22

22

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு – கைதுக்கும் வாய்ப்பு !

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

 

இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை – ஜெனீவா கூட்டத்தொடரை மையப்படுத்தி நகரும் ரணில் அரசு !

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவற்றுள் அரசியல் கைதிகள் விவகாரமும் ஒன்று. இதனைக் கருத்தில்கொண்டு அரசு செயற்படும். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் என்னுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். அதற்கமைய முதல் கட்டமாக குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன் பின் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க அதிபர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.

………………..

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் ரணில் தலைமையிலான அரசு தமிழர்களை ஆதரித்து நடத்துவது போன்றதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே இந்த அரசியல்கைதிகளின் விடுதலை என்ற நாடகத்தை நடாத்துவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது புதுமையான விடயமும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஜெனீவா கூட்டத்தொடர் தொடங்கும் போது தமிழர்கள் தொடர்பில் தளர்வாக நடந்துகொள்வது போல ஒரு விம்பத்தை இலங்கை அரசு ஏற்படுத்தும். மேலும் இதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டதாக நம்பப்படும். ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைய அரசாங்கம் தனது இனவாத முகமூடியை மீண்டும் அணிந்து கொள்ளும். இது தான் நடந்த ஒரு தசாப்த காலமான இலங்கையின் நடைமுறை.

“ராஜபக்சக்கள் மீண்டும் இலங்கை அரசியலினுள்.”- தடுக்க வேண்டும் என்கிறார் சம்பிக்க ரணவக்க !

“சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது.” என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக செயற்படும் நிலையில் , இந்த வங்குரோத்து நிலைமையால் தங்களின் வாழ்க்கை அழிவடைந்தமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கிய மக்களை தண்டிப்பதை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்துக்கு தற்போது சவாலாக இருப்பது மக்களின் நம்பிக்கையை வெற்றிகொள்வதாகும்.

அதனால்  அரசாங்கம் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். யாராவது சட்டத்தை மீறி செயற்படுவதாக இருந்தால், அதளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாங்கள் எதிர்ப்பு இல்லை. அனைவருக்கும் ஒரேமாதிரி சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்.

அத்துடன் நாட்டை அதலபாதாளத்துக்கு இட்டுச்செல்ல காரணமாக இருந்த ராஜபக்ஷ்வினர் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்து செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்கள் மீண்டும் தங்களின் ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றனர்.

அதனால் எதிர்காலத்தில் அமைக்க இருக்கும் தேசிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தில் ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்ஷ்வினர் இல்லாமல் அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவ்வாறு அமையாவிட்டால் இதுதொடர்பில் அடிப்படை நம்பிக்கை இல்லாமல்போகும்.

மேலும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர்கள் மற்றும் நாட்டை வங்குராேத்து அடையச்செய்ய  காரணமான இருந்த  அரசியல்வாதிகள் இல்லாத நாட்டையே . அவ்வாறு இல்லாவிட்டால், அரசாங்கம் எந்தவகையான அடக்கு முறைகளை கொண்டுசென்றாலும் மக்கள் போராட்டத்துக்கு செல்வதை தடுக்க முடியாது என்றார்

கோட்டாபய ராஜபக்சவினாலேயே நாட்டுக்கு இந்த நிலை – ஜி.எல். பீரிஸ் அந்தர் பல்டி !

“கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்ததாலேயே நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட முடிவுகளை எடுத்தார். குழுவாக முடிவு எடுக்கப்படவில்லை.அதில் உர விவகாரம் ஒன்று, விஷயம் தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை. இவ்வாறான அவரின் முடிவுகள் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாதது இதேபோன்ற பிரச்சினையாகும்.

இத்தகைய எடுத்துக்காட்டுகள் முடிவற்றவை மற்றும் எண்ணற்றவை. ஆனால் நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரம் தேவைப்பட்டது. அதைத்தான் டலஸ் தலைமையில் செய்ய முயற்சித்தோம். கடந்த சில வருடங்களில் அமைச்சரவை முறைமையும் விலக்கப்பட்டிருந்தது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கட்சி விவாதம் மூலம் தீர்மானம் எடுக்கவில்லை. பொதுச் செயலாளரால் பதில் சொல்ல முடியவில்லை. கட்சியில் உள்ள ஒருவரின் தனிப்பட்ட கருத்தின்படி அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கட்சி அப்படி நடந்து கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியிலிருந்த கல்வி அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் என பல பதவிகளை வகித்தவர் ஜீ.எல். பீறிஸ். கோட்டாபாய ராஜபக்ச எடுத்த முடிவுகளுக்கு பாராளுமன்றில் ஆதரவு வழங்கி வந்த பீறிஸ் தற்போது கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகியதும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். கோட்டாபாயவின் ஆட்சியின் தோல்வியில் அமைச்சர்களாக பொறுப்பேற்ற ஜீ.எல்பீரிஸ் போன்றோரும் பதில் சொல்ல வேண்டியவர்களே !

25 வருடங்களுக்கு மேல் பாதை சீர் செய்யப்படாத மண்பாதை – புனரமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டம் !

பொகவந்தலாவ சிங்காரவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி தோட்ட மக்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் நேற்றுமுன்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சிங்காரவத்தை தோட்டத்தின் கிராம அபிவிருத்தி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணித்தியாலயம் இடம்பெற்றது. நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட சிங்காரவத்தை தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த 1800க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொகவந்தலாவ நகரத்திலிருந்து இத்தோட்டத்திற்கு செல்லும் ஒன்பது கிலோமீற்றர் கொண்ட பிரதான வீதி குன்றும், குழியுமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படுகிறது.
இப்பாதையை நோயாளர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியோர்கள் என அன்றாடம் தொழிலுக்கு செல்பவர்களும் பயன்படுத்துகின்றனர்.

இதேவேளை ரொக்கில், சிங்காரத்தை, வானக்காடு, மோரார் மேற்கு பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்களும் இப்பாதையை பயன்படுகின்றனர் . சுமார் 25 வருடங்களுக்கு மேல் பாதை சீர் செய்யாத காரணத்தினால் மண் பாதையாகவே காணப்படுகிறது.

புனரமைப்பு செய்து தருவதாக அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டிய போதிலும் பாதையை புனரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் இத்தோட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி பிரதான வீதியில் எதிர்ப்பினை முன்னெடுத்தனர்.