இலங்கை நாட்டில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
மேலும், 75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 பேர் “சேலைன் ” மூலம் போஷாக்கை பெறுவதாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் நெருக்கடிக்கு உரிய தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இந்த நிலைமை மிகவும் மோசமானதாக அமையும் எனவும் படகொட மேலும் தெரிவித்துள்ளார்.
………………………
இந்த பெட்ரொல் வரிசைகளும் – ஹாஸ் சிலிண்டர் வரிசைகளும் – அரசுக்கு எதிரான போராட்டங்களும் மூன்று வேளை உணவு உறுதியாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ள ஒரு மத்திய தர வர்க்கத்தாலேயுமே பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டிருந்ததது.
இங்கு உணவுக்கு வழயில்லாது நாள்தோறும் வாடிக்கொண்டிருக்கும் சாதாரண – ஏழை குடும்பங்கள் பற்றி யாருமே சிந்திப்பது கிடையாது. அரசு கூட போராட்டக்காரர்களின் பெட்ரோல் கோரிக்கை – மின்வெட்டு கோரிக்கையை கணக்கெடுத்து நிறைவேற்ற செயற்படுகிறதே தவிர மக்களை – சாதாரண மக்களின் உணவுத்தேவையை கவனிப்பதாக தெரயிவில்லை.
ஆகஸ்ட் மாதமளவில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்து பசி – பட்டினி சாவுகள் ஏற்படலாம் என பல பொருளியல் நிபுணர்களும் எச்சரிந்த நிலையில் இன்று இலங்கை அதன் தொடக்கத்தில் நிற்கிறது.
இன்னமும் அரசோ – அரசு நிறுவனங்களோ – கிராமிய அமைப்புக்களோ எவையுமே இந்த பட்டினி – வறுமை தொடர்பில் கவனம் செலுத்தாது பெட்ரோல் அட்டை வழங்குவதிலும் – qr code வழங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றனவே தவிர இலங்கையிலுள்ள கடைநிலை கிராமங்களின் – நகரப்புற கூலித்தொழிலாள குடும்பங்களின் பொருளாதார – பசி – வறுமை நிலையை உணர்வதாகவோ – தீர்ப்பதற்கான முயற்சிகளை செய்ததாகவோ தெரியவில்லை.
அருகிலுள்ள இந்தியாவின் தமிழ்நாடு அரசு கூட இலங்கையின் பொருளாதார நலிவு நிலையை கருத்தில் கொண்டு பல மெட்றிக்தொன் உணவுப்பொருட்களை அனுப்பியிருந்த நிலையில் ரணில்விக்கிரமசிங்க அரசு இதனை வாங்குவதிலும் – படம் எடுப்பதிலுமே கவனம் செலுத்தியதே மக்களின் நிலையை கண்டறியாது – சிந்தனை செய்யாது இன்னமும் கட்சி அரசியலையே நடாத்திக்கொண்டிருக்கிறது. அயலிலுள்ள தமிழ்நாட்டு அரசுக்கு விளங்கிய விடயம் கூட இலங்கை அரசியல்தலைவர்களுக்கு விளங்கவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
இந்த அரசியல்வாதிகள் மக்களுக்காக சிந்தித்து செயலாற்ற முன்வராதவரை இலங்கை எந்த விதத்திலும் முன்னேறப்போவதில்லை என்பதே உண்மை.