06

06

“அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கை.”- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளேன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை, தனது சொந்த நலனுக்கு அன்றி, அடுத்த தலைமுறைக்காகவே கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை வெறுக்கின்றனர். நாட்டின் எதிரணி விமர்சனங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. அதே வேளை இளைஞர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

சில தவறுகளினால் பெரும் நன்மை இழக்கப்பட்டது. 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பில் மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டும். தேசிய சபையொன்றையும் உருவாக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் உள்ளடங்கும் வகையில் இந்த சபை அமைய வேண்டும். இந்த வார இறுதிக்குள் தேசிய சபையை அமைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்ட   வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவும் புதிதாக சட்டம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை என்ற நாடு தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை. எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம்.

இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம்.” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

‘ஒன்றாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இவ்வருட மாநாட்டை ஐக்கிய தேசியக் கட்சி நடத்தியது.28 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி, அரச தலைமைத்துவத்துடன் தனது ஆண்டு நிறைவு விழாவை நடத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நடத்தப்படும், கட்சியின் முதலாவது விழா இது என்பதும் விசேட அம்சமாகும்.

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும், மற்றும் வகிக்காத அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் கலந்துகொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை – அரசாங்கம் அறிவிப்பு !

“ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் தீர்மானங்கள் இலங்கை அரசியலமைப்பிற்குப் புறம்பானதாக இருப்பின் ஏற்க தயாரில்லை.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதுகுறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் திங்கட்கிழமை (5) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார்.

அதன்போது அவர் கூறிய முக்கிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின்போது சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பல்தரப்புத்தொடர்புகளைப் பேணுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம்.

அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு எம்மால் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்கமுடியாது என்பதுடன் அதற்கான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைத் திரட்டுவதற்கான வெளியகப்பொறிமுறை குறித்து நாம் ஏற்கனவே எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன் எமது அந்த நிலைப்பாடு இப்போதும் தொடர்கின்றது.

அந்தவகையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் புதிய தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அதில் எமது அரசியலமைப்பிற்குப் புறம்பான விடயங்கள் காணப்படுமாயின் அதனை நாம் முழுமையாக எதிர்ப்பதுடன் அதற்கு ஏனைய சர்வதேச நாடுகளின் ஆதரவை நாடுவோம்.

கடந்த காலத்தில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதை முன்னிறுத்தி காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் நீண்டகாலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு உரியவாறு தீர்வுகாணும் நோக்கில் உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருக்கின்றார். போரின் விளைவாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை என்பது அனைத்துத்தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதும் உரியவாறான தீர்வைப்பெற்றுத்தரக்கூடியதுமான பொறிமுறையாக அமையவேண்டும். அதேபோன்று இது ஒரு முடிவைக் கண்டடைவதை நோக்காகக்கொண்டதே தவிர, யார்மீதும் பழிசுமத்துவதை நோக்காகக்கொண்டதல்ல.

ஆகவே சுமார் 13 வருடகாலமாகத் தீர்வின்றித் தொடரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக அனைத்துத்தரப்பினரும் ஏற்கக்கூடிய உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையை உருவாக்கி, அதனைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரிவித்தார்.

டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு சிறப்பு சலுகை – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு !

டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களான பொரளை ஓவல் வியூ வீடமைப்புத் திட்டத்தில் 608 வீடுகளும் அங்கொட லேக் ரெஸ்ட் திட்டத்தில் 500 வீடுகளும் உள்ளன.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்களை பயன்படுத்தி இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவுக்கு மனச்சாட்சி இருந்தால் சலுகைகளை பெறமாட்டார் – லக்ஷ்மன் கிரியெல்ல

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பதவி விலகிய நிலையில் சிறப்புரிமை பெற்று வாழ்வது தார்மீக ரீதியாக சரியானதா என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சரியான முறையில் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறாமல் ஓடிவிட்டார்.எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் அதிபருக்கான சிறப்புரிமைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகைகள் அனைத்தும் அரசாங்கம் வழங்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.