16

16

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் புதிய ஏற்பாடு !

இலங்கையில் வாழ்கின்ற அநாதை, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு, உடல் மற்றும் உள ரீதியான நல்விருத்தி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் சிறுவர் அபிவிருத்திச் சேவைகள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டிகள் மற்றும் முதன்மைச் சட்டங்கள் மாகாண மட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டியொன்று இல்லை.

அதனால், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துறைசார்ந்த அனைத்துத் தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த நிபுணர்களின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த ´இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி மற்றும் குறைந்தபட்ச தரநியமங்கள்´ இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“இலங்கையில் மஹிந்தவின் பெயரில் ஒரு சுடுகாட்டை தவிர மிகுதி எல்லாமே உள்ளன” – மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி

“ராஜபக்ஷக்களின் பெயரிலுள்ள சகல நிறு வனங்களுக்கும் நாட்டின் பெயர் சூட்டப்படல் அவசியம்.” என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்தார்.

மேலும் தேசிய அரசாங்கம்தான், நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமென 2021 மார்ச் 21 இல் கூறியதற்காகவே ராஜபக்ஷக்கள் தன்னைக் கைது செய்ததாகவும், தனது எதிர்வுகூறல்கள் அரசியலில் பிழைத்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,

“நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளில் பிரதானமானவற்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. எரிபொருள், எரிவாயு, இன்னும் பால்மாக்களுக்கு நிலவிய நெருக்கடியும் தட்டுப்பாடும் இப்போது இல்லை. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி ஒரு மாதத்துக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. விலைகள் குறையும் நிலைமைகளும் தென்படுகின்றன.

எம்.பியாகத் தெரிவாகியும் எட்டு மாதங்களின் பின்னரே ரணில் பாராளுமன்றம் வந்தார். பிரதமர் பதவிக்கு ரணிலே பொருத்தமானவரென அப்போதே சொல்லிவிட்டேன். அதுவும் நடந்து, அவர் ஜனாதிபதியாகியும்விட்டார். நெருக்கடியை தீர்ப்பதற்கான 52 மில்லியன் டொலரைப் பெறுவது அவ்வளவு கடினமில்லை என்பதையும் நானே கட்டியங்கூறினேன். இப்போது இவையே நடந்து வருகின்றன.

ராஜபக்ஷக்கள் சூறையாடிய நமது நாட்டின் சொத்துக்களை மீட்டெடுக்கும் பொருளாதார வியூகம் ஜனாதிபதி ரணிலிடமே உள்ளது. கப்பல் வராத துறைமுகம், விமானம் இறங்க முடியாத விமான நிலையம், விளையாட இயலாத மைதானம் என்பவற்றை அமைத்து, தமது வங்கிக் கணக்குகளை பெருக்கிக்கொண்டனர் ராஜபக்ஷக்கள்.

மஹிந்தவின் பெயரில் ஒரு சுடுகாடுதான் இல்லை. ஏனையவை அவரின் பேரிலேயே உள்ளன. 99 வருடங்கள் குத்தகைக்கு வழங்கி பெற்றுக்கொண்ட “கொமிஷன்” கடன்கள்தான் நாட்டைக் குட்டிச்சுவராக்கியுள்ளது. இதிலிருந்து மீள்வதற்கு திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். விற்றல், வாங்கல் நடவடிக்கைகள் உட்பட துறைமுகச் செயற்பாடுகள் சகலதும் டொலரில் இடம்பெற வேண்டும். மேலும் ,ராஜபக்ஷக்களின் பெயரிலுள்ள சகல நிறு வனங்களுக்கும் நாட்டின் பெயர் சூட்டப்படல் அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.

ஒருவாரத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று – இலங்கையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா !

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 68 ஆயிரத்து  141 ஆக அதிகரித்துள்ளதோடு  கடந்த ஒரு வார காலப்பகுதியில் 36 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8 மில்லியன் பேர் மாத்திரமே இதுவரை பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைநீக்கத்தின் பின்னணியில் ரணிலின் அரசியல் சூழ்ச்சி – பொன்சேகா விசனம் !

“ஜெனிவா மாநாட்டைச் சமாளிக்கவே புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.”  என முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் தொடாந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“பொதுஜன பெரமுனவினரை ஏமாற்றி பிரதமர் பதவியை சுவீகரித்து பின்னர் ஜனாதிபதியாகிய ரணில், முழு நாடாளுமன்றத்தையும் ஏமாற்றி, நாட்டு மக்களையும் முட்டாளாக்கி இன்று சர்வதேசத்தையும் முட்டாளாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தாமல், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் தடைப்பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், அடையாளம் காணப்பட்ட தனிநபர்களும் சேர்க்கப்பட்டனர். ஆனால் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவும், ஜெனிவா மாநாட்டைச் சமாளிக்கவுமே ரணில் விக்ரமசிங்க தடை நீக்கம் என்ற இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஏமாற்று நாடகத்துக்கு சர்வதேசமும் பலியாகப்போகின்றது.

இந்தநிலையில் யார் மூலம் காய்களை நகர்த்தி சர்வதேசத்தை ஏமாற்ற முடியுமோ அந்த அமைப்புக்களையும் குறிப்பிட்ட நபர்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் தலைவர் என்ற ரீதியிலும் இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கும், நாட்டு மக்களுக்கும் விரிவான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

14 வயது மாணவனை தாக்கிய நல்லூர் பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல் !

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் நல்லூர் விநாயகர் வீதியைச் சேர்ந்த 14 வயது மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.

தான் சொன்ன பணியைச் செய்யவில்லை என்று தெரிவித்த அதிபர், மாணவனை கடுமையாகத் தாக்கினார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, பொலிஸ் புலனாய்வுப் பிரிவும் இந்தச் சம்பவம் தொடர்பில் அறிக்கையிட்டுள்ளது.

இதையடுத்து மிருகவதைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அதிபருக்கு பிணை வழங்க மறுத்த மன்று 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது – வெளியாகியுள்ள அறிவிப்பு !

காலி முகத்திடலில் இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும் காலங்களில் அங்கு இருக்காது எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

காலிமுகத் திடலை நான்கு மாதங்களுக்கு மேல் போராட்டகாரர்கள் பயன்படுத்தியிருந்தனர். எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

75 வது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்படும் !

அடுத்த வருடம் நடைபெற உள்ள இலங்கையின் 75 வது சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் சுதந்திர தின விழாவில் தமிழில் கீதம் பாடப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2019 வரையிலான ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ போது உத்தியோகபூர்வ விழாக்களில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 இல் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் சுதந்திர தின விழாவில் தமிழில் கீதம் பாடப்படுமா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

2015 முதல் 2019 வரையிலான ‘நல்லாட்சி அரசாங்கத்தின்’ போது உத்தியோகபூர்வ விழாக்களில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 இல் ஆட்சிக்கு வந்த பின்னர் தேசிய கீதத்திலிருந்து தமிழ் பதிப்பு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.