09

09

கொக்கட்டிச்சோலையில் 14வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை !

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் இளம் யுவதி தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகிழடித்தீவு (தெற்கு) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியான குருகுலசிங்கம் டிவைனா (14) என்பவரே தனது வீட்டு அறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ தினத்தன்று மாணவியின் பெற்றோர் தங்களின் வயலினை பார்வையிட சென்றிருந்த போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சம்பவ தினம் பாடசாலை கற்கையினை முடித்து விட்டு வீடு திரும்பிய நிலையில் தனக்குத்தானே களுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்முள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் ,சம்ப இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்புக்கு முன்னர் கொலை மிரட்டல் – பகிரங்கப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் !

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னதாக தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, திலக் ராஜபக்ஷ மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோரே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

 

எனவே, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக அண்மையில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தேர்தல் முறையானதா இல்லையா என்பதை சபைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

அடையாளம் தெரியாத ஒருவர் தமக்கு அழைப்பை ஏற்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மர்ம நபர் ஒருவர் தம்மை தொடர்புகொண்டு, சபையிலிருந்து பதவி விலக வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

குறித்த நபரின் உரையாடல் அடங்கிய பதிவை சமர்ப்பித்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் சபாநாயகரிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் திலக் ராஜபக்ஷ மேலும் வலியுறுத்தியுள்ளார்

இலஞ்ச ஊழல் வழக்கு – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பயணத்தடை !

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

அத்தோடு கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் கைரேகைகளையும் சமர்ப்பிக்குமாறும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொச முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் சதொச முன்னாள் பணிப்பாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சாகீர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மற்றும் 12 க்கு இடையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“பிரஜைகள் செய்தால் தவறு. பாராளுமன்ற எம்.பிக்கள் செய்தால் சரி.” – ஹர்ஷ டி சில்வா காட்டம் !

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதி கதிரையில் அமர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து ஒலிவாங்கிகளை சேதப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து ஒலிவாங்கிகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அப்போதைய சபாநாயகரால் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த அவர், அந்த குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேகுணவர்தனவிடம் வலியுறுத்தினார்.

“பாராளுமன்றத்தில் தவறாக நடந்துகொள்ளும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை இல்லை. சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து தண்ணீரை கொட்டி மைக்கை சேதப்படுத்திய எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் சாதாரண பொதுமக்கள் மாத்திரம் தண்டிக்கப்படுகின்றனர். இப்படியே போனால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேற்படி அறிக்கையை நாங்கள் பெற விரும்புகிறோம்,” என்று அவர் இன்று சபையில் கூறினார்.

மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி !

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என்ற சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக, முதலாளிமார் சம்மேளனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தள்ளுபடி செய்துள்ளது.

இந்த தகவலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளருமான பாரத் அருள்சாமி வெளியிட்டார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் கூட்டாக கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டது.

கூட்டு ஒப்பந்தம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் போனதால், தொழில் அமைச்சு தலையிட்டது. அதன் பின்னர் சம்பள நிர்ணய சபை ஊடாக நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது.

இந்த முடிவை முதலாளிமார் சம்மேளனம் ஏற்கவில்லை. சம்பள நிர்ணய சபையின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பான மனு இன்று (09) விசாரணைக்கு வந்தபோது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் மனு தள்ளுப்படி செய்யப்பட்டது என பாரத் அருள்சாமி குறிப்பிட்டார்.

தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து சீனா போர் பயிற்சி – தொடரும் பதற்றம் !

சீனாவில் 1927-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் அதை மீறி தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.

 

இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் கடும் கோபம் அடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சியை தொடங்கியது. சீன நேரப்படி கடந்த 4-ந் திகதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போர் பயிற்சி 8-ந் திகதி மதியம் 12 மணி வரை தொடரும் என சீன இராணுவம் அறிவித்தது. அதன்படியே நேற்று முன்தினம் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா இராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது.

