05

05

எரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் – காட்டிக்கொடுத்த தலையணை !

எரிபொருளுக்காக கர்ப்பிணியாக நடித்த பெண் ஒருவரின் மோசடி , தலையணை கீழே விழுந்ததால் அம்பலமாகியுள்ளது.

பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக கர்ப்பிணி போல் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு பெண் ஒருவர் வந்துள்ளார்.

பிங்கிரிய எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக வாகனங்கள் ஒரு வரிசையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றுமொரு வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதற்கும் மேலதிகமாக சுகாதார சேவை ஊழியர்கள், வைத்திய அதிகாரிகள் அலுவலக ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மாருக்காக தனியான வரிசையொன்றும் காணப்பட்டது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட அப்பெண் வயிற்றில் தலையணையை கட்டிக்கொண்டு கர்ப்பிணியைப் போல் வந்து எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளார்.

எரிபொருளை பெற்றுக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பிரதான வீதிக்கு வந்து வீட்டுக்குச் செல்ல மோட்டார் சைக்கிளை திருப்பும் போது அவர் தவறி விழுந்ததில் வயிற்றில் கட்டியிருந்த தலையணையும் கீழே விழுந்துள்ளது.

சம்பவத்தைப் பார்த்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் அந்த இடத்துக்குச் சென்று பெண்ணை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சம்பவத்தை அடுத்து அந்தப் பெண் வெட்கத்தில்  கூனிக்குறுகியபடி தலையணையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” – தொடர்கிறது போராட்டம் !

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் ஐந்தாம் நாள் போராட்டம் இன்று  (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வீதி நாடகம் இடம்பெற்றதுடன், மகஜர் ஒன்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா உள்ளிட்ட குழுவினரினால் மட்டக்களப்பு மனித உரிமைகள் பிராந்திய பணிமனையின் பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீனிடம் வழங்கியிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த தழிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு மேலுமொரு வெண்கலப் பதக்கம் !

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் நெத்மி போருதொட்டகே இலங்கைக்காக மற்றுமொரு பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட அவர் இலங்கைக்காக வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

http://Nethmi Poruthotage

“எதிர்வரும் ஆறு மாதங்கள் நாம் ஒருபோதும் அனுபவித்திராத காலகட்டமாய் இருக்கும்.”- எச்சரிக்கிறார் ரணில் !

எதிர்வரும் 6 மாதங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும் என்றும், இது நாம் ஒருபோதும் அனுபவிக்காத காலகட்டமாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும், அதை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதைத் தவிர, இந்தச் சூழ்நிலையில் இருந்து மீள எங்களிடம் வேறு தீர்வு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அது நல்லதா கெட்டதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முதலில் ஊழியர்கள் மட்டத்தில் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும்.

ஆனால், நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியும் அதற்கு உடன்படவில்லை என்றால் உங்களின் தீர்வு என்னவென்று கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. அல்லது உங்கள் மாற்றுத் தீர்வு என்ன? இதற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சினை, அரசாங்கங்கள் மாறும்போது கொள்கைகள் மாறுவதுதான். அதற்கு நாம் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். அதை நாடாளுமன்றம் நிராகரித்தால் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

ஆனால் எதிர்காலம் கண்டிப்பாக கடினமாக இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. முதல் 6 மாதங்கள் மிகவும் கடினம். இது நாம் அனுபவித்திராத நேரம், ஆனால் நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும். நாங்கள் திரும்பிச் செல்ல முடியாது. பழைய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுதான் இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நாம் மீண்டும் அந்த பொறிமுறைக்குச் செல்வதில் அர்த்தமில்லை. புதிதாக சிந்திப்போம்” என தெரிவித்தார்.

தமிழினப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய் – யாழில் சுவரொட்டிகள் !

இலங்கையை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய தமிழனப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய் என்ற தொணியில் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை ஊழல்வாதிகளாக வெளிப்படுத்தும் சித்திரத்துடன் தென்னிலங்கை போராட்ட களங்கள் அமைந்திருந்த நிலையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமிழினப்படுகொலையாளிகள் என்பதனை இந்தச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்ட சனத் ஜயசூரிய இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக நியமனம் !

