07

07

சீனாவின் ஆய்வுக்கப்பல் இலங்கைக்கு வருவதை காலந்தாழ்த்துமாறு கோரிக்கை !

சீனாவின் சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதைக் காலந்தாழ்த்துமாறு சீனாவிடம் இலங்கை கோரியுள்ளதை வௌிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலும் தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

இந்தியா இந்தக் கப்பலை உளவுப் பார்க்கும் கப்பலாக நோக்கும் அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தக் கப்பல் வந்தடைந்தால் தமது 02 அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களும் ஆபத்தை எதிர்நோக்குமென சுட்டிக்காட்டியுள்ளது.

தமது கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை சேகரிப்பதற்கான இயலுமையும் குறித்த கப்பலிடம் உள்ளதாக இந்தியா தெரிவிக்கின்றது.

இந்தக் கப்பலுக்கான எரிபொருள் மற்றும் உணவை மீள் நிரப்பும் நோக்குடன் ஹம்பாந்தோட்டைக்கு வருகைதருவதற்கான வாய்மொழி மூல அனுமதியை ஜூலை மாதம் 12 ஆம் திகதியன்று இலங்கை வௌிவிவகார அமைச்சு, சீனத் தூதரகத்திற்கு வழங்கியதாக கொழும்பு இராஜதந்திர கேந்திர நிலையமொன்றை மேற்கோள்காட்டி இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது.

இந்த வேண்டுகோள் சீனாவின் பலத்தை விடவும் அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு மதிப்பளிப்பதாக உள்ளதென ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கின்றது.

கொமன்வேல்த் போட்டிகளுக்காக பிரித்தானியாவுக்கு சென்ற மேலும் ஏழு இலங்கை வீரர்கள் மாயம் !

பிரித்தானியாவில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறச் சென்ற இலங்கையர்கள் மாயமாவது அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இதுவரை 10 இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

9 விளையாட்டு வீரர்களும், முகாமையாளருமே இவ்வாறு மாயமாகியுள்ளனர். கடந்த வாரம் மூவர் மாயமாகியிருந்த நிலையில் தற்போது மேலும் 7 பேர் பிரித்தானியாவில் தங்கி தொழில் புரியும் நோக்கத்தில் மாயமாகியுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முன்னர் மாயமாகி இருந்த பயிற்றுவிப்பாளரும் இலங்கை அணி வீரரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பர்மிங்ஹாம் காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலை வைத்து காய் நகர்த்தும் ராஜபக்சக்கள் – 9ஆம் திகதி அடுத்த போரட்டம் !

எதிர்வரும் ஒன்பதாம் திகதி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இணைந்து ரணில் ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் கட்டளை பிறப்பிக்க உள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதியும், ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ரணில் ராஜபக்ச கலப்பு அரசாங்கத்தை அமைத்தாலும் அது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு அல்ல.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்வதற்கு முன்னர் போராட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். நாற்காலியில் அமர்ந்த பின்னர் போராட்டம் சட்டவிரோதமானது, பாசிசவாதம் கொண்டது எனக் கூறுவது தவறானது.

ரணில் விக்ரமசிங்கவை வைத்து ராஜபக்சர்கள் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் கனவு இதுவல்ல. இதனை ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு நாம் பகிரங்கமாகவே கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

ஆகையினால், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தத்தமது நகரங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அனைவரும் தமது தொழில் இடங்களில் இருந்து வந்து போராட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

“இனவாத சக்திகளின் கரங்களை ஓங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும்.” – ஜனாதிபதி ரணிலிடம் ரிசாட் கோரிக்கை !

பதவிகளுக்காக இல்லாமல் நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தால் ஆதரவு வழங்கத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சர்வகட்சி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மாற்றி அமைப்பதற்காகவும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இன்னோரன்ன தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வகையிலும், கியூவில் நின்று பொருட்களை பெரும் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலும் ஜனாதிபதி எடுக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு நல்குவோம் எனவும் இச்சந்திப்பில் உறுதியளித்தோம்.

மேலும், காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டமை மற்றும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைது தொடர்பிலும் எமது ஆட்சேபனையையும் கவலையையும் தெரிவித்ததோடு, இவ்வாறான பயமுறுத்தல் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

19 ஆவது திருத்தத்தை உடனடியாகக் கொண்டு வந்து, அதனை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும், பாராளுமன்றத்தில் அமைச்சுக்களை கண்காணிக்கும் குழுக்களை அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தோம். அத்துடன், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி, வகைதொகையின்றி ஆட்களை கைது செய்யும் நடவடிக்கையை உடன் நிறுத்துவதுடன், அவசரகாலச் சட்டத்தில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினோம்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த காலங்களில் நாட்டினதும், மக்களினதும் நலனைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டமையை உணர்த்தியதுடன், இனவாதத்தை விதைப்பதன் ஊடாக தங்களது அரசியல் இருப்பு நீடிக்கும் என்ற தப்பெண்ணம் கொண்டு செயற்பட்டதனால்தான், இந்த நாடு இவ்வாறான கீழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

ஆகையால், எதிர்காலத்தில் இனவாத சக்திகளின் கரங்களை ஓங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும், அந்த விடயத்தில் கூடிய கவனஞ்செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்” என்று அவர் தெரிவித்தார்.

