் திட்டம் தொடர்பில் இலங்கையுடனான பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய முடியும் எனவும் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோஜிவா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​நிவாரணப் திட்டம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த கலந்துரையாடல்களின் பெறுபேறுகளின்படி, வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவு இருந்தால் அவருடன் இணைந்து பணியாற்ற தமது பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் இத்தனை நாளும் இழுத்தடிப்பு செய்து வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதை ஊடகங்கள் பலவும் கொண்டாடி வருகின்றன.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்தவரை  இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க முடியாது எனவும் இது சரியாகி நாடு மீள பல வருடங்களாகும் எனவும்  இதுவரை கூறி வந்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க  இன்னும் 5 மாதங்களில் இலங்கையின் பொருளாதார சரிவை மீட்க முடியும் என திடீர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலிலேயே மேற்கூறியது போல கதைகளிலும் கற்பனைகளிலும் வருவது போல ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும்  திடீரென அதிசயமான பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

ரணிலின் ஜனாதிபதி தெரிவும் – IMFஇன் இந்த அறிவிப்பும் – மத்திய வங்கி ஆளுநரின் கருத்தும் ஒரு சேர ஒரு  விதமான சந்தேககண்ணோட்டத்தை ஏற்படுத்துவது போலவும் ஏற்கனவே இருந்த சில சந்தேகங்களை உறுதிப்படுத்துவது போலவும்  அமைந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளன.

 

இலங்கை மக்களின் 69லட்சம் வாக்குகளை பெற்று ஆட்சி பீடமேறிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மாதம் 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினார்.

போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பி உள்ளிட்ட இடதுசாரிய கட்சிகளின் உந்துதலே காணப்பட்டது என ஒரு தரப்பு  அரசியல் விமர்சகர்கள் கூறிவந்த நிலையில் இன்னுமொரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் ரணிலுக்கு ஆதரவான மேற்கு உலக சக்திகளே இந்த போராட்டத்தை கொண்டு நடத்தின என அழுத்ததிருத்தமாக கூறி வந்த நிலையில் பல விடயங்களை அவர்கள் சுட்டிக்காட்டி வந்தனர். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட போது முக்கியமான அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக எடுத்து வைத்து விட்டு வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டமை, ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துடன் வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டமை , பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று குறுகிய காலத்திற்குள் ரஷ்யாவின் விமானம் ஒன்று இலங்கையில் தடுத்து நிறுத்தப்பட்டமை என பல விடயங்களில் சந்தேகமான தன்மையை காண முடிந்தது.

ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் இலங்கையின் போக்கு மேற்குலக நாடுகளில் இருந்து முற்றிலும் விலகி சீனாவுடன் மிக நெருங்கியதாகவே காணப்பட்டது. இந்த நிலையில் இது இலங்கையின் மீதானதம் இந்துசமுத்திர பரப்பு மீதானதும் அமெரிக்க – இந்திய அதிகாரத்துக்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்துவிட்டது என்பதே உண்மை. இந்த நிலையில் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான அரசியல் மாற்றங்களும் – புரட்சிகளும்  அடுத்தடுத்து அரங்கேறின. அடுத்த இருபது வருடத்துக்கு ராஜபக்சக்கள் ஆட்சி தான் என்ற கருத்து உடைத்து வீசப்பட்டது.

இவற்றின் பின்னணியில் இந்தியாவினதும் அதுசார்ந்த அமெரிக்க – மேற்குலக சக்திகளினதும்  அதிதீவிர நகர்வுகளை இங்கு நடந்த பேராட்டங்களில் காண முடிந்ததாக பல அரசியல் விமர்சகர்களும்  குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை நாளும் இலங்கைக்கான கடன் வழங்குவது தொடர்பில் காலந்தாழ்த்தி வந்த சர்வதேச நாணய நிதியம் இன்று இல்ஙகைக்கான உதவி தொடர்பில் அறிவித்துள்ளமையானது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

