31

31

“தமிழ் தேசிய கட்சிகள் வழமையான அரசியலை கைவிட்டு ஈ.பி.டி.பி கூறும் அரசியலுக்கு வரவேண்டும்.- அமைச்சர் டக்ளஸ்

இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சர்வ கட்சி அரசொன்றை அமைத்து முன்னோக்கி செல்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியும் என கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான அழைப்பையும் சர்வ கட்சிகளுக்கும் எழுத்து மூலம் கடிதமாக அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் அந்த அழைப்பை ஈ.பி.டி.பி வரவேற்பது மாத்திரமல்லாது அந்த நோக்கம் செயல்வடிவம் பெறுவதற்கான பங்களிப்பையும் செய்துவருகின்றது.

இந்த நிலையில் சர்வ கட்சியில் பங்கெடுப்பதும், சர்வ கட்சி அரசொன்றின் எதிர்கால வேலைத்திட்டத்தில்,  மூன்று தசாப்பத்திற்கும் மேலாக கொடிய யுத்த வன்முறைக்கு முகம் கொடுத்து பல வழிகளிலும் இழப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வேலைத்திட்டங்களையும் வகுத்துக்கொண்டு ஒரு தேசிய இனமாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

எனவே தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கையின் தற்போதைய அரசியல் செல் நெறியை சரியாக கணித்து நாம் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

சர்வ கட்சி அரசை வரவேற்கும் அதேவேளை அதற்கு முரண்பாடான நிபந்தனைகளை விடுப்பதும், குழப்பத்தில் அரசியல் லாபம் தேடும் உள்நோக்கத்தோடும் தீர்மானங்களை எடுப்பார்களேயானால் அது மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்கச் செய்ததாகவே அமையும்.

எனவே ஏனைய தமிழ்க்கட்சிகள் தமது வழமையான எதிர்ப்பு அரசியல் எனும் சமகாலத்திற்கு பொருத்தமற்ற அரசியல் போக்கை கைவிட்டு, ஈ.பி.டி.பியாகிய நாம் தொடர்ந்தும் கூறிவரும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறைக்கு வருவது காலத்தின் அவசியமாகும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்!

புத்தளம் – கரம்பை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நுரைச்சோலை, தளுவ பகுதியை சேர்ந்த எம்.எல். அமரநாயக்க என்பவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூத்த சகோதரர் தனது இளைய சகோதரர் மீது மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர், கல்கடஸ் எனும் வகையைச் சேர்ந்த உள்ளூர் துப்பாக்கி ஒன்றினை இதற்கு பயன்படுத்தியுள்ளார் என மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்துடன் கடந்த 24 மணிநேரங்களுள் மூன்று இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முன்னதாக நேற்று கொழும்பு கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதே நேரம் காலி ரத்கம கம்மெத்தே கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

நாமல், ஜோன்ஸ்டன் ஆகியோருக்கு மீண்டும் அமைச்சு !

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது  இலங்கை பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம்.சந்திரசேன, எஸ்.பி.திஸாநாயக்க, சி.பி.ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகிய முன்னாள் அமைச்சர்களில் மூவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“2019 ஏப்ரல் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் இன்னமும் அரசியலில் உள்ளனர்” – கர்தினால் மல்கம்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் இன்றுவரை அரசியலில் ஈடுபட்டும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாக பணியாற்றியும் வருகின்றனர் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

முகத்த்துவாரம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் வருடாந்தப்  பெருவிழாவில் பிரசங்கம் ஆற்றிய போதே கர்தினால் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் :-

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை மறைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாட்டின் சக்திவாய்ந்த நபர்கள் அவர்களுக்குப் பின்னால் இருந்தனர். 2019 இல் மூன்று தேவாலயங்கள் மற்றும் ஒரு சில ஹோட்டல்களில் குண்டுகளை வீசியவர்கள் இன்னும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக நீதிக்கான எங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கத்தோலிக்கர்களாகிய நாம் நீதிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

மேலும் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலம் வாய்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள் தான் அந்த தேவாலயத்தில் கைக்குண்டை வைத்திருந்தனர். இருப்பினும் காப்பாளர்கள் உட்பட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தாக்கப்பட்டனர் மற்றும் சில ஆவணங்களில் கையொப்பம் இட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த பாலியல் தொழிலாளர்கள் எண்ணிக்கை – பிரச்சினைகளை தீர்க்க முன்வராத அரசாங்கம் !

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், பெண்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 22 மில்லியன் மக்கள் பாரிய கஷ்டங்களையும் வறுமையையும் எதிர்கொள்வதாக இந்திய செய்தி நிறுவனமான ANI சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அன்றாடப் போராட்டத்தினால் பல இலங்கையர்கள் வீட்டில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பெண்கள் ஆடைத் துறையில் வேலை இழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிக விபச்சார விடுதிகள் உருவாக்கப்பட்டு, பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக பாலியல் உரிமைகளுக்காக செயற்படும் குழுவான Standup Movement இலங்கை, இந்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் இலங்கையில் விபச்சாரத்தில் 30 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் வேலையிழந்துள்ள நிலையில், ஸ்பாக்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களில் வேலை செய்து பாலியல் தொழிலாளிகளாக வருமானம் ஈட்டுவதாக இது தொடர்பான செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

………………
நாட்டில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடியும் – உணவுத்தட்டுப்பாடும் அதிகரிக்கும் நிலையில் அரசாங்கமோ – அமைச்சர்களோ இதனை கட்டுப்படுத்த எந்த நகர்வுகளையும் மேற்கொள்ளாது பெட்ரோலுக்கான கூட்டத்தை குறைத்து மத்தியதர வர்க்கத்தின் நோக்கத்தை மட்டுமே தீர்க்க முண்டியடிக்கிறது. ஏழ்மைக்குடும்பங்களை கண்டுகொள்ளாது விட்டதே இந்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் காரணமாகும்.
விரைந்து அரசாங்கம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முன்வராவிட்டால் சமூக சீர்கேடுகள் இன்னும் அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறையப்போவதில்லை.