01

01

“ஜெனிவா பிரச்சினையில் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் உதவுவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம்.” – சஜித் பிரேமதாச

கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்துவைக்கப்போவதில்லை என்ற உறுதிமொழியை அரசாங்கம் நாட்டுக்கு அறிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (31) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தங்களின் அரசியல் உரிமை, பாதயாத்திரை உரிமையை நேற்று (நேற்று முன்தினம்) மேற்கொண்டிருந்தது.  இது இந்த நாட்டில் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உரிமையாகும். என்றாலும் நாட்டில் இன்று அடிப்படை உரிமைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர் அமைப்பினருக்கு மிகவும் மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் மேற்கொண்டார்கள். கண்ணீர் புகை அடித்தார்கள். இந்த நாட்டில் அடிப்படை உரிமையை மேற்கொள்ள முடியாதா என கேட்கின்றோம். 25பேர்  எந்த காரணமும் இல்லாமல் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் வீதியில் போராட்டம் மேற்கொண்வர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. வீதியில் போராட்டம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டிருக்கின்றதா? இவ்வாறு அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்துகொண்டு, எங்களை சர்வகட்சியில் இணைந்துகொள்ளுமாறு கேட்கின்றனர். எவ்வாறு முடியும்.? கைதுசெய்யப்பட்டுள்ள 25பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படுமா என்பதை பிரதமர் தெரிவிக்கவேண்டும்.

நாடு வீழ்ச்சியடைந்துள்ள நிலைமையில் சர்வகட்சி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அவ்வாறு இல்லாமல் அமைச்சுப்பதவிகளை எதிர்பார்த்து, அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தயாரில்லை. தற்போது ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சி பக்கம் வரும் காலமே உதயமாகி இருக்கின்றது. செப்டம்பர் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெற இருக்கின்றது.

இதன்போது எமது நாடு தொடர்பில் விவாதம் இடம்பெறும் என்பதை நாங்கள் மறந்துவிட கூடாது. எமது நாட்டை இக்கட்டான நிலைமைக்கு ஆக்குவதற்கு நாங்கள் தயார் இல்லை.

ஜெனிவா பிரச்சினையில் நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் உதவுவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம். ஆனால் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து, மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்ளும்போது எப்படி நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முடியும்? அதனால் அரசாங்கம் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு, நாடு தொடர்பில் சர்வதேசத்துக்கு பிழையான செய்தியை வழங்கவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

“ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள்.” – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பகீர் !

“ராஜபக்சக்ளை அரகலய விரட்டியடித்தது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

தி ஹிந்துவிற்கு அவர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

இலங்கையின் நிதிப் பேரழிவு இரண்டு ராஜபக்ச ஆட்சிகளின் ஊழலின் விளைவு. அவர்களை அரகலய விரட்டியடித்தது மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ராஜபக்சக்களை நம்பியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

தற்போது நாம் திவாலாகி விட்டோம் என்பது ராஜபக்சவின் குடும்பம் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் ஊழலால் மட்டுமே. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக பூர்வீக அதிகாரங்களில் உள்ளவர்கள் என அனைவரையும் அவர்கள் மோசடி செய்பவர்களாக மாற்றினர். ஊழல் உச்சத்தில் இருந்து, எல்லா இடங்களிலும் பரவியது.

எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள்? தேர்தலுக்குச் சென்றாலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே மாதிரியான மோசடியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை மாற்றுவதற்கான ஒரே வழி ஒரு சமூக-அரசியல் எழுச்சி, ஒரு புரட்சி.

அரகலய உண்மையில் சிலிர்ப்பானது மற்றும் ஆக்கப்பூர்வமானது என்னவெனில், அவர்களிடம் ஒரு இலக்கு மற்றும் முன்னோக்கு இருந்தது. அவர்கள் வெறுமனே ராஜபக்சக்களை விரட்டியடிக்க வேண்டும் என்று கூறவில்லை. நேர்மையான அதிகாரிகள், தெளிவான நிர்வாகத்தை நாங்கள் விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினர். அவர்கள் ஒரு 10- அம்ச திட்டத்தை வெளியிட்டனர், அந்த திட்டத்தின் இயல்பான போக்கு அற்புதமாக இருந்தது.

