September

September

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி – ஆரம்பக்கல்விக்கூடங்களை நாடாத மாணவர்கள் !

ஆரம்பபாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை இழந்துவிட்டனர் அவர்களின் வருமானம் குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ள இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத்  பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நகரங்களை விட கிராமங்களில் இந்த நிலை அதிகம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆரம்பபாடசாலைகளில் இணைந்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது 20மாணவர்கள் கல்விகற்ற வகுப்புகளில் தற்போது 15 மாணவர்களே கல்விபயில்கின்றனர் இதற்கு மேலாக கட்டணம் செலுத்த முடியாததால் சில மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டனர் என அவர்தெரிவித்துள்ளார்.

ஆரம்பபாடசாலை ஆசிரியர்கள் குறிப்பிட்ட கட்டணங்களை கேட்காத போதிலும் ஆசிரியர்களை எதிர்கொள்வதற்கான தயக்கம் காரணமாக பெற்றோர் ஆரம்பபாடசாலை மாணவர்களை பாடசாலைகளிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளஇலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இந்த நிலை தொடர்ந்தால் இலங்கையின் கல்வி துறை பாதிப்புகளை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய 10 பேர் கைது – யாழ்ப்பாணத்தில் சம்பவம் !

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு சென்ற காவல்துறையினர் போதையில் இருந்த 10 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இந்திய இராணுவம் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஐ.நாவில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் !

இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலும்  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் காட்டி The Island  பத்திரிகை இது தொட்பாக நேற்று (21) செய்தி வௌியிட்டுள்ளது.

மோதலின் போது இடம்பெற்ற சம்பவங்கள்  உள்ளிட்ட  அனைத்து சர்வதேச குற்றங்களுக்கும் தீர்வு காண இலங்கை மீது வலுவான தீர்மானத்தை கோருவதாக மீனாக்ஷி கங்குலி தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய படையினர் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருந்த போது இடம்பெற்ற முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  1987 ஜூலை முதல் 1990  மார்ச் வரையான காலப்பகுதியில்  இந்திய இராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டால்,   இந்தியாவின் பொறுப்புக்கூறல் எவ்வாறு அமையும் என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே  மீனாக்ஷி கங்குலி இந்த கருத்துகளை வௌியிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, UN Advocacy, FORUM-ASIA, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) சார்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்தராஜபக்சவுக்கான மலசலகூடத்துக்காக மட்டுமே 600 கோடி ரூபா – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

“ தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”.என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நேற்றைய(22.09.2022)  நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவின் மைத்துனர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பாளராக இருந்த போது 50 இலட்சம் ரூபாய் வேதனம் வழங்கப்பட்டது. இதற்கு பினனர் வந்த ஒருவருக்கு 100 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து இளைப்பாரிய இராணுவ அதிகாரி ஒருவர் செயற்பாட்டு பணிப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவாக செலுத்தப்பட்டது.

நாமல் ராஜபக்சவின் காரியாலயத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் சிறிலங்கன் எயார்லைன்சில் பணிப்பெண்ணாகவும், பணியாற்றி வருமானங்களை திரட்டி வந்தார்.

அதேநேரம், கடந்த 2010 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்சவிற்கு சிறிலங்கன் எயார்லைன்சில் மலசலகூடம் ஒன்றை நிர்மாணிக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அது நல்லாட்சி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் செலவில் ஒரு மலசலகூடம் நிர்மாணிக்கப்படுமாக இருந்தால் அதில் தங்கத்தினாலான உதிரிப்பாகங்களே பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

நாட்டில் தொடர்ந்தும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களுக்கு மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயந்து செயற்பட்டனர். மோசடிகளுக்கு எதிராக போராட்டங்கள் மூலமே தீர்வுகளை காணமுடியும். கசிப்பு விற்பனை செய்தாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் பலர் பொது மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில், போராட்டம் என்ற பெயர் மாற்றப்பட்டு நிராயுதபானியான விடுதலை என பெயரிட வேண்டும். அத்துடன், இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே நாட்டில் மோசடியற்ற நிலையை கொண்டுவர முடியும்.

தேசிய அரசாங்கம் என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அவசரமாக கொண்டுவரகூடிய விடயமல்ல. அது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டியது. எனினும் தேசிய சபை என தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஒரு நாடகமாகவே அமையும்”, எனக் குறிப்பிட்டார்.

மருத்துவ உபகரண பற்றாக்குறையால் புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து – சபையில் சஜித்பிரேமதாச !

சுகாதாரத் துறைக்குத் தேவையானளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை போதியளவு வழங்கும் விடயத்தில் இன்று அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும், அதிலும்,புற்று நோயாளர்களின் சிகிச்சைக்கு அத்தியாவசியமான கதிரியக்க சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பராமரிப்புப் பிரச்சினைகளினால் அதிகளவான புற்றுநோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று(22) பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 மூலம் கேள்விய எழுப்பிய வன்னமே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறப்பான சுகாதார சேவையை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் சுகாதார துறைக்கு போதுமான மருத்துவ உபகரணங்களை அரசாங்கத்தினால் விநியோகிக்க முடியாதுள்ளது.

அத்துடன் புற்றுநோயாளர்களுக்கு தேவையான கதிர்வீச்சு உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளால் அந்த நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அரச சுகாதார துறையில் ஆளணி முகாமைத்துவமும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. இதன்படி சில விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பதில்களை எதிர்பார்க்கின்றேன்.

