30

30

ராஜபக்சா அன் அமெரிக்க – ஐஎம்எப் ரொம் அன் செரித் தொடர்! வெல்வது யாரோ?

கோட்டபாய ராஜபக்சவை ஏன் மேற்குலகு வெறுத்தது? கோட்டபாய ராஜபக்ச தமிழர்களை இனப்படுகொலை செய்ததால் மேற்குலகம் அவரை வெறுப்பதாக எண்ணினால் அது மிகப்பெரும் முட்டாள்தனம். இலங்கையின் வடக்கில் 2009இல் இனப்படுகொலை இடம்பெற்றதாக எந்த சர்வதேச மனிதஉரிமை அமைப்பும் குற்றம்சாட்டவில்லை. யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மையை பச்சையாகச் சொன்னதற்காக புலித் தமிழ் தேசியம் சுமந்திரனை துரோகியாக்கியது. மேற்குலகிற்கு ஒன்றும் தமிழரில் காதல் கிடையாது. மனித உரிமைகள் பற்றியும் அவர்களுக்கு அக்கறை கிடையாது. உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை அமெரிக்காவும் நேட்டோவும் உலகம் முழுக்க மேற்கொண்டு வருகின்றனர். தங்களுடைய மோசமான மனித உரிமைமீறல்களை அம்பலப்படுத்தியதற்காக யூலியன் அசான்ஜ்சை தூக்கில் தொங்கவிட அமெரிக்காவும் பிரித்தானியாவும் மேற்கு நாடுகளும் எல்லாக் குளறுபடிகளையும் மேற்கொள்கின்றனர்.

அமெரிக்க – ஐஎம்எப் க்குப் பணியாமல் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நெருங்கிய உறவைக் கொண்டாடுவதால் கோத்தபய ராஜபக்சவை விரட்டியடிக்கும் திட்டத்தில் இவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விடயத்தில் காலிமுகத்திடல் அரகலியாக்கள் உதவியோடு மேற்குலகம் உச்சகட்ட வெற்றியைப் பெற்றது. அரகலியாக்கள் முன்வைத்த ‘கோட்ட கோ கம – கோட்டா கோ ஹோம்’ அவர்களே எதிர்பார்க்காத வெற்றியை அவர்களுக்கு அளித்தது. அமெரிக்க – ஐஎம்எப் சார்பு போராட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்த மேற்கத்திய மோகசக்திகள், படித்து முன்னேறிய ‘கபே லாற்றே – cafe latte’ குடிக்கும் லிபரல்கள், இடதுசாரிகள், ஜேவிபிக்கள் மற்றும் எதுவுமே புரியாமல் கும்பலில் கோவிந்தா போட்டவர்கள் எல்லோரும் பங்கெடுத்தனர்.

இவர்களின் தீவிர போராட்டத்தால் பெற்றோலுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட்டு குறைந்தபட்ச ரயில் கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டது. மேலும் மானியங்களைக் குறைக்கவும் பொதுத்துறைகளுக்கான செலவீனங்களைக் குறைத்து வட்டியைக் கட்டுவதற்கு ஐஎம்எப் அரசை வற்புறுத்தி வருகின்றது. இதுநாள் வரை இலங்கை மக்கள் அனுபவித்து வந்த இலவசக் கல்வி, இலவச மருத்துவம், ஓரளவு தரமான வாழ்க்கை முறையை படிப்படியாகக் குறைக்கும் அல்லது இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. கோத்தபாய ராஜபக்ச இவற்றுக்கு உடன்பட மறுத்து, இறக்குமதிகளை முற்றாக நிறுத்தி, சீனா – ரஷ்யா ஊடாக இப்பிரச்சினையில் இருந்து மீள முடிவு செய்ததால் அமெரிக்க – ஐஎம்எப் நிர்ப்பந்தங்களுக்கு உடன்பட மறுத்ததால் இலங்கையில் ஒரு ஆட்சி-ஆள் மாற்றத்தை அமெரிக்க – ஐஎம்எப் முடுக்கிவிட்டிருந்தது. அதன் விளைவாக கோட்டபாய ராஜபக்ச விரட்டி அடிக்கப்பட்டார்.

