02

02

“மக்கள் ஆணையில்லாத மிதக்கும் மனிதர்கள் சிலர் வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர்.“ – அனுரகுமார விசனம் !

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு – மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள் ஆணையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அப்படி நடந்தால், நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த அரசாங்கத்திற்கு சுமார் இரண்டு ஆண்டு காலத்தை வழங்கலாம்.

நாட்டின் தற்போதைய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யவில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கிடைத்த மக்கள் ஆணையின் மூலம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவரே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியும். அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மக்களின் ஆணைக்கு எதிரானது.  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மக்கள் ஆணை அவசியம்.

தற்போது மக்கள் ஆணையில்லாத மிதக்கும் மனிதர்கள் சிலர் வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

சீனாவின் உரத்தினாலேயே 69 இலட்சம் டொலரை இழப்பு !

சீனாவிலிருந்து உரத்தை இறக்குமதி செய்து நாட்டுக்கு 69 இலட்சம் டொலரை இழந்தமைக்கு முன்னாள் அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றது என பாராளுமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், ஆனால் ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அச்சம் காரணமாக அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறி னார்.

“தமிழருக்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுக்க அமெரிக்கா முயற்சி – கோட்டபாய விரட்டப்பட்டதன் பின்னணி தொடர்பில் வாசுதேவ !

வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி இராஜ்ஜியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் போராட்டங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கே ஈடுபட்டுள்ளார். அத்துடன் காலிமுகத்திடல் போராட்டத்திற்கும் இவரே ஒத்துழைப்பு வழங்கினார். அத்துடன் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவை ஜுலி சங்கே பதவியிலிருந்து விரட்டினார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஜூலி சங் தலையிடுகின்றார். அவ்வாறு தலையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதி முக்கியமானது அல்ல. சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை முன்வைக்கும். அந்த நிபந்தனைகளே இன்று நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய கடனை மறுசீரமைக்கும் வியடத்திற்குள்ளும் நிபந்தனை விதிக்கும் பல காரணங்கள் உள்ளன. அந்த நிபந்தனைகள் மிகவும் மோசமானது என கூறப்படுகின்றது.

வேதனை அளிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அதேபோன்று அந்த நிபந்தனைகள் மக்களின் எதிர்ப்பிற்கு உள்ளாகும் எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறெனின் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு வேதனை அளிக்கும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால், பாரிய மக்கள் எதிர்ப்பை மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்.

 

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இருக்கின்றார். இன்று அவர் கோர்பச்சோப் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். கோர்பச்சோப் சிறந்த ஒருவர். அவர் கமியூனிஸ்ட் சித்தார்ந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். ரஷ்யாவை உடைத்தார். தாராளவாதத்தை அறிமுகப்படுத்தினார். இலங்கைக்கும் கோர்பச்சோப் போன்ற ஒருவர் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஜுலி சங், சிறிலங்கா நிர்வாகம் குறித்து ஏன் அவர் தலையீடு செய்கின்றார்.

வடக்கு கிழக்கு பகுதிக்கு தனியான அரசாங்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் இலங்கையில் கோர்பச்சோப் போன்ற ஒருவர் தேவை என கூறுகின்றார்.

வடக்கு கிழக்கிற்கு தனியான அரசாங்கம் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அவரின் பிரதான நோக்கமாக மாறியுள்ளது. இலங்கையின் உள்ளக ஆட்சி குறித்து அவருக்கு உரிமை உள்ளதா? இல்லை. இது அமெரிக்காவின் பலவந்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை மத்திய வங்கி பணத்தை அச்சிடுவது பணவீக்கத்தை தூண்டுகிறது.”- IMF

இலங்கை மத்திய வங்கி பணத்தை அச்சிடுவது பணவீக்கத்தை தூண்டுவதாக இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தடுப்பதற்கு மத்திய வங்கியின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதும் பண நிதியளிப்பை நீக்குவதும் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் என அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

“மத்திய வங்கியின் முறையான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் மத்திய வங்கிச் சட்டம், இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகக் குறைவானது அல்ல, தாமதமும் இல்லை.

பொருளாதாரத்தை மீண்டும் வலுவான மற்றும் நீடித்த வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவும் விரிவான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை உறுதியளித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நிதியானது முகாமைத்துவம் மற்றும் நிறைவேற்று அதிகாரியின் ஒப்புதலின் பேரில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி இலங்கைப் பொருளாதாரத்தில் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், வளர்ச்சியை மீளப் பெறவும் உதவும் பிற மூலங்கள், பலதரப்பு கடன் வழங்குபவர்கள், இருதரப்பு ஓட்டங்கள் மற்றும் தனியார் ஓட்டங்கள் ஆகியவற்றிலிருந்து பிற நிதியுதவிகளை ஊக்குவிக்க உதவும்.

