17

17

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளர் – மாணவன் – மாணவி மூவர் தற்கொலைக்கு முயற்சி !

தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ் பல்கலைக்கழக துறை ஒன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்பொன்றிற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்தார். அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது. அதனால் , அவரது துறைத்தலைவர் பதவி மற்றுமொரு பேராசிரியருக்கு வழங்கப்பட இருந்தது.

இந்நிலையில் துறைத்தலைவராக இருந்த பேராசிரியர் தனது தனிப்பட்ட காரணத்தால் வெளிநாடு சென்று கற்கும் முடிவை இடை நிறுத்தி தனது துறைத்தலைவர் பதவியில் நீடித்தார். அதனால் புதிதாக துறைத்தலைவராக நியமனம் பெறவிருந்த பேராசியர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். அதன் காரணமாக கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்த பேராசிரியர் , நேற்றைய தினம் திங்கட்கிழமை தனக்கு நெருக்கமானவர்களிடம் தனக்கு துறைத்தலைவர் பதவி கிடைக்காவிடின் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் தீக்குளித்து உயிரை மாய்ப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த குறித்த பேராசியர் துணைவேந்தர் முன்னிலையில் தனது உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு , அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

 

இதேவேளை பகிடிவதை புரிந்தவர்கள் எனும் சந்தேகத்தில் தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 18 மாணவர்களின் படங்களை விரிவுரையில் பேராசிரியர் ஒருவர் காண்பித்து , ” இவர்கள் தான் பல்கலைக்கழக மாபியாக்கள் ” என கூறியமையால் மனஉளைச்சலுக்கு உள்ளான மாணவன் ஒருவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன் மற்றுமொரு பல்கலைக் கழக மாணவி ஒருவர் யாழ்.புறநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.