October

October

வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ள யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை !

நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒருங்கமைப்பில் யாழில் நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை   நடைபெற்றது.

இந்த நடமாடும் சேவையானது யாழ். மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் இடம்பெறுகிறது. இதனை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்துள்ளார்.

இச்சேவையில் நீதி அமைச்சர், நீதி அமைச்சரின் செயலாளர் வசந்த பெரேரா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் சமுர்த்தியசிங்க, யாழ் மாவட்ட செயலர் க.மகேசன், மேலதிக செயலாளர் ம.பிரதீபன், காணி மேலதிக செயலாளர் செ.முரளிதரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், ஏனைய அமைச்சுக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல், இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள், வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து, உயிரிழப்பு, காயத்துக்கான நட்டஈடினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள முடியும்.

குறித்த நடமாடும் சேவை நிகழ்வில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்றியுள்ளன.

குறித்த நடமாடும் சேவையானது நாளை செவ்வாய்க்கிழமை (நவ 1) கிளிநொச்சி திறன் விருத்தி மத்திய நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியாவை சேர்ந்தவர்களும், கிளிநொச்சியில் நாளை நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் தமது மேற்படி தேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் பாலம் இடிந்து வீழ்ந்த விவகாரம் – 125 பேரை மட்டுமே தாங்கக் கூடிய பாலத்தில் 500 பேருக்கு அனுமதி !

குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

மாநில காவல் துறை இந்த விபத்து தொடர்பில் கூறியதாவது: “மோர்பியில் நிகழ்ந்த துயரச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள், பாலத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்த பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 233 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் நடைபாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. முன்னதாக பாலத்தை சீரமைப்பதற்காக 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய மதிப்பு ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய Fitness Certificate பெறப்படவில்லை என்று மோர்பி நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 500 பேர் பாலத்தின் மீது இருந்துள்ளனர். பாலத்தின் மீது இருந்தவாறு மக்கள் பலரும் சாத் பூஜை செய்துள்ளனர்.

அதேநேரத்தில், பாலத்தின் மீது ஏறிய இளைஞர்கள் சிலர், வேண்டுமென்றே பாலத்தை உலுக்கி சேட்டையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி என்பவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம், புகார் அளித்ததாகவும் எனினும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியள்ளார்.

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட முக்கிய பதவிகளில் இந்திய வம்சாவளியினர் !

உலகின் 15நாடுளில் 200க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மிக முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், பிரேசில், கனடா, நார்வே உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அங்கு உயர்பதவி வகிக்கின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரை இதில் சேர்க்கலாம். அண்மையில் பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்தப் பட்டியலில் இடம்பெற்றார். இவர் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன். சவுத்தாம்படனில் 1980-ல் பிறந்தவர் ரிஷி சுனக். இவரது தாத்தா, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்தவர்.

இதேபோல் கயானா நாட்டின் முதலாவது முஸ்லிம் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர் இர்பான் அலி. இவர் 2020 ஆகஸ்டில் அதிபர் பொறுப்பை ஏற்றார். வெஸ்ட் கோஸ்ட் டெமார்ரா பகுதியில் 1980 ஏப்ரல் மாதம் பிறந்த இவர், இந்தோ-கயானிஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

2015-ல் போர்சுக்கல் பிரதமராக பொறுப்பேற்றவர் அன்டோனியா கோஸ்டா. இவர் 1961-ல் லிஸ்பனில் பிறந்தார். இவரது தாத்தா-பாட்டி கோவாவைச் சேர்ந்தவர்கள்.

மொரீஷியஸ் பிரதமராக 2017-ல் பொறுப்பேற்றவர் பிரவிந்த் ஜக்நாத். இவர் 1961-ல் மொரீஷியஸின் வாகோஸ்-பீனிக்ஸ் பகுதியில் இந்துக் குடும்பத்தில் பிறந்தார். மொரீஷியஸ் அதிபராக 2019-ல்பொறுப்பேற்ற பிரித்விராஜ் சிங் ரூபன் 1959-ல் இந்திய ஆர்ய சமாஜி இந்து குடும்பத்தில் குவாட்ரே போர்ன்ஸ் என்ற பகுதியில் பிறந்தார்.

சூரிநாம் நாட்டின் அதிரபராக 2020-ல்பதவியேற்ற சந்திரிகா பிரசாத் சன்டோகி,1959-ல் லெலிடார்ப் என்ற பகுதியில் இந்தோ-சூரிநாமிஸ் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.

கயானாவின் துணை அதிபராக 1999 முதல் 2011 வரை பதவி வகித்த பாரத் ஜக்தேவ், முந்தைய பிரிட்டிஷ் கயானா பகுதியிலுள்ள டெமார்ரா-மஹாய்கா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா ராம் ஜியாவன், 1912-ல் உத்தரபிரதேசத்தில் இருந்து பிரிட்டிஷ் கயானாவுக்கு குடிபெயர்ந்தவர்.

அயர்லாந்து அரசின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர் லியா வராட்கர். 1979-ல் டப்ளினின் பிறந்த வராட்கரின் தந்தை மும்பையைச் சேர்ந்தவர். அதேபோல் சுமார் 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் 55 இந்திய வம்சாவளியினர் கேபினட் அமைச்சர் பதவி வகிக்கின்றனர். மேலும் 63 இந்திய வம்சாவளியினர் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகவும், பெடரல் அவை உறுப்பினர்களாவும் உள்ளனர். 12 பேர் தூதர்களாக பணிபுரிகின்றனர்.

