08

08

தனது 96வது வயதில் காலமானார் இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் !

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை மக்களில் இரண்டு வீதத்தினர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை – மனுஷ நாணயக்கார

நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவுடன் எவ்வித உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை மாத்திரமே எட்டியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் இடையே தெளிவான வித்தியாசம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இலங்கையில் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடு !

நாட்டின் சனத்தொகையில் சுமார் 50 வீதமானவர்கள் விற்றமின் D குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுபோவில போதனா வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணர் மருத்துவர் நிரஞ்சலா மீகொட விதான இதனைத் தெரிவித்துள்ளார்.

விற்றமின் D குறைபாட்டால் மக்கள் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களுக்கு உள்ளாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூரிய ஒளி மூலம் சாதாரண மக்கள் தங்களுக்குத் தேவையான விற்றமின் Dயைப் பெற முடியும் என்றும், இது மிகவும் எளிமையான முறையெனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சராசரி நபர் வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் சூரிய ஒளியில் இருப்பது முக்கியமானது எனவும் மருத்துவர் நிரஞ்சலா மீகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இரட்டிப்பாக அதிகரித்த சவப்பெட்டிகளின் விலை !

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

30 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிணப் பெட்டியின் விலை தற்போது 60 ஆயிரம் ரூபாவரை அதிகரித்துள்ளது. அத்துடன், அமரர் ஊர்தி வாடகை, மலர் வளையங்களின் விலை உட்பட சகல சேவைகளினதும் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

“யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் என்னவாயின..? இனச்சுத்திகரிப்பை புலிகளே செய்தனர்.”- முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  என  முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், \

ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.

தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிவான் அந்த நிர்மாணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கியிருந்தார். அதன் பின்னர் பொலிஸார் நகர்த்தல் பத்திரமொன்று மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடன் அந்த இடத்துக்குச் சென்று அவதானித்து அந்த வழக்கை நீக்கிக்கொண்டுள்ளனர்.

இதன்படி தொல்லியல் திணைக்களத்துக்கு அதனைப் பராமரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குருந்தூர் அசோக விகாரை என்பது 2 ஆயிரம் வருடங்கள் வரையில் பழமையான பௌத்த விகாரை தொகுதியாகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்துக்கு அமைய குருந்தூர் மலை உண்மைக் கதையை எழுதிய வரலாற்று இடமாகும். அங்கு அகழ்வுகளின்போது புத்தர் சிலைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு எந்த இடத்திலும் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று நடந்த சம்பவத்துக்கு வெட்கப்பட வேண்டும்.

இங்கு புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் பௌத்த பீடங்களின் நாயக்க தேரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் குண்டர் குழுக்களுடன் சென்று அதைக் குழப்பினர். மலர் ஒன்றை வைத்துக்கூட பூஜை செய்ய முடியாத வகையில் பிக்குகள் திரும்பியிருந்தனர்.

இந்த பௌத்த நாட்டில் பெளத்த சாசனத்தை அவமதிக்கும் வேலையைச் செய்தும், பெளத்தர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதை மௌனித்திருப்பதாகக் கருத வேண்டாம் என்று அன்று நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.

அன்று விடுதலைப்புலிகள் மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களையும் கொலை செய்யும் போதும் கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன. பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டுவந்துள்ளது. இது பௌத்த நாடாகும். சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார். நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை. அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும். இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் இந்த நாட்டில் அமைக்கப்படுகின்றன. அதற்கு பௌத்தர்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடுவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்குக்குப் போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேறு நாட்டில் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார். குருந்தூர் விகாரை பராமரிப்புக்காக இடைவிடாது செய்யும் இடையூறுகளை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மிகவும் விநயமாக அவர்களிடம் கேட்கின்றோம்.

இந்தப் பராமரிப்புப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் நிறுத்தாது முன்னெடுத்துச் செல்லும். அது நிறுத்தப்படாது. இதேவேளை, இந்த நடவடிக்கைகளால் இனச் சுத்திகரிப்பு செயற்பாடு நடக்கும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் இருந்தன. இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர். அங்கு இப்போது எவ்வளவு முஸ்லிம் குடும்பங்கள் இருக்கின்றன? உண்மையில் இனச் சுத்திகரிப்பு நடந்திருந்தால் சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடந்திருக்கும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குச் சரியான பாதைகளைக் காட்டுங்கள், இல்லாவிட்டால் இவர்களை விரட்டியடிங்கள் என்று நான் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கறுவாத் தடியால் சிறுமியை தாக்கி கொலை செய்து புதைத்த கொடூரம் !

இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் 7 வயது சிறுமி புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் தாய் வேறு ஒருவருடன் வசிக்கும் நிலையில், சிறுமி தாக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்த மாணிக்கக்கல் ஒன்று காணாமற்போனமைக்காக கறுவாத் தடியால் சிறுமி தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். எனினும், தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தாயாருடன் வசிக்கும்  நபரை மதுபான விற்பனை தொடர்பில் கைது செய்ய பொலிஸார் சென்றிருந்த போது, வீட்டிலிருந்த அனைவருடனும் குறித்த நபர் காட்டிற்குள் சென்று தலைமறைவாகியுள்ளார்.

ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 7 வயது சிறுமி, இதன்போது உயிரிழந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.