23

23

எரிபொருளுக்கான அட்டையை பெற காத்திருந்தனர் மரணம் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மாளிகையில் இருந்து 1000 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் திருட்டு !

போராட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை போன்ற அரச வளாகங்களில் இருந்து தொல்பொருள் பெறுமதியுடன் கூடிய 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை மீட்பதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வளாகத்தில் உள்ள மதிப்புமிக்க தொல்பொருட்களின் சில பகுதிகளை சிலர் திருடிச் சென்றுள்ளதாக விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் தொல்பொருள் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வ ஆவணங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முதற்கட்ட விசாரணையில் குறைந்தது 1000 பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

யாழில் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு சம்பவங்கள் !

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை வட்டுக்கோட்டை பொலிஸார் மடக்கி பிடித்து, சாரதியையும் கைது செய்துள்ளனர்

சுழிபுரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மணலுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார் சாரதியிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொன்னாலை தொடக்கம் சுழிபுரம் சவுக்கடி, புளியந்துறை ஆகிய இடங்களில் தொடர்ந்து இரவு வேளைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியது.

இவ்வாறான அத்துமீறிய இயற்கை வள அழிப்பை தடுத்து நிறுத்துமாறு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வலி.மேற்கு பிரதேச சபைக் கூட்டத்தில் பொன்னாலை வட்டார உறுப்பினர் ந.பொன்ராசா வாய்மொழி மூல கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

இந்த சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு பொன்னாலைக்கும் சம்பில்துறைக்கும் இடையே பொலிஸ் காவலரண் ஒன்றை அமைக்குமாறும் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு வாக்களிக்க தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபா வரை வழங்கப்பட்டது.” – ராஜித சேனாரத்ன பகீர் !

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கியதாக தலா 10 கோடி ரூபா முதல் 15 கோடி ரூபாவை வழங்கியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான விடயத்தில் நாங்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். ஆனால், ரணில் விக்ரமசிங்க தரப்பினர் தனித்தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரணில் விக்ரமசிங்க,பொதுஜன பெரமுனவின் முட்டாள்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார் எனவும்தெரியும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை வழங்குவது, எரிந்து போன வீட்டுக்கு பதிலாக வீடு, அவற்றுக்கு இழப்பீடு வழங்குவது, கார்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம், இரண்டு ஆண்டு காப்பீடு போன்றவற்றை அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினர்.

பெருந்தொகையான பணம் பரிமாறப்பட்டது. எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவை சேர்ந்த 15 பேரை கொண்ட நாடாளுமன்ற குழுவினர்களும் எங்களிடம் பணத்தை கோரினர்.

டலஸ் அழகப்பெருமவை நாங்கள் ஆதரிக்கின்றோம், எங்களுக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என கேட்டனர். இது பற்றி நான் சஜித்திடம் பேசினேன், ஐந்து சதம் கூட வழங்கக் கூடாது என அவர் சொன்னார்.

அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன். ரணில் விக்ரமசிங்கவுக்கு இவர்கள் வாக்களிக்க 10 முதல் 15 கோடி ரூபா வரை பெற்றனர் என்று எனக்கு தகவல் கிடைத்தது. சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து இன்னும் பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். சஜித் பிரேமதாச முதிர்ச்சியான அரசியல்வாதியாக மாறி வருகிறார். அவர் மிக நேர்மையானவர் என்பதுடன் அப்பாவி எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோட்டா கோ கம போராட்டத்திலிருந்து வெளியேறுகிறது இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் !

கோட்டா கோ கம போராட்ட தளத்தில் இருந்து முதலுதவி முகாமை அகற்றுவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு, ஜூலை 21 ஆம் திகதி முதல் அங்குகிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர் .

இதேவேளை பண்டாரநாயக்க சிலைக்கு 50 மீற்றர் சுற்றளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்று கூடுவதைத் தடை செய்து நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடதக்கது .

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து தீவிரமாக எதிரிப்பு காட்டிவந்த பல அமைப்புக்கள் பின்வாங்க ஆரம்பித்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருந்த நோ டீல் கம போராட்டக்களமும் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச அலுவலகத்தை போராட்டக்கார்கள் சட்டவிரோதமாக கைப்பற்ற அனுமதி வழங்குவீர்களா…? – ரணில் கேள்வி !