 

சீன இராணுவத்தின் இந்த போர் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் சீன இராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சியை தொடங்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மூலம் கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த போர் பயிற்சி நடத்தப்படுவதாக சீன இராணுவம் கூறியது. அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன இராணுவம் தெரிவிக்கவில்லை. தைவானை சுற்றி தொடர்ந்து 4 நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்-சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

“இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது.” – சீனா விசனம் !

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு செல்லும் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணத்தை நிறுத்துமாறு இலங்கை விடுத்த, கோரிக்கையால் சீனா அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விடயம் குறித்து இந்தியாவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று சீனா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இன் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங் வென்பின் “ இந்தியா பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார்.

சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா, சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது என்றும் வாங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க கூடிய தலைவர் யார்..? – வெளியானது மக்கள் கருத்துக்கணிப்பின் முடிவுகள் !

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை யாரால் தீர்க்க முடியும்? : வெளியான கருத்துக்கணிப்பு !

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

23.7% டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் மேலும் 18.3% பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முடியும் என்றும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடியும் என 11.9% நம்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2022 மூன்று லட்சத்தை தாண்டும் தொழிலாளர் இடம் பெயர்வு !

2022 ஆம் ஆண்டில் வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடம் பெயர்வு 333000 ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 174,584 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர் இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டிலேயே 300.000 க்கும் அதிகமான தொழிலாளர் இடம்பெயர்வு பதிவாகியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் வெளிநாட்டு வேலைகளுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே வெளிநாடுகளுக்கான தொழிலாளர் இடப்பெயர்வு இந்த ஆண்டு 330,000 என்ற புதிய உச்சத்தை எட்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஒகஸ்ட் முதலாம் திகதி வரை 174584 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தம்மை பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளனர். இருப்பினும், உண்மையான வெளிப்புற தொழிலாளர் இடம்பெயர்வு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் 117952 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறினர். தொழில்களில் பயிற்சி பெறாத மற்றும் வீட்டு உதவி, பணிப்பெண் பிரிவுகளில் பெரும்பாலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். கட்டார், சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமன் ஆகிய இடங்களுக்கே அதிகமானோர் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் ஜூன் மாதத்தில் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்த பின்னர் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து பண வரவு மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை வழங்கி போரை தூண்டும் அமெரிக்கா !

உக்ரைனுக்கு மேலதிகமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுத பாதுகாப்பு உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த உதவி வழங்கப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்த உதவி மூலம் உக்ரைன் படைகள், ரஷ்ய படைகளை தாக்க உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

75,000 ரவுண்டுகள் கொண்ட பீரங்கி வெடிபொருட்கள் மற்றும் 50 கவச மருத்துவ சிகிச்சை வாகனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட அமெரிக்க உதவிகள் உக்ரைன் மக்களையும் அந்த நாட்டையும் பாதுகாக்கவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் வரை நாங்கள் தொடர்ந்து அந்நாட்டுக்கு ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

இதே வேளை போரை முடித்துவைப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளாலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி போரை தூண்டுவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகின்றது.

இதே நேரம் ரஷ்யா – உக்ரைன் போரினால் தொடர்ந்தும் பல நாடுகளில் உணவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துச்செல்கின்றது. இதனை கருத்தில் கொண்டு போரை முடித்து வைக்காது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எந் தமுயற்சியும் மேற்கொள்ளாது  போரை தூண்டி விட்டு தங்களுடைய நீண்டகால விரோதியான ரஷ்யாவை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பல அரசியல் விமர்சகர்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதே வேளை சீனாவுடனான ஆதிக்கப்போரை தாய்வானை சீனாவுக்கு எதிராக தூண“்டிவிடுவதன் மூலம் அமெரிக்கா தீவிரமாக செயற்படுத்துவதால் தென்சீனக்கடல் பகுதியில் போர் ஏற்படுவதற்கான அபாயமான சூழல் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.