மொரீஷியஸ், ஃபிஜி, சிங்கப்பூர், சூரிநாம் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளனர்.

ஃபிஜி, கயானா, சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய 4 நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பலர் மத்திய வங்கி நிர்வாக தலைவர்களாகவும் இருந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகர் நீரா டாண்டன் உள்ளிட்ட 112 இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளில் உள்ளனர்.

இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வருகிறது 21ஆவது அரசியலமைப்பு !

இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று தனது கையொப்பத்தையிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி இந்த சட்டத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இலங்கை அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூல வரைவை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்திருந்தது.

எனினும், அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென உயர்நீதிமன்றம் வியாக்கியானத்தில் அறிவித்தது. இந்த நிலையில் அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர் இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கமைய நீதி அமைச்சர் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 20 மற்றும் 21ஆம் திகதிகளில் குறித்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. அதில் இரண்டாவது மதிப்பீட்டின் இறுதியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குழுநிலையில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 174 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்தத் திருத்தச் சட்டமூலம் 22ஆவது அரசியலமைப்பு திருத்தமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதிலும், அது 21ஆம் திருத்தமாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சான்றுபடுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தகக்து.

விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்ட ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் !

இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுமார் ஆறு மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் ஒரு வாரத்திற்குள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனையடுத்து நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வழங்கிய பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, கஞ்சா, ஹெரோயின், ஐஸ், சிகரெட், கசிப்பு, கோடா உள்ளிட்ட பல போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில், கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவும் காணப்பட்டுள்ளது. இவேளை போதைப்பொருட்களுடன் 31 சந்தேக நபர்களை கைது செய்த  இராணுவத்தினர், காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்.

“88 – 89 ஆம் ஆண்டு காலகட்டங்களை போல இன்னமும் தடிகள், வாள்கள், கத்திகளுடன் தான் ஜே.வி.பி.” – நாமல் ராஜபக்ச விசனம் !

மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட கடந்தகால மனோநிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணி தற்போதும் இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

மக்கள் விடுதலை முன்னணியில் ஒரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் எண்ணியிருந்த போதிலும் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அவர்கள் செயற்பட்ட விதமானது 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலகட்டங்களின் அவர்களின் நடத்தையை மீண்டும் பிரதிபலிக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி, தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாக நான் எண்ணியிருந்தேன்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் ஜே.வி.பி.யும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என எண்ணிய போதிலும் அவ்வாறு தெரியவில்லை.

இதே நேரம்  நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட சில நடைமுறையை நடைமுறைப்படுத்தி வருகிறார். மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் தனது சொந்தக் கொள்கைகளுக்கும் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிய ஜனாதிபதி முயற்சிக்கிறார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறந்த ஆதரவை வழங்குவோம். அரசியல் கொள்கை என்று வரும்போது நாம் தனித்தனியே நின்று செயற்படுவோம்.

எனினும் ஜனாதிபதியும் நானும் நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் கொள்கைகளை கொண்டு வர முயற்சிக்கிறோம் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

டயானா கமகே போன்ற வெளிநாட்டவர் நாடாளுமன்றத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது – உதய கம்மன்பில

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் வெளிநாட்டவர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை பெற்றிருப்பதைவிட வெளிநாட்டவர் நாடாளுமன்றத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் வெளிநாட்டு டொலரை இலங்கைக்கு கொண்டு வர கஞ்சா செடி வளர்ப்பு , களியாட்ட விடுதிகளின் அதிகரிப்பு போன்ற பல விடயங்களை தொடர்ந்தும் வலியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“விஜயதாச ராஜபக்ஷவே வெளியேறு ” – மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் !

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது.

இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்து கொண்ட நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே தீடீரென மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்துக்குள் உள்நுழைந்தனர்.

நீதி அமைச்சர் அங்கு இல்லாத நிலையிலும் நடமாடும் செயலமர்வு இடம்பெற்றது. பொலிஸார் போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு முயற்சித்த போதும் அது பலனளிக்காத நிலையில் ஒரு மணி நேரம் வரை மாவட்ட செயலக கேட்போர்கூடத்துக்குள் கோஷம் எழுப்பிய போராட்டகாரர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

பின்னதாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நடமாடும் செயலமர்வு அலுவலகத்தின் முன்பாகவும் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒஎம்பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்ஷவே வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அதன் போது, போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப்பொருள் பாவனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் , பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் , பெரும்பாலான குற்றங்கள் போதைப்பொருள் பாவனையால் செய்யப்படுவதாகவும், அதனால் போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிகழ்வில் , மத குருமார்கள், யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விஜித குணரட்ன , பாடசாலை அதிபர் , ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பழுதுபார்க்கப்பட்டு மீள திறக்கப்பட்ட பாலம் இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி !

குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26-ந்திகதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக 60 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.  இந்த பணியில் தேசிய பேரீடர் மீட்பு குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  ஆற்றுத் தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாலைவரை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே  மீட்புப் பணிகளை ஆய்வு செய்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கே ராணுவ டாக்டர்கள் குழு மற்றும் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.