அரச அலுவலகத்தை போராட்டக்கார்கள் சட்டவிரோதமாக கைப்பற்ற அனுமதி வழங்குவீர்களா என இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான இராணுவ நடவடிக்கை குறித்து இராஜதந்திரிகள் வெளியிட்ட கருத்து குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் என ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களை அடிப்படையாக கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது இலங்கையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வமில்லாத வகையில் தனது கரிசனையை அவர்களிடதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் அவர்கள் ஜனாதிபதி மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தனர் என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

“நூற்றாண்டுகால பிரபுத்துவ அரசியலின் இறுதி வாரிசு ரணில்.”- அத்துரலிய ரதன தேரர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிது காலத்தை வழங்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இது வெற்றி கொள்ளக்கூடிய நெருக்கடி, இதற்கு தீர்வு இருக்கின்றது. எரிபொருள், சமையல் எரிவாயு வரிசைகளுக்கு மூன்று மாதங்களுக்குள் எமக்கு தீர்வை வழங்க முடியும். எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கின்றது. அதேபோல் நாட்டில் ஏற்பட போகும் உணவு நெருக்கடியை சமாளித்து வெற்றி பெற முடியும். மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.

எனினும் புதிய ஜனாதிபதியின் ஊடாக எமக்கு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை இன்னும் சிறிது காலம் சென்ற பின்னரே அறிய முடியும். ரணில் விக்ரமசிங்க மீது சிலர் தற்போது நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதற்கு நாம் இடமளிக்க வேண்டும். இலங்கையில் போத்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேய காலனித்துவ காலம் தொட்டு இருந்து வரும் பிரபுத்துவ அரசியல் சந்ததியின் இறுதியான வாரிசே ரணில் விக்ரமசிங்க.

இதனால், அவர் மீது நம்பிக்கை இருக்குமாயின், அவருக்கு சில காலம் இடமளிக்க வேண்டும். அந்த காலம் முடிந்த பின்னர் நாம் எமது யுகத்தை ஆரம்பிப்போம் எனவும் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

“ரணில் தலைமையிலான பாசிச அரசின் முடிவு நேற்றே ஆரம்பித்துவிட்டது.” – எம்.ஏ.சுமந்திரன்

“ரணில் தலைமையிலான பாசிச அரசின் முடிவு நேற்றே ஆரம்பித்துவிட்டது.” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஜே.ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1983 ஜூலைக் கலவரம் ஏற்பட்டு 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜூலை மாதத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் உறவினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது நேற்றைய தினம் காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருக்கிறது.

போராட்டகாரர்கள் நேற்றைய தினத்தில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பண்டாரநாயக்க சிலையை சுற்றி 50 மீற்றர் தூரத்திற்கு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை போகக்கூடாது என்பதே நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை. பண்டாரநாயக்க சிலைக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இடையே அதிகதூரம் உள்ளது.

ஜனாதிபதி செயலகத்தை மீள கையளிப்பதாக போராட்டகாரர்கள் சொன்ன பிறகு இந்த தாக்குதல் அரச படையினரால் இருட்டில் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச சமூகம் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது. இவ்வாறான சம்பவம் இனிமேல் நடந்தால் உங்களுக்கு உதவமெட்டோமென ஜனாதிபதிக்கு முக்கிய நாட்டு பிரதிநிதி முகத்துக்கு நேரே சொன்னார்.

கடந்த மே 9 தாக்குதல் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தாக்குதல் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்டது. மே 9 தாக்குதலை கண்டித்த ரணில் விக்கிரமசிங்க ஏன் இதனை கண்டிக்கவில்லை.

ஒருசில மணிநேரத்திற்குள் நிறைவேற்றதிகாரம் ரணிலை மாற்றிவிட்டது. நேற்றைய தாக்குதல் நாட்டை பின்னடைய செய்துவிட்டது. பாசிச அரசின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என்றார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்புள்ள போராட்டக்காரர்கள் அடித்து விரட்டப்பட்டது ஏன்..? – காவல்துறை வழங்கியுள்ள விளக்கம் !

தொடர்ந்தும் சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றியமை தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (23) கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச பொது சொத்தான கட்டடங்களுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு தங்கியிருக்க முடியாது. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட காலிமுகத்திடலில் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த இடத்திற்கு சென்று பொலிஸார் போராட்டத்திற்கு எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை.

ஜனாதிபதி செயலகத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக அதற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த சில தற்காலிக கூடாரங்களை அப்புறப்படுத்த நேரிட்டது எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.