September

September

தனியார் வைத்தியசாலை வைத்தியரின் அலட்சியம் – திருமணமாகி 17 நாட்களில் இறந்த பெண் !

வைத்தியரின் அலட்சியத்தால் உயிரிழந்த யுவதி ஒருவர் தொடர்பில் ஜா-எல தெலத்துர பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.

ஜா-அல தெலத்துரயை வசிப்பிடமாகக் கொண்ட புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற யுவதி கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி கனவுகளுடன் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஆனால், திருமணமாகி 17 நாட்களுக்குப் பிறகு, சிறு நோய் நிலமை காரணமாக வைத்தியசாலைக்குச் அழைத்துச் செல்லப்பட்ட ஹர்ஷனி, எதிர்பாராதவிதமாக தனது வாழ்க்கையிலிருந்து விடைபெற நேரிட்டது.

ஹர்ஷனியை பரிசோதித்த வைத்தியர், ஹர்ஷனியின் பித்தப்பையின் ஒரு பக்கத்தில் கல் இருப்பதாகவும், அவருக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த 31 ஆம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், சத்திர சிகிச்சையின் பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த அவர், ராகம போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 நாட்களாக ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 25 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஹர்சினியின் பிறந்த நாளான நேற்றைய தினம் அவரது சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் அலட்சியமாக சத்திர சிகிச்சை செய்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஹர்ஷனியின் மரணத்திற்குப் பிறகு சத்திர சிகிச்சை செய்த வைத்தியர் குறித்த சர்ச்சைக்குரிய செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை ஒழுங்குமுறை சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரியவிடம் நாம் வினவியபோது, ​​குறித்த தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் !

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இந்த கடுமையான கட்டுப்பாடுகள், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிக்கும் உரிமையை முடக்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சட்டங்கள் நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைப்பதையும் உறுதிப்படுத்துகிறது என அதன் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய ஒழுங்குமுறை ஜனாதிபதியின் அவநம்பிக்கையான முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக் போராடும் ஒரு நாடு மக்களின் குரல்களைக் கேட்க வேண்டுமே தவிர அவர்களை சிறையில் தள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஐ.சி.சி.ஆர்.பி.யின் கீழ் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை மதிக்கவும் பாதுகாக்கவும் இலங்கைக்கு கடமைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிமைகள் தொடர்பில், அரசாங்கத்தின் தொடர்ச்சியான மீறப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் என்பவற்றை தடுப்பதற்கு, வலுவான தீர்மானம் அவசியம் என்றும் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கை மக்களின், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நிறைவேற்றுவதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ள உக்ரைனின் முக்கிய நகர மக்கள் !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தலைநகர் கிவ், கார் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. துறைமுக நகரமான மரியு போலை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. அதேபோல் சில நகரங்களையும் ரஷ்யா தன்வசப்படுத்தியது.

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனின் லுகான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைக்க திட்டமிட்ட ரஷ்யா, அதற்காக அப்பகுதிகளில் பொது வாக்கெடுப்பை நடத்தியது. நடமாடும் வாக்குப்பதிவு மையத்துடன் வீடு வீடாக சென்று வாக்கெடுப்பு நடத்தினர். நேற்று வரை 5 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டன. இந்தநிலையில் உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பில் வெற்றி கிடைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு லுகான்ஸ்க் பகுதியில் 98.42 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைப்புக்கு ஆதரவாக வாக்களித்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜபோரி ஜியாவில் 93.11 சதவீதமும், தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சனில் 87.05 சதவீதமும், டொனெட்ஸ்கில் 99.23 சதவீதமும், ரஷ்யாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவிடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புடின் நாளை மறுநாள் (30-ந்திகதி) அறிவித்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து உளவுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ரஷ்ய பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதிபர் புடின் 30-ந்திகதி உரையாற்றுகிறார். அப்போது உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புடின் வெளியிட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

இந்த பொது வாக்கெடுப்பு ஒரு ஏமாற்று வேலை என்று உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ரஷியா கைப்பற்றிய பகுதிகளில் உள்ள மக்களை உக்ரைன் பாதுகாக்கும். இந்த வாக்கெடுப்புகள் ஒரு கேலிக்கூத்தாக உள்ளது. வாக்கெடுப்புக்கு பிறகு ரஷியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஏதும் இல்லை” என்றார்.

சுற்றுலாத் துறையை உருவாக்க இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது – கிறிஸ்டியன் ஸ்கூக்

நிலையான சுற்றுலாத் துறையை உருவாக்க இளைஞர்களின் பங்கை நிராகரிக்க முடியாது என UNICEF மற்றும் UN வதிவிடப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் இன்று (27) இடம்பெற்ற பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இளைஞர்களைக் கருத்தில் கொள்ளாமல் திட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்குவது பயனற்ற விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வேலனை சாட்டி சுற்றுலா கடற்கரையோர தூய்மைபடுத்தல் செயற்திட்டம் !

