“புரட்சிகரமான இனவாதம் அற்ற போராட்டக்காரர்கள் கேட்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமையுங்கள்.” என ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நான் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவுக்கே ஆதரவளித்தேன். அதற்கு காரணம் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று பலரும் விடுத்த கோரிக்கையே ஆகும். சஜித் பிரேமதாசவே அவரின் பெயரை பரிந்துரைத்திருந்தார். அதற்கு முதல்நாள் வரையில் டலஸ் அழகப்பெருமவுக்கே பெரும்பான்மையானவர்கள் ஆதரவளிக்க தீர்மானித்திருந்தனர். 90 வீதமானவர்கள் அந்தத் தீர்மானித்திலேயே இருந்தனர். இதன்படியே நான் வாக்களித்தேன்.
இதற்கு முன்னர் ஜனாதிபதிகள் பலரின் சிம்மாசன உரைகளை கேட்டுள்ளோம். அவர்கள் சட்டப்பூர்வமாக தெரிவாகிய ஜனாதிபதிகளாகும். ஆனால் அண்மையில் வேறு முறையில் அரசியலமைப்பு ரீதியில் வந்தததாக கூறப்படும் ஜனாதிபதியின் உரையை கேட்டோம். அவர் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சர்வதேசத்திற்கு சிறந்த செய்தியொன்றை கூற முடியும். அமைச்சரவையை வரையறுத்து பிரதான பதவிகளை மற்றைய இனத்தவர்களிடையே பகிர்ந்துகொள்ளலாம்.
சிங்களவர் ஒருவர் ஜனாதிபதியாக இருந்தால் தமிழர் ஒருவரை பிரதமராக்கலாம். ஏன் முடியாது. அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த பராக் ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக முடியுமென்றால் இங்கே தமிழ் பேசும் ஒருவர் பிரதமராகினால் என்ன? முஸ்லிம் ஒருவர் இங்கே சபாநாயராகினால் என்ன? இதன்மூலம் இனவாத மனநிலையில் இருந்து விடுபட்டுள்ளோம் என்று சர்வதேசத்திற்கு கூற முடியுமாக இருக்கும்.
புரட்சிகரமான இனவாதம் அற்ற போராட்டக்காரர்கள் கேட்ட வரையறுக்கப்பட்ட அமைச்சரவையை அமையுங்கள். இதனை செய்து சிறந்த செய்தியை சர்வதேசத்திற்கு காட்டுங்கள். அதனை தொடர்ந்து அனைத்து எம்.பிக்களையும் உள்ளடக்கி துறைசார் மேற்பார்வை குழுக்களை அமையுங்கள் என்றார்.
………………………..
இவருடைய இந்த கருத்தை சமூகவலைத்தளவாசிகள் பலரும் கூட வரவேற்றுவரும் போதும்கூட இனவாதமற்ற மனோநிலைமாற்றம் என்பது புரிதலூடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியது. ஐ.நா அமர்வு நெருங்கிவரும் நிலையில் சர்வதேசத்தை சமாதானப்படுத்துங்கள் என்ற தொனியில் டிலான் பெரேரா கூறியுள்ள இந்த கருத்து கூட ஒருவித சுயநல மனோநிலைசார்ந்தததே தவிர கொண்டாடக்கூடிய கருத்து அல்ல.