புற்றுநோய்க்காக பயன்படுத்தும் எலக்டா கம்பக்ட், எலக்டா செலர்ஜிக் பிளட்போர்ம், எலக்டா செலர்ஜி கதிர்வீச்சு உபகரணங்களை சுகாதார அமைச்சுக்கு பெற்றுக்கொள்வதற்காக 2013 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதா? அந்த ஒப்பந்தத்தை சபையில் முன்வைக்க முடியுமா? அந்த உடன்படிக்கை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விநியோக தரப்பினருடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் குறைந்த விலையில் அந்த உபகரணங்களை வழங்குவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவறான உபகரணங்களை கொண்டு வந்து மோசடிகளை செய்து, தவறுகளை சரி செய்வதற்காக புதிதாக அந்த நிறுவனத்திடம் நஷ்ட ஈடாக மறுசீரமைப்பு உத்தரவாதத்தை பெற்றுள்ளனர். அந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஊழலை சீர் செய்ய எடுத்த நடவடிக்கை இப்போது செயற்படுத்தப்படுகின்றதா?

தரமான உபகரணங்கள் இல்லாமையினாலும் போதுமான கதிர்வீச்சு உபகரணங்கள் இல்லாமையினாலும் வருடாந்தம் காப்பற்றாக்கூடிய ஐயாயிரத்திற்கும் அதிகமான புற்றுநோயாளர்கள் உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனை அரசாங்கம் அறிந்துள்ளதா? அப்படியாயின் புதிய உபகரணங்களை கொள்வனவு செய்யவும், அதற்கான கட்டிடத்திற்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுமா? என்றார்.

 

யாழ். பிரபல பாடசாலையில் போதைப்பொருள் பாவித்து மயங்கி விழுந்த மாணவர்கள் – சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் விசனம் !

யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்ததாகவும் பரிசோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தாகவும் யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.

எனினும், ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலைகளில் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதால் அது குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது மறைக்கின்றனர். இந்தச் செயல் கொலைக்குச் சமனானது. இனி இந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். ஏனெனில் நிலைமை மோசமாகிவிட்டது.

யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

பரிசோதனையின்போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தனர் என தெரியவந்தது. பின்னர் பாடசாலையின் நற்பெயரைக் கருத்தில்கொண்டு சில விடயங்கள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது. இந்த நிலைமை கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

“முடிந்தால் ஒரு விமானத்தையேனும் இந்தியாவில் இருந்து பலாலிக்கு கொண்டுவந்து காட்டுங்கள்.“ – கூட்டமைப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபால சவால் !

பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) வியாழக்கிழமை சிவில் விமான சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்

பலாலி விமான நிலையத்திற்கு  பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம். பலாலி விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம்.

விரைவில் அதனை  திறக்குமாறும் விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன. ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை.விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார்.

இதன்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் குறுக்கிட்டு இந்தியாவின் இந்திய எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இண்டிக்கா என்பன விமானத்தை கொண்டு வர தயாராகவே இருக்கின்றன. இதனால் யாரும் விமானத்தை கொண்டு வரவில்லை என்று கூற வேண்டாம்.  என்றார்.

மீண்டும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,

விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை. பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள். பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள். முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால் அந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.

30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை ஆரம்பித்தது திருகோணமலை துறைமுகம் !

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

நீங்கள் வாழும் சூழலில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி அலுவலகம்

வறுமை காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை  பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின் பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர்   ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.

அத்துடன், மாணவி வாழும்  பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன.

எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளதன் படி,

எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வுகாண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள்  மட்டத்தில்   ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில்  உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0114354647  மற்றும் 0114354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705/5707 ஆகிய நீட்டிப்பு  இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியான அளவுகோல்களைக் கொண்ட தரப்பினராக   05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி பயனாளிகளது குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக் கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட பெறாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையுள்ள குடும்பங்கள்  மற்றும் கடுமையான உணவுப் பஞ்சத்தில் இருக்கும் குடும்பங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ்  மாதாந்தம் 15,000 ரூபாவை   கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்க முடியும். அதற்கமைய முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 06 மாதங்களுக்கு உணவு வழங்கும்  திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுதவிர மாதந்தோறும்    10,000 ரூபா வீதம் 6 மாதங்கள் வரை  கொடுப்பனவு வழங்க அரசாங்கத்தினால்   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ளடங்காத மற்றும் தற்சமயம் உணவு கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்தில் உணவு வழங்க வாய்ப்பு உள்ளது.   கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் உணவு பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள  மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய குடும்பங்களுக்கு அரசாங்கம்  செயல்படுத்தி வரும்  பெற்றோர் பாதுகாவலர் திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள்  வழங்கப்படும்.

மேலும், உணவின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பாடசாலை ஆசிரியர்களும் சேகரித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப முடியும். அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விரும்புபவர்களும் இதில்  இணைந்து உதவி வழங்க முடியும்.

அதுமட்டுமின்றி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டங்களை  செயற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும்.

தமிழர் பகுதி ஆலயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசியல் தலையீடே காரணம் – பொலிஸார்

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்றையதினம் (22) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைவு பெற்றுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதோடு, குறித்த ஆலயத்தில் புதிய அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் குறித்த ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்றையதினம் குறித்த வழக்கானது வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கூறுகையில்,

வெடுக்கு நாறிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகம் அளித்திருந்தார்கள். சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக ஆஜராகியிருந்தார்கள். குறித்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸாரை விசாரணைக்குட்படுத்தப்பட்டது. அதில் பொலிஸ் சாஜனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.

அத்தோடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் குறித்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும் , இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை வருகின்ற 13.10.2022 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு எமது ஆலயங்களில் சில அரசியல் நடத்துவதே குறித்த பிரச்சினைக்கான காரணம். எமது ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும் அதற்கு எந்த தடையும் இல்லை அபிவிருத்தி பணிகளை செய்வதற்கே தடை செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பரப் பலகை இதையே கூறுகின்றது எனவும் கூறியிருந்தார்.