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம் எனும் தொனிப்பொருளில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வேலனை சாட்டி சுற்றுலா கடற்கரையோர தூய்மைபடுத்தல் செயற்திட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது வடமாகாண சுற்றுலா வழிகாட்டிகள்,வடமாகாண சுற்றுலா வழிகாட்டி பயிலுனர்கள்,யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியில் விருந்தோம்பல் கற்கை மாணவர்கள்,யாழ்ப்பாணம் ரில்ககோ விடுதியினர்,ஞானம் எடியூகேசன் ரெஸ்ட்,நல்லூர் லயன்ஸ் கழகத்தினர் இணைந்து குறித்த தூய்மை பணியினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீ வைத்த சம்பவம் – 16 மாணவர்கள் கைது !

பதுளை – எல்ல பிரதேசத்தின் ‘ரொக்’ என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பதுளை பகுதியிலுள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேரே நேற்று (26) மாலை குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பதுளையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போதே, வனத்துக்கு தீ வைத்துள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும் போது கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தேவைதானா..?  – மல்கம் ரஞ்சித்

நாட்டு மக்களின் பொக்கட்டுக்கள் வெறுமையாக உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தேவைதானா..?  என கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மிகமோசமாக  பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கு பதில் அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக பெருமளவு பணத்தை செலவிட தயாராகின்றனர்.

கிறிஸ்மஸ் வருகின்றது சுற்றுலாத்துறைக்குபொறுப்பான அமைச்சர் உட்பட  சுற்றுலாத்துறையின் முக்கிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களிற்காக கொழும்பை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிடுகின்றனர். இதன் மூலம் என்ன பயன்ஏற்படப்போகின்றது..? பொக்கட்கள் காலியாகவுள்ளன. இலங்கை உலகின் ஒவ்வொரு நாட்டிடமும்  உதவி கேட்கும் நாடாக மாறியுள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் தலைவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றனர். ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகின்றனர். இதுதான் அவர்களின் பொறுப்புணர்வா..? ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்.  போதிய அளவு உணவும் ஊட்டச்சத்தும் இல்லாததால் மாணவர்கள் பாடசாலைகளில் நோய்வாய்படுகின்றனர். ஆனால் தலைவர்கள் மக்களின் துயரங்கள் நெருக்கடிகளை பார்க்காதவர்கள் போல நடந்துகொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை – பாடசாலைகளில் மயங்கி விழும் மாணவர்கள் !

இலங்கையில் மருந்து மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மருந்துகள் பற்றாக்குறையை மருத்துவர்கள் ஏற்கனவே உணரத் தொடங்கியுள்ளனர், அதே நேரத்தில் வீடுகளில் குழந்தைகளுக்கு போதுமான உணவை வழங்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

போதியளவு உணவு உண்ணாத காரணத்தினால் பாடசாலைகளில் பிள்ளைகள் மயக்கம் அடைய ஆரம்பித்துள்ளதாக சில பாடசாலை அதிபர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டன.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணை இடம்பெற்ற போதே, பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 ஆவது சரத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரப்பிலான உயர் அதிகாரிகளால், மூன்று பிரதிவாதிகளிடமிருந்து தனித்தனியாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் விசாரணைகளின் பின்னர் இன்று நிராகரிக்கப்பட்டது.

வழக்கின் முதலாம் பிரதிவாதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் நிராகரித்ததுடன், அதற்கான  கட்டளையை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு இன்று அனுப்பியிருந்தார்.

ஏனைய இரண்டு பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று நிராகரிக்கப்பட்டன.

இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை தாம் வழங்கவில்லை என வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, உயர் பொலிஸ் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் LTTE அமைப்புடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பிரதிவாதிகளும் கடந்த 12 வருடங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை தொடர்பில் செய்யப்பட்ட நால்வருக்கு பிணை !

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M.அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நான்கு பிரதிவாதிகளும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை தவிர, பிரதிவாதிகளுக்கு வௌிநாடுகளுக்கு செல்ல தடையுத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரதிவாதிகளின் கடவுச்சீட்டை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கடவுச்சீட்டு இல்லையெனின் அதற்கான சத்தியக்கடதாசியை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

அதனை தவிர பிரதிவாதிகளின் வதிவிடத்தை உறுதி செய்து, கிராம உத்தியோகத்தரிடம் பெறப்பட்ட சான்றுப்பத்திரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா என்றழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு எதிரான சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.