16

16

455 ஊடகவியலாளர்கள் கடமையின் போது கொல்லப்பட்டுள்ளனர் – UNESCO

நேற்று (15.09.202)சர்வதேச ஜனநாயக தினம். ஜனநாயகத்திற்கான ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதே இந்த வருடத்தின் தொனிப்பொருளாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் உலக சனத்தொகையில் 85 வீதமானோர், ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டதாக UNESCO குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

சட்ட துஷ்பிரயோகம், இலத்திரனியல் பாதுகாப்பு உத்திகள், வெறுப்பூட்டும் பேச்சுகள், நாளாந்தம் ஊடகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்குகள், உளவு பார்த்தல் மூலம் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக UNESCO சுட்டிக்காட்டியுள்ளது.

UNESCO தரவுகளின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 455 ஊடகவியலாளர்கள் கடமையின் போது அல்லது கடமை நிமித்தம் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் முடிந்து விடவில்லை – தயாசிறி ஜயசேகர

போராட்டம் முடிந்துவிட்டதாக யாராவது நினைத்தால் அது முற்றிலும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் அமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் இதைவிட பெரிய போராட்டமாக வெடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கான வேலைத்திட்டம் நாட்டிலோ, நிர்வாக அமைப்பிலோ இல்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வியை சீர்த்திருத்தவோ, திறமையுடன் கூடிய பரிபூரண சக்தியை உருவாக்கவோ அரசாங்கம் எந்த எதிர்பார்ப்பும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் திருடர்கள் அல்ல என்றும் ஒரு சிலரின் திருட்டுத்தனத்தால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் குற்றம் சாட்டுவதில் பயனில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் – விகாராதிபதிக்கு விளக்கமறியல் !

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (16) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள் கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் அடிப்படையில் செப்டம்பர் 13 ஆம் திகதி கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதியாக ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் என்றழைக்கப்படும் பிரதான பௌத்த மதகுரு அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் விசேட பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இதனடிப்படையில் கல்முனை நீதிமன்ற நீதிவான் கைதான சந்தேக நபரை கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (16) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கை இதுவரை மன்றிற்கு கிடைக்கப்பெறாமை சம்பவம் தொடர்பிலான விசாரணை பூரணப்படுத்தப்படாமை ஆகியவற்றை கருத்திற் கொண்டு சந்தேக நபரான தேரரின் பிணை கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வடக்கில் பலரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது !

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிப்போரை வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக இன்று (16) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தனியார் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் நபர் ஒருவர் கிளிநொச்சி, பூநகரி பகுதியைச் சேர்ந்த  ஒரு நபரை வெளிநாடு அனுப்புவதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்பரவரி மாதம் 10 ஆம் திகதி 12 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

அதனை அண்மித்த காலப்பகுயில் கிளிநொச்சி, பன்னங்கண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமும் வெளிநாடு அனுப்புவதாக தெரிவித்து 30 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். வெளிநாடு அனுப்புவதாக குறித்த இருவரிடமும் பணத்தைப் பெற்ற போதும் அவர்கள் இருவரையும் வெளிநாடு அனுப்பாது, பணத்தையும் வழங்காது குறித்த நபர் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக பாதிக்கப்பட்ட இருவரும் கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில், வவுனியாவைச் சேர்ந்த ஒருவரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி குறித்த நபரால் 32 இலட்சம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது. அவர்களையும் வெளிநாடு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து, பணத்தை பெற்றுக் கொண்ட நபர் ஒளித்து திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வரும் 49 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்வரை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“3 வயது குழந்தையை எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் அலிசப்ரி இருக்கின்றார். ” – இரா.சாணக்கியன்

“3 வயது குழந்தையை எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் அலிசப்ரி இருக்கின்றார். ” என அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மகசின் சிறைச் சாலையில் உண்ணாவிரதமிருக்கு கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (16) இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதபோராட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி. அமைப்பின்  தலைவருக்கு சிலைவைத்து மாலை போடுவதற்கு அரசு அனுமதித்துள்ளது. ஆனால் சிங்களவர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு சட்டம் தமிழர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் ஒரு சட்டம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற உறவுகளுக்கு ஆதரவாக நாங்களும் மட்டக்களப்பிலே அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

2018 க்கு பிற்பாடு கைது செய்யப்பட்ட உறவுகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கப்படவேண்டும். அதேநேரத்தில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் ஊடாக தொடர்ச்சியாக கைதுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவே அந்த கைதுகளை செய்வதற்கான இந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் இனி இருக்க கூடாது . இந்த அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கடந்த காலத்தில் 3 ஜனாதிபதிகள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளனர். மைத்திரிபால சிறிசேன றோயல் பாக்கில் மாடிவீட்டு ஒன்றில் தனது காதலியின் மண்டையை அடித்து உடைத்து கொலை செய்யப்பட்டு சிறைக்கு சென்றவரை விடுதலை செய்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்ச உயிர் நீதிமன்றில் குற்றவாளி என அறிவித்து சிறையில் அடைக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியே விடப்பட்டு தேசிய வீடமைப்பு தலைவராக நியமித்தார்.

அதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்ததும் ரஞ்சன் ராமநாயக்கா விடுவிக்கப்பட்டார். எனவே சிங்களவர்களை பொறுத்தவரையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்வது இலகுவானது உள்ளது.

ஆனால் இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அவரிடம் பேசவேண்டும் இவரிடம் பேச வேண்டும் என தெரிவிக்கின்றனர். தற்போதைய பிரதமர் தினேஸ்குணவர்த்தன, அலிசப்ரி,  நாமல் ராஜபக்ச கடந்த ஆட்சியின் போது பெயர்பட்டியலை தருமாறு கோரி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டியவர்கள் இந்த அரசியல் கைதிகள் வாழ்கையை இழந்து குடும்பத்தை இழந்து அவர்களின் தந்தை பிள்ளை மனைவியை இழந்து சிறையில் வாடுகின்றனர் என்றனர் ஆனால் ஆட்சி வந்து போய்விட்டது இன்னும் விடுதலை இல்லை.