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில், சுற்றுலாத்துறை அமைச்சு தொழில்துறையை மேம்படுத்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கல்விமான்கள் பலரின் பங்களிப்புடன் சுற்றுலா ஆலோசனை சபையொன்று உருவாக்கப்பட்டு, அந்த ஆலோசகர்களுக்கான நியமனங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர் தலைமையில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்றது.

கோட்டாபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பல காரணங்களுக்காக தொடர்ந்து கைதாகி வரும் நிலையில்,  ராஜபக்ஷ அரசுக்கெதிரான போராட்டங்கள் முனைப்படைந்திருந்த போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“IMF உடனான உடன்படிக்கைக்கு எதிரப்பு வெளியிடுபவர்களே நெருக்கடிக்கான தீர்வையும் வழங்கட்டும்.” – ரணில் விக்கிரமசிங்க

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்தார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது சாத்தியமில்லை. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டும்.

ஒப்பந்தம் செய்தாலே நம்மால் மீள முடியும். உண்மையிலேயே இது ஒரு கடினமான காலமாக இருக்கும் அதனை நான் இல்லை என்று சொல்ல மாட்டேன். முதல் 6 மாதங்களும் எமக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் ” எனக் குறிப்பிட்டார்

“தமிழரின் இனப்படுகொலை தொடர்பில் பேசும் உரிமையை கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர்கள் வழங்கவில்லை.”- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் அமைப்பு

இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு மீண்டும் துணைபுரிவதாகவே அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் அமைப்பின் ஊடகபேச்சாளர் தமிழினி மாலவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற செய்தியார் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கெதிரான குற்றங்களுக்கு காரணமானவர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சை நடத்தியமையானது, ஒற்றையாட்சி அரசாங்கத்தை பலப்படுத்தி, கூட்டமைப்பின் கதிரை அரசியலுக்கு வெள்ளை அடிக்கும் செயலாகவே நாம் பாக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, இனப்படுகொலை என்பன தொடர்பாக சர்வதேசமே விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாகும். இவை தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சை நடத்துவற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழர் ஒருபோதும் வழங்கவில்லை. இலங்கை அரசாங்கம் உள்ளுர் பொறிமுறையின் மூலமாகத் தீர்வு காணப்படும் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடன் பேச்சுக்களை நடத்தியமை சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கும் சதி முயற்சியாகவே நாம் பாக்கின்றோம்.

சர்வதேச விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள சிங்கள இனவழிப்பு அரசாங்கம் ஒவ்வொரு ஐ.நா அமர்வையும் சமாளிக்க கூட்டமைப்பின் கதிரை அரசியலை சந்தர்ப்பமாக பயன்படுத்தி வருகின்றது.

இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒரு போதும் கொலையாழிகள் தீர்வைத் தரப்போவதில்லை. மீண்டும் மீண்டும் அதில் நம்பிக்கை வைத்துச் செயற்படுவது இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கூட்டமைப்பைக் கொண்டு செல்வதற்கே வழிவகுக்கும்.

மேலும், இனவழிப்பில் ஈடுபட்ட குற்றவாழிகளிடம் தீர்வை எதிர்பார்ப்பதோ அதற்கான பேச்சுக்களை நடத்துவதோ இனவழிப்பு கூற்றவாழிகளை நீதிபதிகளாக்கும் செயலாகும்.- என்றார்.

கொடூரமாக நாயை கொலை செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய இருவர் யாழில் கைது !

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் கைது நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து, நாயின் முகத்தினை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து கைக்கோடாரியால் கொத்தி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர்.

தமது கொடூரமான செயலினை காணொளியாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவத்தை காணொளி எடுத்தவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் எனும் குற்றத்தில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்றத்தை அரசாங்கமாக கட்டியெழுப்ப போவதாக ஜனாதிபதி ரணில் அறிவிப்பு !

“நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

பொருளாதார வீழ்ச்சியும், பசியும் போராட்டக்காரர்களின் ஆரம்பத்திற்கு வழிவகுத்தது எனவும்  ஆனாலும், போராட்டக்காரர்கள் கடைசி நேரத்தில் வன்முறையுடன் போராட்டத்தை முடித்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

“நாடாளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும். 22வது அரசியலமைப்பு திருத்த வரைபு தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவதே சிறந்தது. இதற்கு அனைவரினதும் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.