இயல்பாகவே மேற்குலக நாடுகளின் முகவர் என்ற தோற்றத்தை கடந்த காலத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்த ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு இலங்கை மீதான சீனாவின் ஆதிக்க நிறுவுகையினையும் – சீனாவின் பொருளாதார லாப ஈட்டத்தினையும் கட்டுப்படுத்த இந்தியாவும் – அமெரிக்காவும் மேற்கொண்ட முயற்சியாகவே இலங்கையின்  திடீர் அரசியல் மாற்றங்களை கருத முடியும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் இலங்கை  போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை கடன் வலைக்குள் சிக்க வைப்பதையே நோக்கமாக கொண்டவை என பல தரப்பினரும் எச்சரித்து வந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த கடன் திட்டத்துக்கான பேச்சுவார்த்தைகளை முடக்கி விட்டிருந்தார். அத்துடன் அண்மையில் ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பே இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார நலிவுக்கு காரணம் என அண்மையில் சாடியிருந்தது கூட ரணில் விக்கிரமசிங்க தன்னை அமெரிக்க சார்புவாதி என்பதை காட்டும் தோரணையிலேயே அமைந்திருந்தது.

பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் சில நாட்களில் முழுமையாக தெரிந்து விடும்; ரணில் அமெரிக்க தோலை போர்த்திய நரியா அல்லது இலங்கையை முன்னேற்ற திடசங்கற்பம் பூண்டுள்ள அரசியல் தலைவரா என்று…!

 

“ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும்.” – காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் போது இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காலி முகத்திடல் போராட்டக்களத்தின் பிரதிநிதிகள், ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே தமது இரண்டாவது முக்கிய கோரிக்கை என குறிப்பிட்டனர்.

பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஜனாதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் இன்று மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒரு முடிவை எடுத்துள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சே ஆட்சியால் ரணில் விக்கிரமசிங்கே கொண்டு வரப்பட்டுள்ளார்.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஊழல் முறைமைக்கும் எதிராக எமது அமைதியான போராட்டங்கள் தொடரும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

“என்னுடைய 45 வருட காலம் இந்த பாராளுமன்றத்திலேயே கழிந்து விட்டது.” ரணில் விக்கிரமசிங்க நெகிழ்ச்சி !

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

 

மேலும் அங்கு பேசிய அவர்,

சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’ ஏற்படுத்த இணைந்து செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது.

சபாநாயகர் அவர்களே, நானும் நீங்களும் 1973 ஆம் ஆண்டு எமது அரசியல் பயணத்தை ஒன்றாக ஆரம்பித்தோம், எனக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள்.

நீங்கள் பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி. நான் 45 வருடங்கள் இந்த பாராளுமன்றத்தோடு பயணித்துள்ளோன்.

எனது வாழ்க்கை இந்த பாராளுமன்றம் தான் இருக்கின்றது. அதனால் இந்த பாராளுமன்றம் ஊடாக எனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தார்.

ரணில் தலைமையிலான இடைக்கால அரசில் பிரதமர் யார் ?

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன  நியமிக்கப்படுவார் என பொதுஜன பெரமுனவை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  தெரிவிக்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும், டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அனுரகுமார 03 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன் பிரகாரம் பாரிய பெரும்பான்மை பெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்பொழுது பிரதமர் பதவி வெற்றிடமாக உள்ளது. வெற்றிடமாக உள்ள பிரதமர் பதவிக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

 

தெரிவானார் இலங்கையின் புதிய ஜனாதிபதி – தலைகீழான முடிவுகள்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.

எனினும், நேற்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார்.

 

வாக்கு விபரம் ;

 

வேட்பாளர் வாக்குகள்
ரணில் விக்ரமசிங்க 134
டலஸ் அழகப்பெரும 81
அனுரகுமார திஸாநாயக்க 03
செல்லுபடியற்ற வாக்குகள் 04
அழிக்கப்படாத வாக்குகள் 02

புதிய ஜனாதிபதி தேர்தல் – நான்கு எம்.பிக்களின் ஓட்டுக்கள் செல்லுபடியற்றவையாம் !

ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் இந்தப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இந்த நிலையில், நான்கு வாக்குகள் செல்லா வாக்குகளாக அளிக்கப்பட்டுள்ளன.

 

வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் – ஜனாதிபதி மாளிகையின் முன்னால் மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பாராளுமன்ற வாக்கெடுப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், வாக்குகள் எண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

மூன்று தமிழ்தேசிய கட்சிகளும் மூன்று விதமான முடிவு – ரணிலுக்கே ஆதரவு என்கிறார் விக்கி !

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்தேசிய கட்சிகளின் நிலைப்பாடு அடுத்தடுத்து வெளியாகியிருந்ததது. தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரு முடிவை எட்டி அதை கோரிக்கைககளாக ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்து தங்களுடைய ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கஜேந்திரகுமார் தலைமையிலான முன்னணியினர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதே வேளை கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக தான் வாக்களிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சாதாரணமான ஒரு முடிவை ஒற்றுமையாக எடுக்க முடியாத இந்த போலித் தமிழ்தேசிய தலைவர்கள் தான் தனியாட்சூ கோரிக்கையை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

“வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அதே வேளையிலே அனைவரையும் உள்ளடக்கும் ஐக்கிய இலங்கையை மையமாக வைத்தே இந்த முடிவை எடுத்தோம்.” – சுமந்திரன் விளக்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவிக்காலத்தை முடிக்கும் மூன்று வேட்பாளர்களில் யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்கும் இன்றைய முக்கிய வாக்கெடுப்பில் இடைக்கால ஜனாதிபதியாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந் நிலையில் “இந்த இடைக்காலத் தேர்தலில் சிறந்த தெரிவுகள் எதுவும் இல்லை”எனவும் எமக்கு முன்பாக இருக்கும் தெரிவுகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக கவனமாக ஆராய்ந்து, டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளோம் என த.தே.கூ ஊடக பேச்சாளர் சுமந்திரன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கிய மக்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இடைக்கால ஜனாதிபதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டை ஆள்வதற்கான அங்கீகாரத்தையும் தார்மீக உரிமையையும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு நாடாளுமன்றத்துக்கு உள்ளது.

நீண்ட போரின் தாக்கங்களாலும் சகல அரசாங்கங்களினது புறக்கணிப்பாலும் பொருளாதார ரீதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து மக்களும் இன்று பாரிய பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் பின் தேவையாக இருந்த அரசியல் விழிப்புணர்ச்சியின் பின்னர், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அவர்களின் நம்பிக்கையை சம்பாதிக்ககூடிய அரசாங்கமொன்று அத்தியாவசியமாகும்.

எல்லாமக்களுக்கும் செவிசாய்த்து, உள்வாங்கி, சமபிரஜைகளாக மதிப்பதே பொருளாதார மீட்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் வழிகோலும் என்பது எமது நம்பிக்கை. பொருளாதார வளர்ச்சிக்கும் சுபீட்சத்துக்கும் அத்தியாவசியமான தமிழ் மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வுக்கு தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

த.தே.கூ. வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அதே வேளையிலே அனைவரையும் உள்ளடக்கும் ஐக்கிய இலங்கையை மையமாக வைத்து தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்போம் எனவும் விசேடமாக பொருளாதாரத்தில் நலிந்து கிடக்கும் எமது மக்களுக்கு இது அத்தியாவசியமானதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த தேர்தலில் மக்களது தீர்ப்பு கொடுக்கப்படும் வரை இந்த புதிய ஜனாதிபதி பதவியை நம்பிக்கை பொறுப்பாக மட்டுமே வைத்திருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

வரலாற்றின் மிக நெருக்கடியான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் – கரு ஜயசூரிய

நாளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே நாடாளுமன்ற உறுப்பினர் மனசாட்சியுடன் முடிவை எடுக்க வேண்டும் என்பதால், அவர்கள் எந்தவித டீலையும் செய்ய கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும் போராட்டக்கார்களும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தொந்தரவு செய்ய கூடாது என கேட்டுக்கொண்டார்.