ராஜபக்சாக்களின் மீள் எழுச்சி தவிர்க்க முடியாதது:

இன்றைய பொருளாதார நெருக்கடி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் அமெரிக்க – ஐஎம்எப் ஆல் நிர்ப்பந்திக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையின் விளைவு. மேலும் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கையை அடுத்து 1980க்களின் முற்பகுதி முதல் இப்பொருளாதார நெருக்கடி முளைவிட ஆரம்பித்துவிட்டது. நாட்டின் மூலப்பொருட்களையும் அந்நாட்டு தொழிலாளர்களுடைய உழைப்பையும் அடிமட்ட விலைக்கு வாங்கி தங்களுடைய நிறுவனங்கள் மூலம் முடிவுப்பொருட்களாக்கி அதனை உச்ச விலைக்கு அந்நாடுகளுக்கே விற்று உச்ச லாபம் ஈட்டும் அமெரிக்க ஐஎம்எப் கொள்கை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதிலிருந்து பிரிந்த மொட்டுக் கட்சி – ஐக்கிய மக்கள் முன்னணி – பொதுஜன பெரமுன என்பன புரட்சிகர சமவுடமை பொருளாதாரக் கொள்கையை உடைய கட்சிகள் அல்ல. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியைப் போல் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க திறந்த பொருளாதாரக் கொள்கையின் காப்பாளர்களில் ஒருவர். அதனால் ரணில் மீது மேற்குலகுக்கு ஒரு காதல் எப்போதுமே இருந்து வந்தது. ரையும் கோட்சூட்டும் போடும் ரணிலுக்கும் ‘கபே லற்றே’ குடிக்கும் லிபிரல்களுக்கும் ஒருவித காதல் கிளர்ச்சி இருக்கும். இவர்களுக்கு வேட்டி சறம் கட்டித் திரியும் சிவப்புத் துண்டை போட்டுத்திரியும் ராஜபக்சக்களை கண்டால் பட்டிக்காட்டான் கிராமத்தான் என்கிற மனப்பதிவொன்று இருக்கும். இதுகூட காலிமுகத்திடலில் காணக்கூடியதாக இருந்திருக்கும். அங்கு வேட்டி சறத்தோடு யாரையும் கண்டிருக்க முடியாது.

இன்றைய பொருளாதார நெருக்கடியை ராஜபக்சக்களின் தலையில் கட்டி, அதற்கு சீனாவுடந்தை என்று திரித்து ராஜபக்சாக்களை ஓரம்கட்டுவதன் மூலம் இலங்கையை மேற்குலகுக்கு, அமெரிக்க ஐஎம்எப் ற்கு சாதகமாக வைத்திருப்பதே நடந்து முடிந்த காலிமுகத்திடல் போராட்ட நாடகத்தின் சாரம்சம். இதே மாதிரியான மைத்திரி – ரணில் மூலமாக நிறைவேற்றப்பட்ட நாடகமே தேசிய நல்லாட்சி அரசு. அதனை அரங்கேற்றும் வேளை முன்னாள் பிரித்தானிய பிரதமரும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையுமான ரொனிபிளேயர் இலங்கையில் இரு வாரங்கள் சத்தமில்லாமல் தங்கி இருந்தார். அப்போது தான் இரவு ராஜபக்சவோடு அப்பம் சாப்பிட்ட மைத்திரி காலையில் ராஜபக்சக்களுக்கு ஆப்பு வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

ஆனாலும் சில ஆண்டுகளிலேயே ராஜபக்சக்கள் சூழியோடி மீண்டும் மிகப்பெரும்பான்மையோடு ஆட்சியைக் கைப்பற்றினர். கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ரோவை போட்டுத்தள்ள அமெரிக்க உளவுநிறுவனமான சிஐஏ 600 தடவை முயற்சித்தும் தோல்வி கண்டது. அதே போல் எமது உள்ளுரில் கஸரோவை போல் தொப்பி அணிந்த டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய புலிகள் 13 தடவைகள் முயற்சித்து தோல்வி கண்டனர்.

