August

August

“ரணில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்.”- பிரதமர் தினேஷ் குணவர்தன

சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளமையை தற்போதைய அரசாங்கத்தின் சார்பில் மனதார வரவேற்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்.

நாட்டிலுள்ள தேசிய பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே ஒரே வழி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து நியாயமானதும், பாராட்டத்தக்கதும்.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார். எனவே, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு என்ற வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி அரசாங்கம் அமைய முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

“கோட்டாபாய இலங்கை வந்தால் முழுப்பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.”- பொதுஜன பெரமுன

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வர விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அவர் வந்தால் பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இந்நாட்டின் குடிமகன், அதுமட்டுமல்ல நாட்டை வழிநடத்திய ஜனாதிபதி. அவருக்கு நாட்டுக்கு வர உரிமையுண்டு, முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்கு பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர் அரசியலில் தொடர்ந்து செயற்பட விரும்பினால் அதனை  வரவேற்பதாகவும் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்தவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து ஔிபரப்பை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தானிஸ் அலி என்ற நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக துபாய் நோக்கி செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.