August

August

“சர்வதேச நாணய நிதியத்தை சமாளிக்க இலங்கைக்கு உதவிய ஒரே நாடு இந்தியா“ – நினைவுபடுத்துகிறார் எஸ் ஜெய்சங்கர் !

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியப் பெருங்கடல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மற்றொரு விசேட அம்சமாக மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது தேசிய நலன்களை கவனித்துக்கொள்ள வேண்டும், ஆனால் பிராந்தியத்தில் தனித்துவத்தை கோர முடியாது. இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக ஒன்றுப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு முன்வருவதற்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்திலிருந்து 24 ஆம் திகதி இலங்கைக்கு மீண்டும் வருகிறார் கோட்டாபய ராஜபக்ச !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு மீண்டும் வருகை தரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த உதயங்க வீரதுங்க அங்கிருந்து வெளியேறும் போதே இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தாய்லாந்தில் 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு !

தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தாய்லாந்தின் தென் பகுதியில் பட்டணி, நாராதிவத், யால ஆகிய நகரங்களில் உள்ள 17 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பெரும்பாலும் சிறிய கடைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இடம்பெறுள்ளன. நேற்று (16) இரவு சந்தேக நபர் ஒருவர் யால, யஹா மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து கறுப்பு பை ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளார்.

அத்துடன், மரணிக்க விரும்பவில்லை என்றால், அங்கிருந்து வெளியேறுமாறு ஊழியர்களுக்கு எச்சரித்துள்ளதாக தாய்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிய 10 விநாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு பாரிய நன்மைகள் ஏற்படவுள்ளன – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்

பிரித்தானிய GSP பிளஸ் சலுகைக்குப் பதிலாக நடைமுறைப்படுத்தப்படும் புதிய கட்டண நிவாரணத் திட்டத்தில் இலங்கையும் இணைந்து கொள்வதன் மூலம் இலங்கைக்கு பாரிய நன்மை ஏற்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் அனுமதிக்கும் என்று அவர் கருதுகிறார்.

2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையின் 80% க்கும் அதிகமான ஏற்றுமதி பொருட்கள் பிரித்தானிய சந்தையில் வரியின்றி பிரவேசிக்க முடியும்.

இது தவிர இத்திட்டத்தின் கீழ் மேலும் 156 ஏற்றுமதி பொருட்களுக்கான வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை விசேடமாகும்.

“காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது.“ – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம்

“காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இனிமேல் கூட்டமைப்பினர் தடையிடக்கூடாது.“ என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

கல்முனையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

அம்பாறை மாவட்டத்தில் இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எமது உறவுகளுக்கான நீதி கிடைக்கும்வரை இந்தப் போராட்டத்தை நாம் கைவிடப்போவதில்லை. 138 பேரை அம்பாறை மாவட்டத்தில் இழந்து இருக்கின்றோம்.

காணாமல் போனோரின் அலுவலகத்தினை 8 மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் வேண்டாம் என்று உறுதியாக நிற்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான காரியாலம் வேண்டும் என்று கூறுவதற்கு காரணம் என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறு செயற்படுவதானது எமக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறான அலுவலகங்களை எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று ஊக்குவிப்பதற்கான காரணம் என்ன?

கூட்டமைப்பினர் எங்களுக்கான நீதியை பெற்றுத்தர விரும்பி இருந்தால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னரெ அது கிடைத்திருக்கும். ஆனால் நீங்களோ கதிரைகளுக்கு ஆசைப்பட்டு அரசாங்கத்துடன் சேரந்து உழைக்கின்றீர்கள்.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எமக்கான நீதி கிடைக்கும் என நம்புகின்றேன். இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையை தொடர்ந்து இலங்கை பொறிமுறையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நாங்கள் இன்று சர்வதேசத்தை நாடி இருக்கின்றோம்.

அதற்கான காரணத்தையும் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூறி இருக்கின்றோம். இந்த உள்ளக பொறிமுறை விசாரணையை ஏன் விரும்பவில்லை என்ற காரணத்தையும் அங்கு தெளிவாக கூறியுள்ளோம்.

இன்று அரசாங்கத்துடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்க படுகின்றனர். இதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உண்டு. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றார்கள்.

செல்லாக் காசான தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இவ்விடயத்தில் தினமும் நம்பி நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்துள்ளோம்.- என்றார்.

யாழில் தொடரும் ஊசிபோதைப்பொருள் கலாச்சாரம் – மேலுமொரு இளைஞர் பலி !

நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என உடல் கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின் போது , கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத்தியமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை யாழில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7க்கும் மேற்பட்டவர்கள் போதை பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் மின்கம்பியில் சிக்குண்டு காட்டு யானை பலி !

வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று அனுமதியற்ற மின்கம்பியில் சிக்குண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த அனுமதியற்ற மின்சாரம் தாக்கியதில் குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்த யானையாது, சுமார் எட்டு அடி உயரமுள்ள 25 வயதுடைய யானை என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காட்டு யானையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று வடமாகாண கால்நடை வைத்தியர் கிரிதரனால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

அனுமதியின்றி மின்சாரத்தை இணைத்த தோட்டத்தின் உரிமையாளரான 50 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஞானசார தேரரின் “ஒரே நாடு ஒரே சட்டம்“ செயலணி அறிக்கையை தூக்கிவீச ரணில் அரசு முடிவு !

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய பல முக்கிய பிரச்சினைகள் இருப்பதனாலும் பல தரப்பினரின் ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டும் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கு அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தற்போது முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில், சர்வகட்சி அரசாங்கத்தில் இணையவிருக்கும் பல தரப்பினரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குறித்த செயலணி உள்ளிட்ட அவரால் முன்னெடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளுக்கு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் ஒவ்வொரு இனத்திற்கும் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது என்பதனால் குறித்த செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை சிங்கள பௌத்த பெரும்பான்மைக் கருத்தியலின் காரணமாக ஆங்கிலேய சட்டம், ரோமன் டச்சு சட்டம், தேசவழமை சட்டம், முஸ்லிம் சட்டம், கண்டிய சட்டம் என்ற முக்கிய ஐந்து சட்ட முறைகளை நீக்குவது ஏற்புடையதல்ல என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அவசரகாலச் சட்டத்தை உடன் நீக்குதல், கைது நடவடிக்கைகளை நிறுத்துதல் மற்றும் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு !

500 மில்லியன் டொலர் முதலீட்டிற்கு இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி பசுமை சக்திக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர், இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மின்சார சபை சட்டத் திருத்தங்கள் காரணமாக தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 26 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்மொழிவுகளுக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்ட ஆர்வங்களின் வெளிப்பாட்டில் இருந்து அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய திட்டங்களும் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் – சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ள தகவல் !

தமது உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் தடையாக இருக்கக் கூடாது எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெங் வென்பின் இதனை தெரிவித்துள்ளார். நேற்று கருத்து வெளியிட்ட அவர், “யுவான் வாங் 5 கப்பல், இலங்கையின் தீவிர ஒத்துழைப்புடன், இந்தியா ,அமெரிக்காவின் கவலைகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

யுவான் வாங்-5 கப்பலின் கடல் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவானவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இது வழக்கமான சர்வதேச நடைமுறையாகும்.

அவை எந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்காது என்றும் இது எந்தவொரு மூன்றாம் தரப்பினராலும் தடுக்கப்படக்கூடாது எனவும் அவர் கூறினார்.

சில நாடுகள் கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பதும், அதன் உள் விவகாரங்களில் மொத்தமாக தலையிடுவதும், பாதுகாப்புக் கவலைகள் என்று கூறுவதும் முற்றிலும் நியாயமற்றது என்றும் அவர் கூறியுள்ளார் .