2.9 பில்லியன் அமெரிக்க டொலரில் முதல் பகுதியை வழங்கப்படுவதற்கு முன்னர், பணியாளர்-நிலை ஒப்பந்தம் மற்றும் IMF நிர்வாக சபைக்கு ஒரு திட்டத்தை முன்மொழிவதற்கு இடையே பல விடயங்கள் உள்ளன.

அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கியுள்ள பொருளாதார சீர்திருத்தத்தைத் தொடர அவர்கள் மேற்கொள்ளும் பல முன் நடவடிக்கைகள் உள்ளன என்றும், 2023 வரவு -செலவுத் திட்டத்தை மேற்கோள் காட்டி பொருளாதார கட்டமைப்பு மற்றும் இலக்குகளுடன் ஒத்துவதாக இலங்கை அறிவித்துள்ளது.

கடனளிப்பவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், இலங்கையின் நெருக்கடி கடுமையாக இருக்கும், மேலும் இலங்கையின் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் பொருளாதாரம் தொடர்ந்து சுருங்கும் என்றும் பீட்டர் ப்ரூயர் வலியுறுத்தியுள்ளார்.

 

IMF கடனை பெறுவதற்கு அரசியல் ஸ்திரமற்றதன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல் !

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவித்தாலும்,  கடன் மீள்கட்டமைப்பை  ​மேற்கொள்ளும்போது, அரசியல் ஸ்திரமற்றதன்மை பாதிப்பை ஏற்படுத்தும் என Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது.

IMF இலங்கையின் கடன் சுமையை ‘தாங்க முடியாதளவு’ உள்ளதென மதிப்பிட்டுள்ளது. எனவே கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முடிவு கடன் நிவாரணத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி புதிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில்  செப்டம்பர் 1 முதல் VAT இன் நிலையான விகிதத்தை 12% இலிருந்து 15% ஆக உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும்,  18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய வரி பதிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

”அரசாங்கத்திற்கு மூலதன செலவினை குறைக்க சில வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதன் தேவையற்ற செலவினம் மிக அதிகம். கூடுதல் வருவாயை அதிகரிப்பது நிதி ஒருங்கிணைப்பின் முக்கிய உந்துதலாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால், பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைத் தணிக்க சமூக செலவினங்களை மறு ஒதுக்கீடு செய்வதாக வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது”

சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்தாலும் அரசியல் ஸ்திரத்தன்மை IMF நிதி வழங்கலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுக்க கூடுதல் சமூகச் செலவுகள் போதுமானதாக இருக்காது எனவும் அரசாங்கத்தின் பொது ஆதரவு பலவீனமாகத் தோன்றுவதால், 2023-2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மீட்சியானது வலுவான நிதி ஒருங்கிணைப்பால் கட்டுப்படுத்தப்படும் எனவும் Fitch Ratings நிறுவனம் கூறியுள்ளது.

தமிழர் பகுதியில் பௌத்த வழிபாடுகளுக்கு முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் தடை – பௌத்த பிக்குகள் பொலிஸில் முறைப்பாடு !

ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள தொல்லியல் பிரதேசமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு  நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் முன்னாள் மாகாணசபை  உறுப்பினர்களான  துரைராசா ரவிகரன் ,கந்தையா சிவநேசன் ஆகியோர்  இடையூறாக இருப்பதாகவும், பலதடவைகள் தாம் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிக்கு இவர்கள்  இடையூறாக இருந்ததாக முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் குருந்தூர் மலையில் இருக்கின்ற  பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த சில தினங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட முல்லைத்தீவு பொலிஸார் 02 ஆம் திகதி முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வருகைதருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்படி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் கந்தையா சிவநேசன் ஆகியோர் இன்று (02)பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த நிலையில் அவர்களிடம் மிக நீண்டநேரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வாக்குமூலம் பெற்று கையொப்பம் வாங்கி கொண்டுள்ளனர்.

வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பொலிஸார் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில் ,

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த தேரர்களால் கபோக் கல்லினால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்றை வைப்பது  தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டமை தொடர்பில் தமது பௌத்த வழிபாடு தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மணலாறு சம்புமல்ஸ்கட விகாரையின் தேரர் கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் ஏனைய தேரர்களால் எமக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்ட்டுள்ளமைக்கு அமைவாக இன்று என்னிடம் ஏனைய மக்கள் பிரதிநிதிகளிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர் அதாவது ஜூன் 12 நடைபெற்ற போராட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொண்டார்கள் .