மேலும் சர்வதேச சமூகத்தை அடிப்படையாக கொண்ட கடினமான முடிவுகளை இலங்கை எடுக்கவேண்டிய நிலை காணப்படலாம். வெளிஉதவி குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்த நிலை காணப்படலாம். ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மகிழ்ச்சியடையாததால் இந்தியா விலகியிருந்து காத்திருந்திருக்க கூடிய நிலை காணப்பட்ட போதிலும் இந்தியா எங்களுற்கு உதவ முன்வந்தது உதவிகளை வழங்கியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

ராஜபக்சக்கள் மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக உள்ளன. ராஜபக்சக்கள் என்னை மிகவும் பயங்கரமான முறைகள் – மிகவும் இழிவான விதத்தில் துன்புறுத்தினார்கள் – எப்படியிருந்தாலும் இந்த விடயங்கள் எனது தனிப்பட்ட அரசியல் முன்னுரிமைகளை பாதிப்பதில்லை,அவர்கள் நாட்டிற்கு செய்த விடயங்களிற்காக நான் அவர்களை வெறுக்கின்றேன்.

இதன் காரணமாக அரகலயவால் அவர்களை அமைதியான முறையில் துரத்த முடிந்தமை குறித்து நான் நிம்மதியடைந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 9 ஆம் திகதி வன்முறை – குற்றவாளிகளை அடையாளம் காண குழு ஒன்றை நியமிக்குமாறு பரிந்துரை !

மே 9 ஆம் திகதி வன்முறைக்கு வழிவகுத்த சட்டத்தை மீறியமைக்கு காரணமான சட்ட அமுலாக்கப் பிரிவிற்குள் குற்றவாளிகளை அடையாளம் காண ஜனாதிபதியை குழுவொன்றை நியமிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மே 9 ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு எதிரே இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பான தனது கண்டுபிடிப்புகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்களின் பேச்சுக்களை பொலிஸாரால் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அன்றைய தினம் அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் அலரிமாளிகைக்குள் நுழைந்தனர்.

இந்த முக்கியமான தகவலைப் பெறாததற்கு, பாதுகாப்புச் செயலாளரின் கீழ் உள்ள புலனாய்வுப் பிரிவான அரச புலனாய்வுப் பிரிவினரே காரணம் என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமைத்துவம் ( lGP மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள்) உள்வரும் அனைத்து தகவல்களையும் தொடர்ந்து பகுப்பாய்வு செய்யும் ஒரு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் எனஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சாத்தியமான தாக்குதலுக்கும் அதிகாரிகளை தயார்படுத்துவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற பொலிஸாருக்கு ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது மே 9 ஆம் திகதி பிற்பகல் 11.50 மணி முதல் 1.00 மணி வரை பொலிஸ் மா அதிபருடன் அவருக்கு கீழ் பணிபுரிபவர்களிடமும், ஐஜிபிக்கு கீழ் பணிபுரிபவர்களிடமும் தொலைபேசி உரையாடல்களையும், ஐஜிபி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் தொலைபேசி உரையாடல்களையும் ஆராயுமாறு அறிவுறுத்தியுள்ளது. தொலைபேசி செய்திகள் TRCSL இலிருந்து பெறப்பட வேண்டும்.

சட்ட அமுலாக்க அதிகாரிகளின் இந்த கடமை மீறல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

சட்ட அமுலாக்கத்தின் முழு அமைப்பையும் விசாரணை செய்வதற்கும் பொறுப்பைக் கண்டறிந்து அத்தகைய அதிகாரிகளை தண்டனையுடன் கையாள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நியமிக்கப்படும் குழுவை ஜனாதிபதி வழிநடத்தலாம் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதி !

சட்ட மற்றும் முறையான வழிகளில் நாட்டிற்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நான்கு சக்கர அல்லது இரண்டு சக்கர மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

சட்ட ரீதியாக வங்கி முறை மூலம் பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வங்கி முறை மூலம் சட்டபூர்வமாகவும், முறையாகவும் பணம் அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இலங்கைக்கு பணம் அனுப்பிய தொழிலாளர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இவ்வாறு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.