அதனால் ராஜபக்சாக்களுக்கும் – அமெரிக்க ஐஎம்எப் க்கும் நடக்கும் ரொம் அன் செரி விளையாட்டு சற்று சுவாரஸ்யமாகவே இருக்கின்றது. இப்போதைய விளையாட்டில் ரணில் பலிக்கடாவாகி விட்டார். இவரைக் காட்டிலும் ராஜபக்சாக்கள் மேல் என்ற உணர்வு ரணில் பதவியேற்ற 48 மணி நேரத்தில் சஜித் பிரேமதசவால் தெரிவிக்கப்பட்டது. இந்த மனநிலை ஏற்கனவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. ராஜபக்சாக்கள் மீண்டும் இலங்கை கிராமங்களில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலர்களாக எழுந்து வருவது தவிர்க்க முடியாதது.

ராஜபக்சாக்களை கையாளக்கூடிய சிந்தனைத் திறனும் அரசியல் திறனும் லிபரல்களிடமும் மாணவர்களிடமும் இடதுசாரிகளிடமும் இல்லை. இவர்களிடம் அதற்கான அர்ப்பணிப்பும் கிடையாது. இதனால் இவர்கள் உயர்ந்த கொள்கைத்திட்டங்களைக் கையில் எடுக்காமல் ‘கோட்டா கோ கம, ரணில் கோ கம, ஒக்கம கோ கம’ என்ற புலம்பல் கோசங்களை வைத்து குட்டையைக் கிளப்பி நாட்டை சீரழிப்பதை மட்டுமே செய்வார்கள். இதுவே அரப் ஸ்பிரிங்கில் நடந்தது. அது ஆரம்பித்த துனிஸியாவில் நேற்று யூலை 27 பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பை நடாத்தி அதிகாரங்களை குவித்துக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியின் சர்வதேச பரிமாணம்:

இன்றைய பொருளாதார நெருக்கடி ஒன்றும் இலங்கைக்கேயானதல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலகிலேயே மோசமானதும் அல்ல. செல்வந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், வளர்ச்சியடையாத நாடுகள் என்று உலகம் முழுவதுமே பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இலங்கையில் மட்டும் தான் பொருளாதார நெருக்கடியை ஆட்சித் தலைவர் மீது போட்டுக்கட்டி ஆட்சியை மாற்றினால் பெற்றோல் வரும் எரிவாயு வரும் என்றும் நம்பினர். ஆட்சித் தலைவரை வீட்டுக்கு அனுப்பினால் தங்கள் பெற்றோல் ராங்குகள் நிரம்பும் என்று நம்பினர். ஐரோப்பாவில் உள்ள துருக்கியின் விலைவீக்கம் 80 வீதம். அபிரிக்க நாடான கமரூனில் விலைவீக்கம் 250 வீதமாக அதிகரித்து. அங்கு மக்கள் போராடுவதற்கு பதிலாக மாற்று பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆறு மாதம் காலிமுகத்திடலில் கிடந்ததற்குப் பதிலாக வீடுகளில் தோட்டத்தில் நான்கு கன்றுகளை வைத்திருந்தால் காய்கறியாவது கிடைத்திருக்கும். நாடு சுமுகமாக உள்ளபடியால் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருக்கும். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளுர் உற்பத்தியை பெருக்கவும், சூரிய ஒளியைப் பயன்படுத்தி தற்போதுள்ள மின்சாரப் பிரச்சினையை கையாள்வது பற்றி சிந்தித்து இருக்கலாம். துவிச்சக்கர வண்டிகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முயற்சித்திருக்கலாம். இது எதுவுமே செய்யாமல் இலவசக் கல்வியும் தந்து அது முடிய ராஜபக்சக்கள் அவர்களுக்கு வேலையும் எடுத்துக் கொடுக்க வேண்டும். பிறகு இந்த வேலைக்குப் போய் வேலை செய்யாமல் பொழுது போக்கிவிட்டு வர சம்பளமும் வழங்க வேண்டும். இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?

ராஜபக்சாக்களின் சொத்துக் குவிப்பு புலம்பல்கள்:

ராஜபக்சாக்களோ மற்றும் அரசியல் வாதிகளோ ஒன்றும் காமராஜர் போல் தன்மூத்திரம் அருந்தி ஒரு சதத்தைக் கூட களவாடாதவர்கள் கிடையாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் மறைவுக்குப் பின் அரசியலுக்கு வந்த, யுத்தத்தில் சீரழிந்த கிளிநொச்சி மண்ணில் இருந்து பாராளுமன்றம் வந்த சாதாரண பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனால் ஒரு பத்து ஆண்டு காலத்தில் கணிசமான சொத்துக்களை சேர்க்க முடியுமானால், பரம்பரை அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த, குடும்பமே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ராஜபக்சாக்கள் சொத்து வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது?

