18

18

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – 47வயது நபர் கைது !

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் சென்று பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, தலவத்துகொட சாலிந்த திசாநாயக்க மாவத்தையில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு சந்தேகநபரிடம் இருந்து 122 கிராம் 710 மில்லிகிராம் கேரள கஞ்சாவும், இலத்திரனியல் தராசும் மற்றும் 13,500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காரைதீவில் 3வயது பிள்ளையின் முன்னால் தாய் மீது பாலியல் பலாத்காரம் – முறையான நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸார் !

தனது 3 வயது குழந்தைக்கு முன்னால் இளம் தாய் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது.

கடந்த 3.07.2022 அன்று 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கணவன் வீட்டில் இல்லாத வேளை அவரது 3 வயது பிள்ளை பார்த்து இருந்த சந்தர்ப்பத்தில் அயலவர் ஒருவரினால் கத்தி மூலம் அச்சுறுத்தபட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் சுமார் 1 வயது மற்றும் 3 வயது பெண் குழந்தைகளின் தாய் என்பதுடன் மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் கணவன் இல்லாத நிலையில் குறித்த பெண் சம்பவ தினமன்று தங்கி இருந்ததுடன் இரவு 7 மணியளவில் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவரினால் 3 வயதான தனது மகள் பார்த்து கொண்டிருந்த வேளை கத்தி மூலம் அச்சுறுத்தபட்டு வலுக்கட்டாயமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளானதாகவும் அபயக்குரல் எழுப்பியும் எவரும் தன்னை காப்பாற்றவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதுடன் தன்னை துஸ்பிரயோகப்படுத்திய நபர் 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதிலும் குறித்த பெண் வழங்கிய முறைப்பாட்டினை பெற்றுக்கொண்ட காரைதீவு பொலிஸ் நிலையம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதியான நடவடிக்கை எடுக்க தவறி உள்ளதுடன் அப்பெண் தனக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று தஞ்சமடைந்துள்ளார்.

அத்துடன் வலுக்கட்டாயமாக தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரிடம் இருந்து பாதுகாப்பு பெற்று தருவதுடன் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் எதிராக கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் இளம் பெண் முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முறைப்பாட்டிற்கமைய காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவினால் சம்பவம் தொடர்பாக விசாரணை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த பெண் அண்மையில் வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றலாகி வாழ்ந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இரண்டு சிறுமிகள் கடத்தப்பட்டு வன்புணர்வு – ஐந்து பேருக்கு விளக்கமறியல்!

17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாவது,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி வந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

எனினும் நேற்று முன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர் நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்போது சிறுமி ஒருவர் சாதுரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்திலேயே திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் – மன்னாரில் சம்பவம்!

மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் இன்று (18) காலை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக காணப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஆகிய இருவரும் திருடி உள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று(18) காலை விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் காவலாளி தங்குமிட பகுதியை சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது திருடப்பட்ட சான்றுப் பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) ஆகியவற்றை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் – ராஜபக்ஷக்களை துரத்துவோம் – மாணவர்கள் போராட்டத்தில் 12 பேர் கைது !

எந்த நேரத்திலும் கோட்டாபாய வருவார் – அலி சப்ரி !

பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அலி சப்ரி புதனன்று CNN க்கு வழங்கிய செய்தியில் , முன்னாள் ஜனாதிபதியின் நாடு திரும்புவது பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு “இராஜதந்திர வழிகள் மூலம்” கூறப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் நாடு திரும்புவதில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் இலங்கையின் குடிமகன், அவர் விரும்பியபடி நாட்டுக்கு வரம் அல்லது போகலாம் என அலி சப்ரி கூறியுள்ளார்.

சேதாரங்களுக்கான நட்டஈடு போராட்டக்காரர்களிடம் இருந்து அறவிடப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் தங்கியிருந்த இடத்திற்கு ஏற்பட்ட சேதத்துக்கான கட்டணம் அந்தச் செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.

குறித்த பகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் ஊடாக அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.

பிரதேசத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்து, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

நட்டஈடு பணம் அறவிடப்படாவிட்டால் எதிர்காலத்தில் அமைச்சு இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.