12

12

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் !

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்த பாலின வன்முறைகள் – ஜெனீவாவில் சுட்டிக்காட்டிய அயர்லாந்து!

இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அயர்லாந்து கவலையை வெளிட்டுள்ளது.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்போம் என்ற இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

அத்தோடு சர்வதேச சட்டத்திற்கு முழுமையாக இணங்கும் வரை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என அயர்லாந்து வலியுறுத்தியுள்ளது.

சிறைச்சாலையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு ஆதரவாக யாழிலும் உறவினர்கள் போராட்டம்!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களினுடைய உறவினர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகிறனர்.

கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செப்டம்பர் 06ம் திகதி முதல் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களினுடைய உறவினர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் உறவுகளை விடுதலை செய், சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை சிறையில் சிதைத்து விடாதே,பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு போன்ற வாசகங்களடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கியவாறு காணப்படுகின்றனர்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச பொறிமுறைகளுக்கு உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் – ஜெனீவா அமர்வில் மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல் !

“இலங்கைக்கு எதிரான சர்வதேச பொறிமுறைகளுக்கு உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்.” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் உரையாற்றிய மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப் வலியுறுத்தியுள்ளார்.

 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டங்களின்கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தண்டணை வழங்குவதற்கும் சர்வதேச சட்டவரம்பின் மூலமான வழிமுறைகளைப் பயன்படுத்தல் மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளுக்கு உறுப்புநாடுகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும்  நாடா அல்-நஷீஃப் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் 17 பக்க எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இன்றையதினம் ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பினால் அவ்வறிக்கையின் சாரம்சம் பேரவையில் வாசிக்கப்பட்டது.

அவ்வறிக்கையில் புதிதாகப் பதவியேற்றுக்கொண்ட ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்து பேசியமை வரவேற்கத்தக்க விடயமாகும். இருப்பினும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள் அரச சிவில் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை மற்றும் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை, பௌத்த தொல்பொருள் சின்னங்கள் தொடர்பில் ஆராய்வதாகக்கூறி மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டோர், முன்னாள் போராளிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் கண்காணிப்புக்கள் மற்றும் அடக்குமுறைகள், வட, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் என்பன தொடர்ந்தும் தீவிர கரிசனைக்குரிய விடயங்களாகவே இருந்துவருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்புக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வே முடிவு – ஜெனீவாவில் இந்தியா !

இலங்கையின், பொருளாதார மீட்சிக்கு அதிகாரப் பகிர்வும், இனப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வும் தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த முதல் நாள் அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதியே இவ்வாறு வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

மேலும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தவும் இந்தியா, இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதிக்காக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்த போதிலும், மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாகவும் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை பந்தாடி ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக பானுக ராஜபக்ஷ 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 03ஆவது அரைச்சதம் இதுவாகும். இவர் 45 பந்துகளில் 06 நான்கு ஓட்டங்கள் 03 ஆறு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அத்துடன், வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் 21 பந்துகளில் 05 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் 21 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்கள் அடங்களாக இவ்வாறு 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

போட்டியின் முதல் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பெத்தும் நிஸ்ஸங்க 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 4ஆவது இடத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்த போது அமைதியாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணித்தலைவர் தசுன் சானக்க 02 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், வனிந்து ஹசரங்க களமிறங்க பானுக ராஜபக்ஷவுடன் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்துவதற்கு உருதுணையாக இருந்தார். 6ஆவது விக்கெட்டுக்கான இவர்களின் இணைப்பாட்டத்தில் 58 ஓட்டங்களை அணிக்காக இருவரும் பெற்றுக்கொடுத்தனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 36 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்து சென்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் 04 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஷதாப் கான் 04 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இப்திகார் ஹகமட் 03 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மொஹம்மட் ஹஸ்னைன் 04 ஓவர்கள் பந்துவீசி 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. நசீம் ஷா 04 ஓவர்கள் பந்துவீசி 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 10 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 171 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக மொஹம்மட் ரிஸ்வான் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இவர் பெற்ற 16ஆவது அரைச்சதம் இதுவாகும். இவர் 47 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், இப்திகார் அஹமட் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர் 31 பந்துகளில் 02 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக இவ்வாறு 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மொஹம்மட் நவாஸ் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மேலும் பாபர் அசாம் 5 ஓட்டங்களுக்கும், பகார் ஜமான் ஓட்டங்கள் எதனை பெறாமலும் ஆட்டமிழந்தனர். ஷதாப் கான் 8 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனினும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அசிப் அலி ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார். மொஹம்மட் ஹஸ்னைன் 08 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின், தில்ஷான் மதுஷங்க 03 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்றவில்லை. மகீஸ் தீக்ஷன 04 ஓவர்கள் பந்துவீசி 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். ப்ரமோத் மதுஷான் 04 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். வனிந்து ஹசரங்க 04 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். சாமிக்க கருணாரத்ன 04 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக14 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது ஒருபக்கமிருக்க கடந்த 5வருடங்களுக்கும் மேலாக பல போட்டித்தொடர்களில் ஆரம்ப போட்டிகளிலேயே தோற்று வெளியேறியிருந்த இலங்கை அணி மீது தொடரடவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணமிருந்தன. இந்த நிலையில் மீண்டும் இலங்கை அணியை பலமாக கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. இந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்கு பின்பு இலங்கை அணி மீண்டும் பலமுள்ள அணியாக உருவெடுத்திருப்பதையிட்டு இலங்கை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடிக்கொண்அருக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்த்கது.