26

26

தொடரும் பொருளாதார நெருக்கடி – ஒரு வேளை உணவுக்கு திண்டாடும் பழங்குடி மக்கள் !

பிபில ரதுகல கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் இன்று கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் தலைவர் சுதா வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில் தனது மக்கள் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இக்கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், இளைஞர்கள் எவருக்கும் வேலையும் இல்லை, கூலி வேலை கூட இல்லை என்றும் அதனால் ஒரு வேளை உணவைக் கூட தேட முடியாத நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய உணவுப் பற்றாக்குறையால் சிறுவர்கள் பாடசாலை செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சில குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

உரம் மற்றும் நிலப்பிரச்சினை ஆதிவாசி மக்கள் விவசாயம் செய்வதை கடுமையாக பாதித்துள்ளதால் விவசாய நிலங்கள் அனைத்தும் வறண்டு வருவதாகவும் பழங்குடியினத் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.

வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பலாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி இந்தக் கும்பல் தீ வைத்துள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் சேதம் விளைவித்து விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது பௌத்தர்களின் பிரதேசம் – கொழும்பில் பிக்குமார் ஆர்ப்பாட்டம் !

குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என கொழும்பில் பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் குறித்த ஆர்ப்பாட்டம் செயற்படுத்தபட்டுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கப்பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி புத்தசாசன அமைச்சினை நோக்கி செல்கிறது.

குருந்தூர்மலை பிரதேசம் தமிழர்களுடையது அல்ல, அது முழுமையாக பௌத்தர்களின் பிரதேசம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் தான் தமது சுயலாப அரசியலுக்காக பிரச்சினையை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பௌத்தர்கள் மற்றும் பிக்குமார் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அனைவரும் சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும்.” – மஹிந்த தேசப்பிரிய

“அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும்.” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது மக்களின் அடிப்படை உரிமை மீறல் என்பதோடு , அது பாரிய தவறுமாகும். இன்று அனைத்து மாகாணசபைகளையும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் தனித்து நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர்.

மாகாண ஆளுனர்கள் இன்றும் பதவியில் உள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் இன்றி இவர்கள் தனித்து மாகாணசபைகளை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 9 ஆளுனர்களும் , அந்தந்த மாகாணங்களில் முழுமையாக நிதி முகாமைத்துவத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.

எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி நடத்திச் செல்வதானது பாவமாகும். அது தவறுமாகும். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் இன்றி உள்ளுராட்சி சபைகளும், மாகாணசபைகளும் நிர்வகிக்கப்படுகின்றமை மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும் என்று வழக்கொன்றில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாணசபைகளை நிர்வகித்துச் செல்வது முற்றிலும் சடத்திற்கு முரணானது. மக்களின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் , முறைமைகளிலும் அரசியல்வாதிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

அனைவரும் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும். சவப்பெட்டியிலிருந்து கொண்டும் அரசியலும் ஜனநாயகமும் பேச வேண்டும். இவற்றை குரல் பதிவு செய்து நான் இறந்த பின்னர் அதனை ஒலிபரப்பச் செய்வேன் என்றார்.

இரகசிய முகநூல் போதைப்பொருள் விருந்து – 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு !

கம்பளை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் உள்ள இடத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்தொன்றை மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகள் குழு சோதனையிட்டுள்ளது.

கலால் திணைக்களத்தின் தகவலின்படி, இந்த விருந்தில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்ட இளைஞர்களில், 50 க்கும் மேற்பட்டோர் சிறுவர்களான பாடசாலை மாணவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த விருந்தில் 14-18 வயதுக்குட்பட்ட பாடசாலைமாணவர்கள் பங்கேற்றதாக தெரிவித்த கலால் துறை அதிகாரிகள், அந்த பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான உதவி கலால் ஆணையாளர் உபுல் செனவிரத்னவுக்கு கிடைத்த தகவலின்படி, முகநூல் குழுவுடன் கலால் அதிகாரிகளையும் விருந்தில் இணைத்து தகவல்களைப் பெற்றுள்ளார்.

முகநூல் விருந்து நேற்று முன்தினம் (24) பிற்பகல் 02:00 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இதன்போது இரு இளம் கலால் அதிகாரிகளும் இரண்டு பெண் அதிகாரிகளும் காதலர்கள் போல் நடித்து விருந்தில் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான உதவி கலால் ஆணையாளர் உபுல் செனவிரத்னவின் பணிப்புரையின் பேரில், கம்பளை, ஹட்டன் மற்றும் நுவரெலியா கலால் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்புடன் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, ​​பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் பல்வேறு போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை பயன்படுத்தியதாகவும், மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த 12 பேர் கம்பளை மேலதிக நீதவான் அஜித் உடுகம முன்னிலையில் நேற்று (25) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த குழுவினரை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.