கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக்காரர்களால் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்துக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த பணத் தொகையை நீதிமன்றில் கையளிக்கும் போது கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் இதனை அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் குறித்த பணத் தொகை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்கு மூலம் பெற வேண்டி இருக்கும் நிலையில், அவரை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் , போராட்டக்காரர்களால், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எண்ணி ஒப்படைக்கும் வீடியோ காணொளியை மையப்படுத்தி, அக்காணொளியில் இருந்த நால்வர், கொழும்பு மத்திய வலய குற்ற விசாரணை பணியக அதிகாரிகளால், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கடந்த ஜூலை 28 நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, அவர்களுக்காக மன்றில் ஆஜரான சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்னவின் வாதங்களை அடுத்து கோட்டை நீதிவான் இந்த பணத்தொகையை மன்றில் ஒப்படைக்க உத்தரவைப் பிறப்பித்தார். அத்துடன் அந் நால்வருக்கும் பிணையளித்திருந்தார்.
இதனையடுத்தே கடந்த ஜூலை 29 அப்பணம் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.
இதன்போது மன்றில், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில், சட்டத்தரணிகளான நுவன் போப்பகே, ரஜித்த லக்மால், ஜயந்த தெஹிஅத்தகே, ரிவிஹார பின்னதுவ, நளின் பெர்ணான்டோ , தரிந்து எல் வன்னி ஆர்ச்சி ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், கடந்த ஜூலை 9 ஆம் திகதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம், ஜூலை 29 வரை நீதிமன்றில் ஒப்படைக்கப்படாமை பாரிய சந்தேகத்துக்கு உரியது என சுட்டிக்காட்டினார்.
‘ இந்த பணம் தொடர்பில் விசாரணை வேண்டும். அது எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை வேண்டும். முழுமையான விசாரணைகளையே நாம் எதிர்ப்பார்க்கின்றோம் ‘ என சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறிப்பிட்டார்.
இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே, முறையான, விரைவான விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மத்தி வலய குற்ற விசாரணை பணியகத்துக்கு உத்தரவிட்டதுடன், இப்பணத்தை நீதிமன்றில் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்திய கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகேவுக்கு எதிராக சிறப்பு விசாரணை ஒன்றினை நடாத்துமாறு எஸ். ஐ.யூ. எனப்படும் பொலிஸ் சிறப்பு விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதற்கான தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.