பிரித்தானியாவின் முன்னாள் நிதியமைச்சரும் தற்போது ஆளும் கொன்சவேடிவ் கட்சித் தலைமைக்கு போட்டியிடுபவருமான ரிஷி சுனாக் பிரித்தானியாவிலேயே மிகச் செல்வந்தரான அரசியல் வாதி. அவரும் ஒன்றும் புனிதரல்ல. அதே போல ராஜபக்சாக்கள் ஆட்சிக் வருவதற்கு முன்னரே 2005இல் 400 கோடி ரூபாய்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு கொடுத்துத் தான் ஆட்சியைக் கைப்பற்றினர். வே பிரபாகரனிடம் 400 கோடி கொடுத்திருந்தால் அவர்கள் எத்தினை கோடிகளுக்கு அதிபதியாக இருந்திருக்க வேண்டும்? மேலும் பணம் பணத்தை உருவாக்கும். புலம்பெயர் தேசங்களில் ஒரு சதம் இல்லாமல் வந்த புலிகளுக்கு பணம் சேர்த்த பலர் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். ஆகவே ராஜபக்சக்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல. ஆனால் ஆட்சிக்கு வந்து தான் கொள்ளையடித்தார்கள், அவர்கள் கொள்ளையடித்து தான் நாடு வங்குரோத்தில் போனது என்பதெல்லாம் உப்புச்சப்பற்ற வாதம். ஊதிப்பெருப்பிக்கப்பட்ட விடயங்கள். பிரபல இணைய ரக்ஸி நிறுவனமான ஊபர் தங்களுக்கு சாதகமாக சட்டத்தை இயற்றுவதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவல் மக்ரோனுக்கு வழங்கியது 600,000 டொலர்கள் (21 கோடி இலங்கை ரூபாய்).

ராஜபக்சாக்கள் சில மமதையான முட்டாள் தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு இருந்தாலும் இலங்கையில் உள்ள அரசியல் வாதிகளுடன் ஒப்பிடுகையில் கல்வியில் தேர்ந்தவர்கள், திறமைசாலிகளும் கூட. அதனால் தான் தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்களால் வேரோடு சாய்க்க முடிந்தது. அவர்களுடைய இத்திறமைகளை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகளும் ராஜபக்சக்களால் பாதிக்கப்பட்டவர்களும் இன்று முகநூல் மற்றும் வட்ஸ்அப் ஊடாக விக்கிரமாதித்தன் கதைபோல் ராஜபக்சக்கள் பற்றி கதையளக்கின்றனர். கதையளந்து சுய இன்பமடைகின்றனர். அதே போல் புலித் தேசியத்தில் ஊறிப்போன தமிழர்களுக்கும் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் முதிர்ச்சி இன்னமும் இல்லை. இதேநிலை தான் முஸ்லீம்களுக்கும். ஏதாவது வகையில் ராஜபக்சக்களை தாழ்த்தி நையாண்டி செய்து சிற்றின்பம் அடைகின்றனர்.

அப்போது 1980க்களின் இறுதியில் பிலிப்பைன்ஸில் மக்களைக் கொளையடித்து சூறையாடிய பேர்டினட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் மகன் பொங் பொங் மார்க்கோஸ் தன் பெற்றோர் செய்த சாதனைகளைச் சொல்லி தற்போது அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியேறி உள்ளார். ஆனால் ராஜபக்சக்கள் பேர்டினனட் மார்க்கோஸ் தம்பதிகளளவுக்கு கீழ் நிலையை அடையவில்லை. இன்றும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் இன்னமும் அவர்கள் நிலைகொண்டுள்ளனர். அதனால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற கனகாலம் பொறுத்திருக்க வேண்டியதில்லை.