பொதுமக்கள் யாரெல்லாம் வந்தார்கள் அவர்களுடைய பெயர் விபரங்கள் வருகைதந்த ஊடகவியலாளர்களின்  பெயர் விபரங்கள் போன்றவற்றை கேட்டு நீண்ட விசாரணையை செய்த பொலிஸார் எம்மிடம் வாக்குமூலம் பதிந்து கொண்டதோடு கையொப்பமும் பெற்றுக்கொண்டார்கள். நான் நினைக்கிறேன் எம்மை நீதிமன்றில் நிறுத்த பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாங்கள் எவருக்கும் எந்தவித இடையூறும் இன்றி ஜனநாயக ரீதியில் அன்றையதினம் போராட்டம் மேற்கொண்டோம் . எனவே பொலிஸார் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டு சட்டத்தை மீறுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு செயற்பட்டிருந்தால் நாங்கள் இவ்வாறு போராடவேண்டி ஏற்பட்டிருக்காது . ஆனால் இன்று மாறாக ஜனநாயக ரீதியில் போராடிய எம்மை அழைத்து விசாரணை செய்துள்ளனர் என தெரிவித்தார் . நாடாளுமன்ற உறுப்பினர்கள் வினோ மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பொலிஸ் விசாரணைக்கு முல்லைத்தீவு போலீசாரால் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் இன்று வருகைதரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி – வீரகேசரி http://www.virakesari.lk/article/134924

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

பிள்ளைகளின் போஷாக்கு நிலையை உயர்த்துவது தொடர்பில், தான் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (01) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை மதிய உணவின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் உலர் உணவுகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட இந்த உணவுப்பொருட்கள் தொடர்பில் நேற்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ள உண்மைக்குப் புறம்பான விடயங்கள் குறித்து அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

´பிள்ளைகள் பாடசாலைக்கு வரும்போது, அவர்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை என்றால், அது ஒரு பிரச்சனை. பிச்சை எடுத்தாவது இந்நாட்டின் குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியுமானால் அதை நான் செய்வேன். சில பாடசாலைகளில் குழந்தைகளுக்கு இந்த மதிய உணவு வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இத்திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.´ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தகவலறியும் உரிமையை விரைவுபடுத்த புதிய அணுகுமுறை !

அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம், வட்ஸ்அப் இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றையும் குறிப்பிடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, விண்ணப்பதாரிகளைக் கோரியுள்ளது.

கடிதங்கள் மூலம் கோரப்படும் தகவல்களை அனுப்புவதில் ஏற்படக்கூடிய காலதாமதத்தைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கிடையில் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

பொதுமக்களின் வசதிக்காக செயற்படுவது அனைத்து அமைச்சுக்களினதும் அரச அதிகாரிகளினதும் தலையாய பொறுப்பாகும்.

எனவே எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், செயல் திறன்மிக்க சேவையை வழங்க வேண்டும். இதன் மூலம் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முறையான பதில் அளிக்கும் வேலைத்திட்டத்தை உருவாக்குவது கட்டாயம் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி செயலகத்திடம் இருந்து தகவல்களைக் கோரும் போதும் இந்த செயல்முறையைப் பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்) சிசிர ஹேனாதிர, தகவல் அதிகாரியாக செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்சன ஜயவர்தன பதில் அதிகாரியாக செயற்படுகின்றார்.

பின்வரும் இலக்கங்கள் ஊடாக தகவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

சிசிர ஹேனாதீர – ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்)
கைபேசி இலக்கம் – 0718132590
அலுவலக இலக்கம் – 0112354329 / 0112354354

கலாநிதி சுலக்சன ஜயவர்தன – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்
கைபேசி இலக்கம் – 0719994133 / 0711992354
அலுவலக இலக்கம் – 0112354329 / 0112354354
மின்னஞ்சல் முகவரி – addlsec.fsd@presidentsoffice.lk

60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகளும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் – ஆளுங்கட்சி

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மஹாதீர் முகமட் அல்லது லீ குவான் யூ போன்றவர்கள் என நினைத்து வேலை செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

65 வயது வரை இருந்த அரசுப் பணி ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பது நல்லது என்றும், இளைய தலைமுறையினரின் நலனுக்காக அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இது பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.