“இலங்கையிடமிருந்து திறந்த இந்தோ-பசிபிக் கொள்கைக்கு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.” – ஜப்பான்

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை தான் எதிர்பார்ப்பதாக ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள அவர், அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல்கள் மூலம் இலங்கையின் அபிவிருத்திக்கு விரைவான முன்னேற்றம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கொள்கைக்கு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் இராணுவ அதிகாரிகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. – ஜி.எல்.பீரிஸ்

இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் விடுதலை புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வலியுறுத்தல் இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயலாகும். இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தும் நடவடிக்கையை ஐ.நா. உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஐ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் இலங்கை இராணுவ அதிகாரிகளைக் கைதுசெய்யுமாறு கோரவோ அல்லது பயணத்தடை விதிக்குமாறு கோரவோ மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணையாளரின் இந்த அறிவிப்புக்கு எதிராக அரசு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு இலங்கையிடம் IMF கோரிக்கை !

நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் ரணில் தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் கடன்களால் மட்டுமே இலங்கையை மீட்க முடியும் என வலியுறுத்திவருகின்றது. எனினும் இலங்கையின் இடதுசாரிய அமைப்புக்களும் பொருளாதார வல்லுநர்களும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன்திட்டம் இலங்கையின் பொருளாதாரத்தை அடிமைப்படுத்தப்பட்டதாக்கி விடும் என எச்சரித்துவரும் நிலையில், அரசு தரப்பு இதனை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை.
மேலும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ரணில் விக்கிரமசிங்க “கடினமானதாக இருந்தாலும் சர்வதேச நாணயநிதியத்தின் கடன்களை பெற்றே ஆகவேண்டியுள்ளது எனவும் இதனை யார் தடுத்தாலும் அரவ்களே நாட்டின் பொருளாதார நிலையை மீட்கட்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் , நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு IMF கோரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் இருந்து அரசுக்கு உதவி செய்ய முடியும். அரசாங்கத்தில் இணைந்து கொண்டுதான் அரசுக்கு உதவ வேண்டும் என்றில்லை என கருத்து தெரிவித்துள்ள லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி இலங்கையில் நட்டத்தில் இயங்கும் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துமாறு IMF கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பில் நாம் பாராளுமன்றில் பேசி அரசுக்கு உதவி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

நிர்மாணப்பணிகளுக்காக வழங்கப்பட்ட கடனை இடைநிறுத்தியது சீன வங்கி – காரணம் என்ன..?

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவு ஆகியவை இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட 51 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளது. இதனால் சுமார் 2000 வேலைகள் இழக்கும் அபாயத்தை இலங்கையர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீன பிரஜைகள் ஏற்கனவே வெளியேறத் தொடங்கியுள்ள தெரிவிக்கப்படுகின்து.

கடன் வசதி நிறுத்தப்பட்டதால், திட்டம் தாமதமாகும் என்றும், இதன் காரணமாக திட்டத்திற்கு பொறுப்பான ஒப்பந்ததாரர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தகவலால் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதும் இடைநிறுத்தப்பட்டுள்ள கடன் வசதியை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றார் ரணில்.” – சி.வி.கே.சிவஞானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றார்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தனர் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக்கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றார். ஆனால் , அந்தளவுக்குக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட்டின் பத்தாவது தேசிய மாநாடு அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு கூறியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டும். அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும். எல்லோரையும் அணைத்துச் செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியைத் தொடர்வார். என்னைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சியின் உப கட்சியினுடைய நிகழ்வே இது. இங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களே. தற்போது அது உடைந்து இருந்தாலும் கூட அடிப்படையில் தமிழரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது” என்றார்.

ஜனாதிபதி பதவிக்கு நானே தகுதியானவன் – நிமால் சிறிபால டி சில்வா

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அதிக தகுதிகள் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிமால் சிறிபால டி சில்வாவை ஜனாதிபதி கடுமையாக சாடினார்? - Sri Lanka Muslim

அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தனது பெயர் விஜயதாச ராஜபக்ச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரது பெயர் முன்மொழியப்பட்டதாகவும், அதில் மிகவும் ததகுதியானவர் தான் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு நல்லாட்சியை கொண்டு வர ஜனாதிபதி வேட்பாளராக தம்மையே முதன்முதலில் அழைத்ததாகவும், கட்சியை விட்டு விலக விரும்பாத காரணத்தினால் தான் அதற்கு இணங்கவில்லை எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.