இலங்கையில் ஊடகங்களும் ஆய்வாளர்களும் எவ்வித கேள்வியும் இன்றி ஆய்வும் இன்றி தங்களுக்கு சுய கிளர்ச்சியூட்டம் விடயங்களை எழுதுகின்றனரே அல்லாமல் தகவல்களைச் சரி பார்ப்பதில்லை. அதனால் அடிப்படைப் புரிதல் இன்றி வெறும் உணர்ச்சிக் கிளர்ச்சி அரசியலே இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபடும் லிபரல்கள், இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மோகத்திலேயே இன்னமும் உள்ளனர். அவர்களிடமும் இலங்கையின் அந்நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றிய கரிசனை இல்லை. இந்தப் பினனணியில் போராட்டங்கள் பலனளிப்பதற்கான வாய்ப்பு மிக மிக அரிதாகவே உள்ளது. அதனால் ராஜபக்சாக்களின் எதிர்காலத்திற்கு அவ்வளவு பெரிய ஆபத்து ஒன்றும் உள்ளுரில் இல்லை. ஆனால் அமெரிக்க கூட்டுகள் ராஜபக்சாக்களுக்கு எப்படியும் ஒரு பாடம் படிப்பிக்க கங்கணம் கட்டிவிட்டனர். இந்த நெருக்கடி ராஜபக்சாக்களுக்கு இருக்கும். கோட்டபாயாவின் உள்ளாடையை வைற் ஹவுசில் காட்சிக்கு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு !

தமிழகத்தின் சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பாகிஸ்தான் அணியினர் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்து நாடு திரும்பியது பாகிஸ்தான் அணி

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு காஷ்மீருக்கு சென்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சென்னையில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த பாகிஸ்தான் வீரர்கள் நாடு திரும்பினர்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதி வழியாக ஒலிம்பியாட் ஜோதியை ஏந்தி சென்றது, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிலும் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

ஈரானில் பெண்கள் அதிகமாக தூக்கிலிடப்படுகிறார்கள் – சர்வதேச பொது மன்னிப்புச் சபை விசனம் !

ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக மேற்குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு  ஷோகிலாவுக்கு 25 வயது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை இரண்டு மடங்கு அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதால், அதிகாரிகள் தங்கள் மரண தண்டனையை கணிசமாக முடுக்கிவிட்டதாக நம்பப்படுகிறது.

மற்ற எந்த நாட்டையும் விட ஈரானில் அதிகமான பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதாக உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன, அவர்களில் பெரும்பாலோர் தங்கள் கணவர்களைக் கொன்ற குற்றவாளிகள் என்று கருதப்படுகிறது.

மரணதண்டனை எண்ணிக்கை பற்றிய துல்லியமான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை, ஏனெனில் ஈரானிய அதிகாரிகள் இறந்த ஒவ்வொரு வழக்கையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இதுகுறித்து ஈரானில் செயற்படும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

‘இந்தக் கொலைகள் எல்லாம் குடும்ப வன்முறைக் காரணமாக நடந்துள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் ஈரான் நீதிமன்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இந்த ஆறு மாதத்தில் மட்டும் ஈரான் 250 பேரை தூக்கிலிட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவில் ஈரான் பெண்கள் மரணத் தண்டனைக்கு உள்ளாகுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இதுபோன்ற மரண தண்டனைகள் இன, மத சிறுபான்மையினரான வடமேற்கில் உள்ள குர்தூஸ், தென்மேற்கில் உள்ள அரபுகள் மற்றும் தென் கிழக்கில் உள்ள பாலுச் இனத்தவரை குறிவைத்தே நடத்தப்படுகிறது என ஈரான் மனித உரிமைகள் அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி, ஈரானில் 2021ஆம் ஆண்டு மரண தண்டனைகளின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மன்னிப்புச் சபையும் மரண தண்டனைகளை ஈரான் அரசியல் அடக்குமுறையாகக் கையாள்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படுமாறு பிரித்தானியா கோரிக்கை !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப செயற்படல் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நிதி அமைச்சில் நேற்று(வெள்ளிக்கிழமை)  சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர்  பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்ப மனித உரிமைகளையும் உரிய செயற்பாடுகளையும் மதித்து, அமைதியான, ஜனநாயக மற்றும் திறந்த வௌி செயற்பாடுகள் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழரின் நீண்டகால கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளா விட்டால் நாம் உங்களுடன் இணைந்து செயற்பட தயாரில்லை.” மனோகணேசன்

“பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது.“ என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

காலிமுக போராட்டக்கார இயக்கத்தினர் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடத்திய கலந்துரையாடலில் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்ட மனோ எம்பி அங்கு மேலும் கூறியதாவது,