ஜ.நா கூட்டத் தொடரிலே கலந்துகொண்டுள்ள வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி பொருளாதார குற்றங்கள் இல்லை அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

இந்த பொருளாதார குற்றங்களுக்கு அலி சப்ரியும் பொறுப்பானவர். இவர் அந்த நேரத்தில் நீதி அமைச்சராக இருந்த இவர் 20 திருத்த சட்டமும் வேணும் என கொண்டுவந்த இவர் இன்று வெளிவிவகார அமைச்சராக இருக்கின்றார்.

இவர் இலங்கையை பிரதி நிதிப்படுத்துவதாக சென்றுள்ளாரா.? கோட்டாபாய ராஜபக்சவின் சட்டத்தரணி என்ற அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளாரா? என்ற கேள்வி இருக்கின்றது இன்று பொருளாதார நெருக்கடியினால் மக்கள் நாட்டிலே வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .  இதற்கு காரணம் ராஜபக்ச குடும்பமே  2022  மார்ச் மாதத்தில் இருந்து பொருளாதாரத்தை இவர்கள் அழித்ததற்கான ஆதாரம் இருக்கின்றது. போர்குற்றங்களை மூடிமறைத்தது போன்று இந்த பொருளாதார குற்றங்களை மூடி மறைக்க முடியாது.

எனவே  போர்குற்றம் போலவே பொருளாதார குற்றம் செய்துள்ளது எனவே இதற்கு பொறுப்பு கூறவேண்டிய இவர்கள் தப்பி ஓடமுடியாது இதனை அலி சப்ரி உணரவேண்டும். அதேவேளை அலி சப்ரி ஒரு இஸ்லாமியர் இருந்தும் கொரோனவினால் உயிரிழந்த இவருடைய இனத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையை கூட எரித்தவர்களை காப்பாற்ற இன்று ஜெனீவாவில் இருக்கின்றார்.

இன்று ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சியில் கூட பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்றோம். வட-கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை தருமாறு கேட்டுக் கூட இந்த நாட்டில் இருக்கும்  பெண்களின் மானத்தை கூட கரிசனை எடுக்காது கலாச்சார சீர்கேட்டை கரிசனையில் எடுக்காது தமிழர்களின் முதலீடு வேண்டாம் அரசியல் தீர்வு தரமாட்டோம் என்று சொல்லுகின்ற அரசாங்கம் தான் இந்த அரசாங்கம் என்றார்.

டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெறும் 25,000 அரச உத்தியோகத்தர்கள் !

டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும்  ஓய்வு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்  மாயதுன்னே தெரிவித்தார்.

இதனடிப்படையில்,  டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 60 வயதை பூர்த்தி செய்யும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணி ஓய்வு விண்ணப்பங்களை நிறுவன தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை நேற்று முன்தினம் அமைச்சின் செயலாளர் மாயாதுன்னேவின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது.

இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில், பணி மூப்பு மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்காத வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு  ஊதியமில்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கையும் நேற்று (15) வெளியிடப்பட்டது.

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு !

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 பேர் கொண்ட குறித்த குழாமில் தசுன் சானக்க தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், தனுஸ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மகீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, தில்ஸான் மதுஸங்க, ப்ரமோத் மதுஷான், அசேன் பண்டார, பிரவீன் ஜயவிக்ரம, தினேஷ் சந்திமால், பினுர பெர்னாண்டோ மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் முறைப்பாடு – முன்னாள் ஜனாதிபதிக்கு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பாக ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தனிப்பட்ட முறைப்பாட்டின் சந்தேக நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிட நீதவான் திலின கமகே தீர்மானித்தார்.

“இனியும் நேரத்தை வீணடிக்காதீர்கள். போர்க்குற்றவாளிகளை விரைந்து தண்டியுங்கள்.”- ஜெனீவாவில் ஆ.லீலாதேவி

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, போர் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி ஜெனிவாவில் தெரிவித்துள்ளார்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் ‘ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்டப் பாதுகாப்பின் தோல்வி’ என்ற தலைப்பில் ஜெனிவாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

சர்வதேச தரப்பு இனியும் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். இறுதி யுத்தத்தில் பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள், உறவுகள் குறித்து அவர்கள் இன்னமும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் தமக்கான நாட்களை எண்ணிக்கொண்டுள்ள பெற்றோருக்கு செய்யக்கூடியது இதுவே.

இறுதி யுத்தத்தில் 140 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாம் இழந்துள்ளோம், இவர்களது உறவினர்கள் இறக்க முன்னர் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாம் சர்வதேச சமூகத்தை நாடுகிறோம், உண்மைகளை கண்டறிய உள்ளக பொறிமுறை உருவாக்கப்படும் என கூறி பல வருடங்கள் கடந்தும், கலப்பு நீதிமன்றங்களை கூட அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழர் பிரதேசங்களின் சனப்பரம்பலை அழிக்கும் விதமான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளன. மறுபுறம் இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்புகள் இன்று வரை தொடர்கின்றன.

அனைத்து மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை வாய்ப்பு – பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாக சபை புதிய முயற்சி !

இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவன் வேலை செய்யும் ஒரு மணித்தியாலத்திற்கு ஊதியமாக 350 ரூபா செலுத்தப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும், மாணவர்களுக்கு இந்த தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டம் குறித்து மாணவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை சுமார் 170 மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது.