22

22

பொருளாதார நெருக்கடி – பதவியை ராஜினாமா செய்தார் இத்தாலி பிரதமர் !

இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இத்தாலியின் பிரதமராக மரியோ ட்ராகி பதவியேற்றார்.

அதன் பின்னர் அந்நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வருகின்றன. இதனால் கடும் நெருக்கடிக்கு ட்ராகி உள்ளானார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அப்போது பதவி விலக தயார் என ட்ராகி அறிவித்தார்.

அவர் அறிவித்த ஒரு வாரம் கழித்து, தற்போது ஜனாதிபதி மாளிகையில் தனது ராஜினாமாவை அளித்துள்ளார். அதனை இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் நாம் இணைந்து செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி என தனது ராஜினாமா குறித்து வெளியிட்ட அறிக்கையில் மரியோ ட்ராகி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய விவகாரங்களைக் கையாள்வதற்காக தனது அரசாங்கம் பதவியில் இருக்கும் என்று ஜனாதிபதி மேட்டரெல்லா கூறியுள்ளார். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று சரியாக அவர் கூறவில்லை.

2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் தேர்தல்கள் நடைபெறவிருந்தன, ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் செப்டம்பர் நடுப்பகுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் செய்த செயலால் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.” மாவை காட்டம் !

70 ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை வெளியிட்டார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற கூட்டம் இடம்பெற்றபோது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நான் அந்த நிகழ்வுக்கு போக முடியவில்லை. இந்த விடயம் இரவோடு இரவாக ஊடகங்களுக்கு செய்திகளாக சென்றிருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நடக்கின்ற நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாக பிளவுப்பட்டு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று செய்தியை இரவில் தெரியப்படுத்தும் நிலை உருவானது.

இது பாரதூரமான நிலைமை. அவ்வாறு உடன்பாடு ஏற்பட்டிருந்தால் அதனை வெற்றி பெற்றதற்கு பின்னர் வெளியிட்டிருக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அது தெரிந்தால் போதுமானது. அதற்கிடையில் அதனை வெளியே கூறியதை ஏற்கமுடியாது. இதன் காரணத்தினாலும் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இந்தியா நிர்பந்தித்து தான் ரணிலுக்கு எதிரான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற கருத்து அங்கு பேசப்பட்டு இருக்கின்றதென தகவல் வெளியாகியுள்ளது. அதனுடைய உண்மை எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் அவ்வாறு இந்தியாவினுடைய பெயரை உச்சரித்து அந்த தீர்மானத்தை எடுத்ததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். இது ராஜதந்திரமற்ற மூலோபாயமற்ற விடயம் என்பதுடன் ஒரு பிரச்சனையை உருவாக்கி இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் காரணமாக பலர் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு செய்தி வெளியான நிலையில் மறுநாள் காலையில் அவ்வாறான எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரனுடைய பெயரில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இவை எல்லாம் தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற செயல்களாகும். இதன் காரணமாக டலஸ் அழகப்பெரும எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியாமல் ரணில் எதிர்பார்த்த அளவுக்கு 134 வாக்குகள் பெறுகின்ற நிலைமையை உருவாக்கி இருக்கின்றது.

70 ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு கட்சியாக இருக்கும் போது இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் எவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. எமது கருத்தில் நம்பிக்கையில்லை என்று இந்தியாவை இழுத்து பேச வேண்டிய சந்தர்ப்பத்தை நினைத்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

அவ்வாறு பாவித்து தான் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருந்தால் அது பாரதூரமானது. இந்த கருத்து மிகவும் பாதகமானது. முழுமையான எங்களுக்கு பலமாக இருக்கின்ற இந்தியாவினுடைய பெயரை கூறுவது மிகவும் தவறான செய்தியாகும். இதனால் பாரிய விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும் என்றார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கமால் குணரத்ன !

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க வழங்கியுள்ள ஆலோசனை !

நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பாராளுமன்ற வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே ரணில் விக்கிரமசிங்க அரச நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை மக்களின் செயற்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் இளம் செயற்பாட்டாளர்களின் முயற்சியின் பலனாகவே இதற்கு முன்னர் காணப்பட்ட செயற்திறனற்ற நிர்வாகம் கவிழ்க்கப்பட்டது என்பதனை ரணில் விக்ரமசிங்க மறந்துவிடக்கூடாது.
அனைத்து இலங்கையர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமாயின், அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களை பரந்த நிர்வாக கட்டமைப்பிற்குள், அரச நிர்வாகத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்காக தற்போதைய நிர்வாக முறைக்கு அப்பாற்சென்று புதிய நிறுவனங்கள் மற்றும் நிர்வாக முறையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்கதையாகும் பெட்ரோல் வரிசை மரணங்கள் !

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மரணங்கள் கிண்ணியா மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிண்ணியாவில் 59 வயதுடைய நபர் ஒருவரும் மற்றும் மத்துகம பெல்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 64 வயதுடைய முதியவர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் உகாண்டாவில்…? – உறவினர்கள் சந்தேகம்.!

உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , 13 வருடங்களாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை சொல்லாத இந்த அரசினை நாங்கள்நம்பமாட்டோம்.

இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதியை கேட்டு நிற்கின்றோம். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சர்வதேசம் இலங்கை தொடர்பில் அவதானித்து தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினையும், எமக்கான நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என கேட்டு நிக்கின்றோம். இதேவேளை உலகலாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழர்கள், ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து எமது போராட்டத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசில் குடும்ப ஆட்சியும் இனவழிப்பும் நடந்து அவர்கள் கலைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் எங்களிற்கான தீர்வு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவியை இழந்து நிற்கும்போது, எங்களுடைய மண்ணில் வந்து எங்களை சந்தித்தார். உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும், தற்பொழுது நான் பதவியில் இல்லை. மகிந்தவின் மனைவியின் பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேடுவார்கள். அவர்களிற்கான சட்டத்தை பயன்படுத்துவார்கள். நான் இந்த பதவிக்கு வந்தால், நிச்சயமாக பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

அவரோ அல்லது அவர் சார்ந்த எவருமோ எமக்கு எதுவும் செய்யப்போவதில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினர், நாடுகடத்தப்பட்டு அனாதைகளாக தெருத்தெருவாக திரிகின்ற இந்த வேளையில், உண்மையாக அந்த இனவழிப்பை செய்தவர்களை கைது செய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அவ்வாறு கைது செய்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றோம்.

உகண்டா எனும் நாட்டிலே, ராஜபக்ச குடும்பத்தினர்11 தொழிற்சாலைகளை அமைத்து அங்கு எமது பிள்ளைகளை சம்பளமில்லாத கூலித்தொழிலாளிகளாக வேலைக்கு வைத்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகின்றோம். எமது கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாதவர்கள், எங்களுடைய பிள்ளைகளை கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்கலாம் என்று நம்புகின்றோம்.

அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கின்றவர் வேலுப்பிள்ளை கனநாதன் என்ற ஒரு தமிழர். அவருடன் உலக நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொடர்புகொண்டு, எவ்வாறு அந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்பதையு்ம, அங்கு எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்பதை அறிவதற்கும் முன்வரவேண்டும்.

நிச்சயமாக எமது பிள்ளைகள் கொள்ளப்படவில்லை. அவர்கள் அனைவரும் இந்த குடும்பத்தின் கொத்தடிமைகளாக வாழவைத்துக்கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” என அவர் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டது ரணில் தலைமையிலான இடைக்கால அரசின் புதிய அமைச்சரவை – அதே கிண்ணத்தில் அதே வைன் – பெரிதாக மாற்றம் இல்லை !

இவற்றுள் குறிப்பிடத்தக்களவான அமைச்சுக்களும் – அமைச்சர்களும் இறுதியான அமைச்சரவையிலும் அங்கத்தவர்களாக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த கால அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றிருந்த பல  அமைச்சர்களின் வினைத்திறனற்ற நகர்வுகளாலேயே கடந்த காலங்களில் இலங்கை மிகப்பெரிய நெருக்கடியினுள் சிக்கி வங்குரோத்து நிலைக்குள் தள்ளப்பட்டது. இந்த நிலையிலேயே மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் செய்து கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது இந்த  நெருக்கடி நிலையை இல்லாது செய்யவே.

எனினும் மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ அரசில் அமைச்சு பதவியை ஏற்றோருக்கும் – ரணில் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியோருக்கும் மட்டுமே அமைச்சு பதவிகளை வழங்கியுள்ளார் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இதன் மூலம் இலங்கையில் இனிமேலும் பெரிதாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க தேவையில்லை என்பதை மறைமுகமாக இந்த அமைச்சு பதவிகள் தெரிவிக்கின்றன.

“கோட்டாபாயவை விரட்டியதால் தான் ரணில் ஜனாதிபதி.” – மனோகணேசன் ட்வீட் !

“கோட்டாபாயவை விரட்டியதால் தான் ரணில் ஜனாதிபதி.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ட்விட் செய்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளார்கள்.கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையிலேயே மனோகணேசன்  தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“போராட்டம் நடத்த விஹாரமகாதேவி பூங்காவை போராளிகளுக்கு தருவதாக காலையில் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி சொன்னார். அந்த யோசனையை போராளிகளுக்கு கூறி, அமைதியாக இடமாற்றம் செய்ய, ஏன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கவில்லை? என்ன இருந்தாலும், அவர்கள் கோட்டாவை விரட்டியதால்தான் இன்று, ரணில் ஜனாதிபதி..! என தனது டுவிட்டர் பக்கத்தில் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

 

கூட்டமைப்பின் முடிவு இப்போதாவது சரியென புரிகிறதா..? – சுமந்திரன் ட்வீட் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளார்கள்.கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மொட்டு கட்சியின் நிறைவேற்று அதிகார அதிபராக ரணில் விக்ரமசிங்க வருவதை தடுப்பதற்கென்று த. தே. கூ. ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?“ என அவர் பதிவிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன!

இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்த்தன, இன்று சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1883 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட தினேஸ் குணவர்த்தன, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புக்களில் பதவி வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.