ரணில் இன்று ஜனாதிபதி. அவருடன் அரசியல் காரணங்களுக்காக எதிரணி என்ற முறையில் நாம் முரண்படலாம். முரண்பாடுகள் உள்ளன. ஆனால், அவர் சட்டப்படித்தான் ஜனாதிபதி ஆகியுள்ளார். இடைக்கால ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தில்தான் தெரிவு செய்யப்பட முடியும் என சட்டம் கூறுகிறது. அதன்படி அவர் 134 வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதி ஆகியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பீக்கள் மாற்று வேட்பாளருக்கு வாக்களித்தோம். அது எம் அரசியல் கொள்கை நிலைப்பாடு. ஆனால், ரணில் இன்று ஜனாதிபதி.

இன்றைய பாராளுமன்றம் மக்களின் மனவுணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. வெளியே மக்கள் மத்தியில் தேர்தல் நடந்திருந்தால், முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆகவே இயன்றவரை சீக்கிரம் புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டு, புதிய மக்கள் ஆணை பெறப்பட்டு, புதிய பாராளுமன்றம் அமைய வேண்டும். ஆகவே சீக்கிரம் “புதிய ஒரு பாராளுமன்ற தேர்தல் தேவை”, என்பதையும் மேலதிக ஒரு கோஷமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

இங்கே என்னருகில் அமர்ந்து இருக்கும் முன்னிலை சோஷலிச கட்சி நண்பர் புபுது ஜாகொடவின் கட்சி பொது செயலாளர், குமார் குணரத்தினம் பாராளுமன்றத்துக்கு வெளியே “மக்கள் சபை” அமைய வேண்டும் என கூறுகிறார். எம்மை பொறுத்த அளவில், பாராளுமன்றம்தான் இன்று இந்நாட்டில் உள்ள மிகப்பெரும் “மக்கள் சபை”. அந்த பாராளுமன்றத்தை எரிக்க முடியாது. ஆகவே அதை தேர்தல் மூலம் கைப்பற்றுங்கள்.

நேற்று மாலை, ஜனாதிபதி ரணில், எமது கட்சிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில் தேசிய அரசு, அமைச்சர் பதவிகள் பற்றி எதுவும் இல்லை. நாடு இன்று எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார, சமூக சவால்களை சந்திக்க தேசிய கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள எம்மை அவர் அழைத்துள்ளார்.

இதுபற்றி நமது கட்சி அரசியல் குழு முடிவு செய்யும். ஆனால், நாம் இந்த தேசிய கலந்துரையாடலுக்கான அழைப்பை சாதகமாக பரிசீலிப்போம். போராட்டக்காரர்கள் மீதான, ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்ட பயன்பாடு, பயங்கரவாத தடை சட்ட பயன்பாடு ஆகியவற்றை நிறுத்துங்கள் என நாம் அவரை சந்தித்து கோருவோம். இதுதான் ஜனநாயக கதவுகளை திறக்கும், தடைகளை நீக்கும் தேசிய கலந்துரையாடல். அதை அவருக்கு எம்மால் சொல்ல முடியும்.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கைதான். அதையும் நாம் ஜனாதிபதி ரணிலிடம் சொல்வோம். உங்கள் கோரிக்கை பட்டியலில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் உங்களுடன் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.

போராட்டத்துக்காக வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். – பொது பாதுகாப்பு அமைச்சு

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கி கணக்குகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல குழுக்களினால் ஜனாதிபதி செயலகம் உட்பட அடையாளம் காணப்பட்ட இடங்களில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

விவாகரத்துகோரிய மனைவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கணவர் கைது !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில் விவாகரத்துகோரிய மனைவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கணவர், பெற்றோர் உட்பட கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரசேத்தில் வசித்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்துவருகின்ற நிலையில் கணவனிடம் விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்குதாக்குதல் செய்துள்ளார்.

சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை (29) காலையில் குறித்த பெண்ணின் வீட்டை கணவர், அவரது பெற்றோர் உட்பட 3 பேர் முச்சக்கரவண்டியில் சென்று முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில், அங்கிருந்த மனைவியின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கிவிட்டு மனைவியை கடத்தி சென்று கணவன் தனது வீட்டின் அறையில் பூட்டிவைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் பெண்ணின் தாயார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு, 119 பொலிஸ் அவசரசேவைக்கு தனது சகோதரியை கடத்தி சென்றுள்ளதாக முறைப்பாட்டையடுத்து, மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் கடத்திச் சென்ற பெண்ணை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரைவிளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

“ரணில் கோ ஹோம் என்று கோஷம் எழுப்பாதீர்கள். எனது வீட்டைத்தான் நீங்கள் எரித்து வீட்டீர்களே !” – கண்டியில் ஜனாதிபதி ரணில் !

இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றிய போது இதனை தெரிவித்திருந்தார்.

நாம் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம். இது அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒன்று. இது தொடர்பில் யாரும் விவாதம் செய்ய மாட்டார்கள். கொழும்பில் உள்ள சில அரசியல்வாதிகள் விவாதிப்பார்கள். கிராமத்தில் அது இல்லை. கிராமத்து விகாரைக்கு செல்லுங்கள். அங்கு என்ன சொல்கிறார்கள். கிராமத்து பாடசாலைக்கு செல்லுங்கள். என்ற கூறுகிறார்கள். நாம் ஏன் இந்த தகவலை கூறுவதில்லை. நாம் தற்போது ஒன்றிணைய வேண்டும் என்று. அந்த தகவலை கொண்டு செல்லுங்கள்.

நீங்கள் அனைவரும் கடந்த மே 9 ஆம் திகதி முதல் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். சிலருக்கு வீடு இல்லாமல் போனது. சிலருக்கு கிராமத்தில் இருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. அச்சுறுத்தல் இருந்தது. அழைத்து கூறினார்கள் உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என்று. அந்த காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. நாம் ஒன்றிணைய முயற்சிப்போம். நாம் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம். அவ்வளவுதான் நான் கேட்கிறேன்.

இந்த இடத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு கட்சியினரும் உள்ளனர். இந்த அரங்கில் மீதமுல்ல பகுதியும் நிரம்பி இருப்பதை பார்க்க எனக்கு விரும்பம் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களையும் அழைத்து வரை முடியாதா?. இதை நிரப்புவோம். இதை ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டியதில்லை.

மேலும் எனது வீடு எரிக்கப்பட்டுள்ளமையால் ரணில் கோ ஹோம் என்று கோஷம் எழுப்புவதால் எவ்வித பயனும் இல்லை என்றும் தயவு செய்து அவ்வாறு செய்ய வேண்டாம்.
ஏனெனில் எனக்கு வீடு இல்லை. வீடு இல்லாமல் இருப்பவரை வீட்டுக்கு போகச்சொல்வதில் அர்த்தம் இல்லை. அவர்கள் தயார் எனின் பெருந்திரளான மக்களை கொண்டு வந்து தனது வீட்டை கட்டித் தருமாறும் தெரிவித்தார். அதன்பின்னர், வீட்டுக்கு அருகில் வந்து ரணில் வீட்டுக்கு போ என்று சொல்லுமாறும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் நீண்ட இடைவெளிக்கு பின் யூரியா உரம் விநியோகம் !

அனைத்து கமநல சேவை நிலையங்கள் ஊடாக ஏக்கருக்கு 20 கிலோ வீதம் சிறு விவசாய நடவடிக்கைகளுக்கான உரம் விநியோகிக்கப்பட்டது.

இதன்படி, புளியம்பொக்கனை கமநல சேவை நிலையத்தின் ஊடாக  சிறு நெற்செய்கைக்கான யூரியா உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

கமநல சேவை நிலையத்தின் ஊடாக யூரியா மூடை ஒன்றின் விலை 10,000 ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ராஜபக்சக்களை விரட்டியத்த போராட்டத்துக்கு திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும்.  ” – மகிந்த காட்டம் !

“ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும்.  ” என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலருடனான நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும். நான் எப்போதும் மக்களுடன் தான் இருக்கின்றேன், நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. அதியுயர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும்.  எனினும், நான் அமைதியாகவே இருக்கின்றேன், உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும், காலம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரும்.

ராஜபக்சக்கள் உள்ளடங்கிய பெரமுன கட்சி மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்று எதிர்த்தரப்பினர் உளறுகின்றனர், இது வேடிக்கையாக இருக்கின்றது.

புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அமைச்சர்கள் அனைவருக்கும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன்” எனவும் கூறியுள்ளார்.